ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!முதல்வா் நாளை குமரி வருகை!வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

நிறைய எழுத்தாளர்கள் உருவாகணும்! இயக்குனர் நலன் குமாரசாமி பேட்டி

இயக்கி தமிழ்த்திரைக்கு புதிய ஒரு அலையை உருவாக்கிய அளித்த இயக்குநர் நலன் குமாரசாமியைச் சந்தித்தோம்

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:08 pm

உமா ஷக்தி.

வெயிலின் தாக்கம் அதிகரிக்காத காலை வேளை. ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கி தமிழ்த்திரைக்கு புதிய ஒரு அலையை உருவாக்கிய அளித்த இயக்குநர் நலன் குமாரசாமியைச் சந்தித்தோம். தெள்ளந் தெளிவான திரைக்கதை, கச்சிதமான நடிகர் நடிகையர் தேர்வு இரண்டும் அவருடைய வெற்றியின் ரகசியம். நலன் இயக்கியுள்ள இரண்டு படங்களுமே வெற்றி ஆனால் அதன் தாக்கம் துளியும் இன்றி இயல்பாகப் பேசினார். அவரது பேட்டி :

உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?

வெற்றி தோல்வி இதை எல்லாம் தாண்டி திரை உலகில் ஒரு இடம், ஒரு அங்கீகாரம் கிடைச்சிருக்கிறது சந்தோஷமாக இருக்கு.

‘சூது கவ்வும்’ படத்துக்குப் பிறகு அதன் தொடர்ச்சியாக ‘கை நீளம்’ என்ற படம் பண்றதா இருந்தீங்க அது என்ன ஆச்சு?

சூது கவ்வும் படத்துக்கு பிறகு அந்த படத்தோட சாயல் இல்லாத வேற ஒரு ஜர்னர்ல ஒரு படம் பண்ண நினைச்சேன்.  ‘எஸ்கிமோ காதல்’ இதான் அடுத்த படம்னு முடிவு செஞ்சு ஷூட் போனோம். படத்தோட தலைப்பு நெருடலாக இருந்தப்ப ஞானவேல்ராஜா தான் காதலும் கடந்து போகும் இது வேணா யோசிச்சுப் பாருங்கன்னு சொன்னார். எனக்கும் பிடிச்சுது. படம் வெளிவந்து நல்ல பேர் கிடைச்சிருக்கு. படத்துல கா க போ பாடலும் ஹிட்.

ஒரு படத்தோட வெற்றி எதைச் சார்ந்தது? ஒரு படம் ஹிட்டாகுதுன்னா முதல் காரணமா எதைச் சொல்வீங்க?

நிச்சயமா ஸ்கிரிப்ட் தான். கதை இல்லாம ஒரு படம் பண்ண முடியுமா என்ன? நான் அடிப்படையில் ஒரு எழுத்தாளன். முதல்ல கதையை எழுதிட்டு அதை மறுபடி திருத்தி எழுதி ஒரு முழுமைக்கு வந்த பிறகு திரைக்கதையா மாத்துவேன். திரைக்கதை பகுதி வரும்போது என்னோட உதவி இயக்குனர்களோட கலந்துரையாடல் நடக்கும். அதுல சில மாற்றங்கள் ஏற்படும். திரைக்கதையை பக்காவா எழுதிட்டுத்தான் படப்பிடிப்புக்கு கிளம்புவோம். நாம நினைச்ச கதையை சரியா எழுதி, அதை திரையில் கூடுமானவரை தெளிவா சுவாரஸ்யமா சொன்னாலே அது வெற்றிதான். பேப்பர்ல இருக்கறதை ஸ்க்ரீன்ல கொண்டு வரணும். தவிர படப்பிடிப்பு சமயத்துல கூட சில ஐடியாஸ் அப்பப்போ தோணும் எதையும் தவற விட்டுடக் கூடாது.

கலைப் படம் கமர்ஷியல் படம் இந்த ரெண்டுக்கும் நடுவுல உங்க படம் இருக்கற மாதிரி தோணுது. நீங்க எப்படி நினைக்கறீங்க?

குடும்பத்தோட எல்லாரும் பார்த்து ரசிக்கக் கூடிய படங்கள் மேல எனக்குப் பெரிய மரியாதை இருக்கு. அது கொஞ்சம் வித்தியாசமா எண்டர்டெயினிங்கா இருந்தா இன்னும் சிறப்பா இருக்கும். அதான் எனக்கு விருப்பமான சினிமா. அதைத் தான் நானும் எடுக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன்… கலை கமர்ஷியல் இதெல்லாம் விமரிசகர்கள் பார்வையில். திரைக் கலைஞனா என்னோட வேலை நல்ல படங்கள் தருவது.

காதலும் கடந்து போகும் கொடுத்த அனுபவம் எப்படி?

‘மை டியர் டெஸ்பரடோ’ என்ற கொரியன் படத்தைப் பார்த்ததும் நாம இதைப் பண்ணலாமேன்னு தோணுச்சு. அதோட உரிமையை முதல்ல வாங்கினேன். கதை இதுதான்னு முடிவு ஆனதும் அதை எழுதத் தொடங்கினேன். நடிகர் நடிகைத் தேர்வு நடக்கும் போது முதல்லயே விஜய் சேதுபதின்னு முடிவு பண்ணிட்டேன். ப்ரேமம் படத்துல மடோனா செபாஸ்டியன் நடிப்பு நல்லா இருந்தது. கா.க.போ படத்துல இவங்க ரெண்டு பேரும் தான் முக்கிய பாத்திரங்கள். ரெண்டே கதாபாத்திரம், போரடிச்சிடக் கூடாது….சவால் அதிகம் தான். அதை உணர்ந்து போட்டி போட்டு நடிச்சு முடிச்சாங்க.

உங்க பலம் எது? பலவீனம் எது?

பலம் கதை. பலவீனம் அதை கண்டுபிடிச்சு எழுத நான் எடுத்துக்கற நேரம். சில சமயம் ஆறு மாசம் கூட கதைத் தேடல் நடக்கும். முழு மனசு இல்லைன்னா நான் அதுல இறங்கவே மாட்டேன். இதான் கதைன்னு மனசுக்குள்ள பட்டிருச்சுன்னா அதுக்கப்புறம் வேகமா வேலை செய்வேன். ஆனால் அது வரைக்கும் அதற்கான காத்திருப்பு தான் பலவீனம். மாத்திக்க முயற்சி செய்யறேன். பார்க்கலாம்.

உங்க படங்கள் ஜாலியா கலாட்டாவா காமெடியா அதே சமயம் நல்லாவும் இருக்கு. இந்த சதவிகிதம் எப்படி சாத்தியம்?

நன்றி. இதையெல்லாம் தனித்தனியா மெனக்கிடறதில்லை. கதைக்குள்ள அங்கமா அந்தக் காட்சிக்கு நியாயமா இருக்கற விஷயங்கள் தான். காமெடிக்கு நான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கறது உண்மைதான். ஆனால் அதுக்காக அது திணிக்கப்பட்டதா இருக்காது. தேவைப்படற இயல்பான நகைச்சுவை தான் நிக்கும்.

உங்க திரைக்கதையில் ஒரு மேஜிக் இருக்கு. என்ன ரகசியம்?

ஆஹா! அது கதையை அழுத்தமா எழுதி முடிக்கறது தாங்க. எந்த டவுட்டும் சிக்கலும் இருக்கக்கூடாது. வேற எந்த ரகசியமும் இல்லை.

உங்க டீம் பத்தி சொல்லுங்க..

மாமல்லன் மற்றும் ஸ்ரீநிவாச கவிநேயன்னு ரெண்டு நண்பர்கள் என் டீம்ல இருக்காங்க. கதையை நான் பக்காவா முடிச்சவுடன் காட்சிகள் டிஸ்கஸ் பண்ணுவோம். அப்பறம் எட்டு உதவி இயக்குநர்கள் இருக்காங்க. இவங்க எல்லாரோட பங்களிப்பும் எனக்கு உறுதுணையா இருக்கு.

அடுத்த படம் எப்போது?

அடுத்த படம் உடனே பண்ணனுமா என்ன? கொஞ்சம் ரிலாக்ஸ். அப்பறம் தான் வேலை. உண்மையைச் சொல்லணும்னா நல்ல கதையை தேடிட்டிருக்கேன். எழுத்தாளர்களோட பங்களிப்பு சினிமாவுக்குத் தேவை. புதிய எழுத்தாளர்கள் யாரும் உருவாகலை. சுஜாதாவுக்குப் பிறகு அந்த இடம் முற்றிலும் வெற்றிடமாத்தான் இருக்கு. கதைகள் நிறைய இருக்கு ஆனால் எழுதுவார் தான் இல்லை. எழுத்தை நேசிச்சு எழுதற யாரையும் நான் சமீபத்தில பாக்கலை. நிறைய எழுத்தாளர்கள் உருவாகணும், நம்ம மரபுல கதை சொல்லல் பிரிக்க முடியாத ஒரு விஷயம். அப்படி இருக்க, கதைக்கு பஞ்சமே கிடையாது. அனுபவங்களை உள்வாங்கி எழுதற தரமான எழுத்து பெரிசா இல்லை. அப்படி ஒரு எழுத்தாளர் உருவாகி முன்ன வந்தாங்கன்னா நிச்சயம் நான் வாய்ப்பு தரேன்.

உங்க கனவு சினிமா எது?

அப்படி எல்லாம் எதுவும் இல்லை…நான் இன்னும் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு. வித விதமான genre முயற்சி செய்யணும். அதை சிறப்பாகவும் செய்யணும். காலம் விரைவா ஓடிட்டு இருக்கு. தேர்ந்த ரசனை தான் ஒரு கலைஞனோட ஆதார சக்தி. அப்படிப்பட்ட ரசனைகளோட தரமான படங்களை இயக்கணும்.

சமீபத்துல என்ன படம் பார்த்தீங்க?

காதலும் கடந்து போகும் படத்துல பிஸியா இருந்ததால எந்தப் படமும் பார்க்கலை. இனிமே தான் பார்க்கணும்.

பெண் இயக்குநர்கள் ஏன் இன்னும் அதிகமா வரலை?

சமீபத்தில வெளிவந்து வெற்றிப் பெற்ற இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கோங்க்ரா, ‘கள்வர்’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் சந்திரா தங்கராஜ், பூவரசம் பீப்பி படம் எடுத்து நல்ல பெயர் வாங்கியிருக்கிற ஹலிதா, ஆவணப்படத்துக்கு தேசிய விருது வாங்கியிருக்கிற சுருதி ஹரஹர சுப்ரமணியன் இவங்க எல்லாரும் நம்பிக்கை அளிக்கும் இளம் பெண் இயக்குநர்கள். நிச்சயம் இன்னும் நிறைய பேர் வருவாங்க.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.