/

பியூர் சினிமா புத்தகக் கடை

சென்னை வடபழனி மேற்கு சிவன் கோவில் தெருவில், புதிதாக பியூர் சினிமா புத்தகக் கடை திறக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:39 pm

உமா ஷக்தி.

சென்னை வடபழனி மேற்கு சிவன் கோவில் தெருவில், புதிதாக பியூர் சினிமா புத்தகக் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடையை இயக்குனர் மிஷ்கின் திறந்து வைத்தார்.

Story image

இந்தக் கடைக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. அப்படி என்ன சிறப்பு என்கிறீர்களா? இந்தியாவில் முதல்முறையாக சினிமாவிற்கென்றே, சினிமா புத்தகங்களுக்கென்றே, திறக்கப்பட்ட முதல் கடை இது. இங்கே தமிழில் வெளிவந்த சினிமா சார்ந்த புத்தகங்கள், ஆங்கிலத்தில் வெளியான மிக முக்கியமான சினிமா புத்தகங்கள், குறும்பட, ஆவணப்படம் டி.வி.டி.க்கள் என எல்லாமும் ஓரிடத்தில் கிடைக்கிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக நல்ல சினிமாவிற்கான இயக்கமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் ஸ்டுடியோவின் இன்னொரு மிக முக்கியமான முன்னெடுப்புதான் இந்த பியூர் சினிமா புத்தகக் கடை. முன்னமே இவர்களின் பதிப்பகமான பேசாமொழி பதிப்பகத்தின் மூலம் பல்வேறு நல்ல சினிமா புத்தகங்களை பதிப்பித்து சினிமா சார்ந்த கல்விக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இயக்குனர் மிஷ்கினின் ஐந்து திரைக்கதை புத்தகங்கள் இவர்கள் பதிப்பித்த முக்கியமான புத்தகங்கள். ஜூன் மாத நடைபெற்ற சென்னை புத்தகக் காட்சியில் பெரும் வரவேற்பை பெற்றன இந்த புத்தகங்கள்.

இந்த புத்தகக் கடையின் நிறுவனர் அருண் அவர்களிடம் பேசியபோது, ’இந்த புத்தகக் கடையில் புத்தக விற்பனை மட்டுமின்றி, உறுப்பினர் சேர்க்கையும் நடைபெறுகிறது, அதாவது வருடத்திற்கு 1500 ரூபாய் கட்டி உறுப்பினர் ஆகிவிட்டால், இங்கே இருக்கும் புத்தகங்களை இங்கிருக்கும் ஓய்வறையில் உடற்கார்ந்து படித்துக் கொள்ளலாம். உலகப் படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்களை இங்கிருக்கும் பெரிய திரையில், நல்ல ஒலியமைப்புடன் கூடிய அரங்கில் பார்த்து மகிழலாம். தவிர புத்தகங்களை பத்து சதவீதக் கழிவில் ஆண்டு முழுவதும் வாங்கி கொள்ளலாம். இது இல்லாமல் தமிழ் ஸ்டுடியோ சார்பாக நடத்தப்படும் பயிற்சிப் பட்டறையில் கலந்துக்கொள்ள சிறப்பு கழிவும் உண்டு’ என்கிறார்.

Story image

மேலும், தமிழில் நல்ல சினிமா, அல்லது சினிமா தொழில்நுட்பம் சார்ந்து நிறைய புத்தகங்கள் வெளிவரவில்லை. நூற்றாண்டுகளை கடந்த தமிழ் சினிமாவில் இதுவரை ஆயிரம் புத்தகங்கள் கூட சினிமாவிற்காக அச்சிடப்படவில்லை என்பது பெரும் சோகம். இந்தச் சூழலில்தான் சினிமா புத்தகங்களை அதிகமாக கொண்டு வரவும், அவற்றுக்கான விற்பனையை அதிகப்படுத்தவும், நல்ல சினிமாவை எல்லா தரப்பு மக்களிடமும் எடுத்துச் செல்லவும், சினிமா குறித்த கல்வியை உருவாக்கவும் இந்த புத்தகக் கடை திறக்கப்பட்டுள்ளது என்கிறார் அருண்.

ப்யூர் சினிமா கடையில் அதிகம் விற்பனையாகிக் கொண்டிருக்கும் புத்தகங்களைப் பற்றிக் கேட்டபோது அருண் கூறியது. ‘பியூர் சினிமா கடை தொடங்கியது முதல் இரண்டு புத்தகங்களை அதிகமான வாசகர்கள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். ஒன்று சுஜாதாவின் திரைக்கதை எழுதுவது எப்படி? இன்னொன்று கே. பாக்யராஜின் வாங்க சினிமாவைப் பற்றி பேசலாம். சுஜாதா புத்தகம் இன்னமும் கிடைக்கவில்லை. ஆனால் கே.பாக்யராஜின் புத்தகத்தை அவரிடமே பேசி, அவரிடம் இருந்த நாற்பது பிரதிகளை பியூர் சினிமா புத்தகக் கடையில் விற்பனைக்கு வைத்துள்ளோம். இந்த நாற்பது பிரதிகளும் வெகுவிரைவில் விற்றுத் தீர்ந்தால் அடுத்த பதிப்பிற்கு இந்த புத்தகம் செல்லும்.  ஒரு கதையை எப்படி சொல்லவேண்டும் என்கிற உத்தியை நீங்கள் நிச்சயம் இதில் இருந்து தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் புத்தகத்தை தொடர்ச்சியாக வாசகர்கள் கேட்கிறார்கள் என்றதும் உடனே புத்தகத்தை விற்பனைக்கு கிடைக்க ஏற்பாடு செய்தார்           கே. பாக்யராஜ். அவருக்கு பியூர் சினிமாவின் நன்றி. இப்போது விற்பனையாகிக் கொண்டிருப்பது  ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிதான். இந்த நாற்பது பிரதிகள் விட்டதும், மறுபதிப்பு இன்னும் நிறைய கட்டுரைகளோடு வெளிவரவிருக்கிறது’ என்றார்.

முகவரி:

பியூர் சினிமா புத்தகக் கடை

எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600026

தொடர்புக்கு: 9840698236

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.