டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

டிஜிட்டல் மயமானது தமிழ் சினிமா!

ஃபிலிம் சுருள்களில் இதுவரை வெளிவந்த தமிழ் சினிமா முழுமையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறிவிட்டது. ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் "ஐ' உள்ளிட்ட ஒரு சில படங்களை தவிர ஏராளமான தமிழ்ப் படங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாகி வருகின்றன.

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:03 pm

ஜி. அசோக்

ஃபிலிம் சுருள்களில் இதுவரை வெளிவந்த தமிழ் சினிமா முழுமையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறிவிட்டது. ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் "ஐ' உள்ளிட்ட ஒரு சில படங்களை தவிர ஏராளமான தமிழ்ப் படங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாகி வருகின்றன.

டிஜிட்டல் வடிவத்திலேயே தமிழ் சினிமாக்கள் உருவாகும் நிலை ஏற்பட்டிருப்பதால், இனி ஃபிலிம் பிராசஸிங் வேலை தேவையில்லாத நிலை உருவாகியுள்ளது. இதனால், தென்னிந்தியாவின் முன்னணி ஆய்வகமாக திகழ்ந்து வரும் பிரசாத் லேப் மற்றும் ஜெமினி லேப்களில் அதிரடியாக ஆள் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஆண்டாண்டு காலமாக வேலைப் பார்த்து வந்த பல ஊழியர்கள் வேலை இழக்கின்றனர். சென்னை, வடபழனியில் இயங்கி வரும் பிரசாத் லேப் மருத்துவமனையாக மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவின் தொழில்நுட்ப பயணம்

எட்வர்டு என்ற ஆங்கிலேயர் சென்னையில் முதல் நகரும் படக் காட்சியை திரையிட்டு தமிழ் சினிமாவின் தொழில்நுட்ப வரலாற்றை தொடங்கி வைத்தார். சென்னையில் பிரபலமாக விளங்கிய விக்டோரியா பப்ளிக் ஹால் என்ற அரங்கில் "சினிமாஸ்கோப்' என்று விளம்பரப்படுத்தப்பட்டு திரையிடப்பட்ட அக்காட்சி, தமிழ் திரை வரலாற்றில் அடுத்தடுத்த தொழில்நுட்ப மாற்றங்கள் நிகழ காரணமாக அமைந்தது. இதையடுத்து பல நகரும் படக் காட்சிகள் சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டன.

முதல் திரையரங்கம்

திருச்சி ரயில் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சுவாமிக்கண்ணு வின்சென்ட் என்பவர் திரைப்படம் காண்பிக்கும் நிறுவனத்தை ஆரம்பித்தார். தென்னிந்தியாவின் முதல் திரையரங்காக இத்திரையரங்கு விளங்கியது. சுவாமிக்கண்ணு வின்சென்ட் தொடர்ந்து பல ஊர்களுக்கு சென்று "இயேசுவின் வாழ்க்கை' என்ற படத்தை வெளியிட்டார். நிரந்தர திரையரங்குகள் உருவாகாத அக்காலக் கட்டத்தில் அவரே அதற்கான உபகரணங்களோடு தமிழகம் முழுவதும் சுற்றி படங்களை வெளியிட்டார்.

நிரந்தர திரையரங்குகள் உருவாகிய பின்னர் மும்பையில் தயாரான "ஹரிச்சந்திரா' போன்ற புராண படங்கள் சென்னையில் திரையிடப்பட்டன. இத்திரைப்படங்கள் பெற்ற வரவேற்புகளையடுத்து ஆர்.நடராஜ முதலியார் "இந்தியா ஃபிலிம் கம்பெனி' என்னும் நிறுவனத்தை நிறுவி 1916-ஆம் ஆண்டில் "கீசக வதம்' என்ற படத்தை தயாரித்தார்.

இந்தப் படத்தில் சிறு சிறு சப்தங்கள் இடம்பெற்றிருந்தன. இது சலனப் படமாக உருவாகி தமிழ் சினிமாவை அடுத்தக் கட்ட தொழில்நுட்பத்துக்கு அழைத்துச் சென்றது. இதையடுத்து நூற்றுக்கணக்கான சலனப் படங்கள் தமிழில் உருவாகின.

பேசும் படம்

மும்பையிலுள்ள சாகர் மூவிடோன் என்ற நிறுவனம் 1931-ஆம் ஆண்டு முதல் தமிழ் பேசும் படத்தை தயாரித்தது. "குறத்தி பாட்டும் டான்ஸூம்' என்ற நான்கு ரீல்கள் கொண்ட குறும்படமே தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம். அதே வருடம் எச்.எம்.ரெட்டி இயக்கத்தில் முழு நீள தமிழ்ப் படமாக "காளிதாஸ்' வெளிவந்தது.

இருதோற்றங்கள்

1935-ஆம் ஆண்டில் ஒரே காட்சியில் இருவர் தோன்றும் தொழில்நுட்பம் தமிழ் சினிமாவில் புகுத்தப்பட்டது. இந்த தொழில்நுட்பத்தில் ஏராளமான புராண கதைகள் உருவாகி வந்தன. 1935-ஆம் ஆண்டில் சமத்துவ கதைகளை மையமாக கொண்டு கதைகள் உருவாக்கப்பட்டன. இவை நாடகப் படங்களாக வெளிவந்தன.

1939-ஆம் ஆண்டு வாஹினி, ஜெமினி நிறுவனங்கள் சென்னையில் தன் படத் தயாரிப்புகளை தொடங்கின. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே வெளிமாநிலங்களில் படங்களை தயாரித்ததன் மூலம் படத் தயாரிப்பில் இறங்கினார் ஏவி.மெய்யப்ப செட்டியார். பின்னர், சென்னை மயிலாப்பூர் பகுதியில் பிரகதி ஸ்டுடியோ என்ற பெயரில் திரைப்பட ஸ்டுடியோவை உருவாக்கினார்.

பின்னணி குரல்

அப்போது டி.ஆர்.மகாலிங்கம், குமாரி ருக்மிணி நடிப்பில் அவர் தயாரித்த "ஸ்ரீவள்ளி' படத்தில்தான் முதன்முதலாக பின்னணி குரல், பின்னணி பாடல் ஆகிய தொழில்நுட்பங்கள் அறிமுகமானது. அதுவரை சம்பந்தப்பட்ட நடிகர்களே பாடியும், வசனங்கள் பேசியும் நடித்து வந்தனர்.

இந்த தொழில்நுட்ப பயணத்தில் சிவாஜியின் நடிப்பில் உருவான "ராஜராஜசோழன்' படத்தில் சினிமாஸ்கோப், "ஊமை விழிகள்' படத்தின் மூலம் டி.டி.எஸ் சவுண்ட், "மைடியர் குட்டிச் சாத்தான்' படம் மூலம் முப்பரிமாண தொழில்நுட்பம் (3 டி) என காலத்துக்கு ஏற்ப தன் வடிவங்களை மாற்றி தமிழ் சினிமா பயணித்தது. ஆனால் இவை அனைத்திலும் ஃபிலிம் ரோல்களின் பங்கு முக்கியமானதாக திகழ்ந்தது.

டிஜிட்டலுக்குள் வந்த சினிமா

சினிமா ஃபிலிமில் உலகம் முழுவதும் கொடிக் கட்டி பறந்த நிறுவனம் ஜெர்மனைச் சேர்ந்த ஆரி. இந்நிறுவனத்துக்கு போட்டியாக டிஜிட்டல் கேமிராவான ரெட் ஒன்னை உருவாக்கியது ஒக்லே என்ற அமெரிக்க நிறுவனம். இவர்களின் போட்டியின் காரணமாகத்தான் சினிமா முக்கியமான தொழில்நுட்ப மாற்றத்துக்குள் வந்தது.

வீண் செலவுகள் மற்றும் கால விரயத்தை தடுப்பதோடு நினைத்த காட்சிகளை எத்தனை முறை வேண்டுமானாலும் எடுக்கலாம் என்ற புதுமையை டிஜிட்டல் சினிமாக்கள் கொண்டு வந்ததால் ஃபிலிம் ரோல்களை விட்டு, டிஜிட்டலில் படம் எடுக்கத் தொடங்கினார்கள். தியேட்டர் புரொஜக்ஷனும் டிஜிட்டலுக்கு மாறி விட்டதால் ஹாலிவுட் மற்றும் ஐரோப்பிய சினிமாக்களை முழுவதுமாக டிஜிட்டல் தொழில்நுட்பம் ஆக்கிரமித்துவிட்டது.

இதையடுத்து பல்வேறு நாடுகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படங்களை உருவாக்கி வருகின்றனர். இதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் 90 சதவீத படங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாகி வருகின்றன. இதனால் ஃபிலிம் பிராசஸிங் வேலைகள் பெருமளவு குறைந்துவிட்டது. சென்னையில் இயங்கி வந்த பல லேப் மற்றும் ஸ்டூடியோக்கள் மூடு விழா கண்டுவிட்டன.

பிரபலமான பிரசாத், ஜெமினி உள்ளிட்ட ஒரு சில லேப்களில் மட்டுமே ஃபிலிம் பிராசஸிங் வேலைகள் நடந்து வந்தன. ஃபிலிம் ரோல் படங்கள் உருவாகாத காரணத்தால் லேப்களில் பணியாற்றி வந்த 100-க்கும் அதிகமான ஊழியர்களுக்கு விருப்பு ஓய்வு (வி.ஆர்.எஸ்.) கொடுக்கப்பட்டு விட்டது.

இதைப் போல ஜெமினி லேப்பிலும் வேலைகள் குறைந்து விட்டன. ஏற்கெனவே இயங்கி வந்த பிரபலமான விஜயா லேப் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டு விட்டது. தற்போது அந்த இடத்தில் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.

பழமையை விரும்பும் ஒரு சில இயக்குநர்கள் ஃபிலிமில் படங்களை உருவாக்கி வருகின்றனர். இந்த நிலையில் தியேட்டர் புரொஜக்ஷன் டிஜிட்டலுக்கு மாறி விட்டதால் இந்த படங்களும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றப்படும் நிலை உருவாகியுள்ளது.

பிரபல ஒளிப்பதிவாளர்கள், அனுபவ இயக்குநர்கள்தான் சினிமா எடுக்க முடியும் என்ற நிலையை மாற்றி யார் நினைத்தாலும் சினிமா எடுக்கலாம் என்ற நிலையை உருவாக்கி தமிழ் சினிமாவை தற்போது பயணிக்க வைத்துக் கொண்டிருக்கிறது இந்த நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.