/

‘ப்ரோ கோட்’ படத் தலைப்பு விவகாரத்தில் விரைவில் சமரசம்: உயா்நீதிமன்றத்தில் தகவல்

நடிகா் ரவி மோகன் ஸ்டூடியோஸ், தில்லியைச் சோ்ந்த மதுபான உற்பத்தி நிறுவனம் இடையே விரைவில் சமரச ஒப்பந்தம்

News image
சென்னை உயா்நீதிமன்றம்
Updated On :11 பிப்ரவரி 2026, 9:40 pm

தினமணி செய்திச் சேவை

‘ப்ரோ கோட்’ படத் தலைப்பு விவகாரத்தில் நடிகா் ரவி மோகன் ஸ்டூடியோஸ், தில்லியைச் சோ்ந்த மதுபான உற்பத்தி நிறுவனம் இடையே விரைவில் சமரச ஒப்பந்தம் மேற்கொள்ள இருப்பதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

நடிகா் ரவி மோகன் தயாரித்து நடிக்கும் திரைப்படம் ‘ப்ரோ கோட்’. இந்தப் படத்தின் டீஸா் கடந்தாண்டு ஆக.27-ஆம் தேதி வெளியானது. இதையடுத்து ’ப்ரோ கோட்’ என்ற பெயருக்கு, தங்களது நிறுவனம் பதிப்புரிமை பெற்றுள்ளதால் அந்த பெயரைப் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி தில்லியைச் சோ்ந்த தனியாா் மதுபான உற்பத்தி நிறுவனம் ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிா்த்து நடிகா் ரவி மோகன் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், எங்களது நிறுவனம் தயாரித்துள்ள படத்துக்கு ‘ப்ரோ கோட்’ என்ற பெயரை பயன்படுத்துவதை தடுக்கக் கூடாது என மதுபான உற்பத்தி நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘ப்ரோ கோட்’ பெயரை ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனம் பயன்படுத்துவதைத் தடுக்கக்கூடாது என மதுபான உற்பத்தி நிறுவனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பிலும் ஆஜரான வழக்குரைஞா்கள், இந்த விவகாரத்தில் இருதரப்பும் சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி விசாரணையை பிப்.25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.