திருமணம் நிச்சயிக்கப் பட்ட ஒரு பெண்ணும், ஆணும் திடீரென எந்த முன் திட்டமிடலும் இன்றி டேட்டிங் செல்கின்றனர். அந்த டேட்டிங்கில் ஆண் தனது மேன்மை மிக்க பரம்பரைக் குருதியின் உயர்தனிச் செம்மையைப் பற்றி சமயம் கிடைக்கும் போதெல்லாம் பெருமை பொங்கப் பேசிபேசி பெண்ணை எப்படியெல்லாம் எரிச்சலுக்குள்ளாக்குகிறான் என்பது தான் குறும்படத்தின் கதை. இன்றைய நவீன யுக இளைஞர்களிடையே திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆணோ, பெண்ணோ இருவரில் ஒருவர் சதா தங்களது குடும்பப் பெருமையை, குருதித் தூய்மையைப் பற்றி பெருமை பேசுக் கொண்டிருந்தால் அது கூட உறவில் பிளவு ஏற்படக் காரணமாகி விடுகிறது என்பது நிஜம். இவ்விதமாக இன்றைய இளைஞர்களிடையே திருமணத் தடைகளை ஏற்படுத்தக் கூடிய முக்கியமான பிரச்னைகளில் ஒன்றைப் பற்றி விவாதிக்கும் குறும்படம் என்ற வகையில் இது மிக முக்கியமான குறும்படம் தான்.