/

மணி ரத்னத்தின் அடுத்த படத்தில் நடிக்கிறேன்: ஐஸ்வர்யா ராய் அறிவிப்பு

இருவர், குரு, ராவணன் என மணி ரத்னத்தின் மூன்று படங்களில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராய்..

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:37 am

எழில்

ஓ காதல் கண்மணி படத்துக்குப் பிறகு மணி ரத்னம் இயக்கவுள்ள படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளார். இத்தகவலை ஆங்கில நாளிதழுக்கு அளித்த ஒரு பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

ஓ காதல் கண்மணி படத்துக்குப் பிறகு மணி ரத்னம் இயக்கவிருக்கும் படத்தைப் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் ஸ்ரீநகரில் விடுமுறையை கழிக்க சென்றபோது மணி ரத்னத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே தில்லியில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். உடல்நலன் தேறியபிறகு சென்னை திரும்பினார் மணி ரத்னம். இதனால் மணி ரத்னத்தின் அடுத்தப் படம் தாமதமாகும் என சொல்லப்பட்டது. ஆனால், மணி ரத்னம் சென்னை வந்தவுடன் அடுத்தப் படத்துக்கான வேலைகளில் இறங்கிவிட்டார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பதால் ஐஸ்வர்யா ராயுடன் இதுபற்றி பேசியுள்ளார் மணி ரத்னம்.  ஓ காதல் கண்மணிக்கு முன்பு ஐஸ்வர்யா ராய்க்கு ஒரு கதை சொல்லியுள்ளார். அந்தக் கதையை இப்போது படமாக்க உள்ளார். இந்தப் படத்துக்கும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளார். 

இருவர், குரு, ராவணன் என மணி ரத்னத்தின் மூன்று படங்களில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராய். மணி ரத்னத்தின் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளது பற்றி ஐஸ்வர்யா ராய் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

சென்ற வருடம் மணி ரத்னம் படத்தில் நடிக்க இருந்தேன். ஆனால் அது உருவாகவில்லை. அந்தப் படம் வெளிவந்திருந்தால் அதுதான் என் கம்பேக் படமாக இருந்திருக்கும். பல காரணங்களால் மணி ரத்னம் அதைத் தள்ளிப் போட்டுவிட்டார். சமீபத்தில் என்னிடம் மணி ரத்னம் பேசினார். அந்தப் படத்தை மீண்டும் எடுக்க உள்ளார்.  

ஆரம்பத்தில் எனக்குப் பல வாய்ப்புகள் வந்தபோதும் மணி ரத்னத்துடன் பணிபுரிவதற்காக இருவர் படத்தில் அறிமுகமானேன். நான் மீண்டும் நடிக்க வருகிறபோது அவருடைய படத்தில் நடிக்க விரும்பினேன். ஆனால் அதுபோல நடக்கவில்லை.

குறிப்பிட்ட இந்த இயக்குநர், நடிகருடன் தான் நடிக்கவேண்டும் என்று நினைக்கமாட்டேன். ஆனால், மணி ரத்னத்துடன் நடிக்க நான் மிகவும் விரும்புவேன். ஆழமான உணர்வுகள் கொண்ட அவருடைய படங்கள் எனக்குப் பிடிக்கும். அவர் மீது முழுமையாக நம்பிக்கை வைப்பேன். நான் இயக்குநருக்கான நடிகை. அவர் நடிகர்களுக்கான இயக்குநர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.