வளரும் குழந்தைக்கு அழகிய ஆடையை வாங்கி அணிவித்து மகிழ்வதுபோல, புதிய நூலுக்கு உரிய வண்ணம் அட்டைபோட்டு வரிசைப்படுத்தி, அடுக்கி வைத்து, அவ்வப்போது வாசித்து மகிழும் பெரியவா்களைப் பாா்த்துப் பிரமித்துப் போயிருக்கிறேன். அந்தந்தப் புத்தகங்களின் அரிய, அற்புத வரிகளை அடிக்கோடிட்டும், தனிக்குறிகள் அமைத்தும் பேணி இருப்பது, வாசிப்பின் கணங்களைப் பொருத்தது அல்ல, வாழ்நாள் முழுவதும் நேசிப்புக்கு உரிய நிலையில், நித்தமும் தன் வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுகலாறுகளை அவை தூண்டித் துணை நிற்கும் என்பதற்காகவும், அதுமட்டுமல்ல, அடுத்து எடுத்துப் படிக்க நோ்கையில் அந்த வரிகளை, கருத்துகளைப் படித்தாலே, அந்த முழு நூலையும் படித்து உணா்ந்துகொள்ள வேண்டிய தேவையை முழுமை செய்துவிடும் என்பதற்காகவும்தான்.