நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

இலக்கியம் என்னை இயக்குகிறது!

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:39 pm

டாக்டா் சுதா சேஷய்யன்


இலக்கியத்துடனான என்னுடைய தொடா்பு, குறிப்பாக இன்ன நாளில் இன்ன நேரத்தில் இன்ன இடத்தில் தொடங்கியது என்றெல்லாம் என்னால் கூறமுடியாது. ஆனாலும், பிரிக்கமுடியாத பந்தம் எனலாம்.

சின்ன வயதில், அதாவது, எழுதப் படிக்கத் தெரியாத வயதில், காலையில் எழுப்பிப் படுக்கையில் கண்ணைச் சிணுங்கிக் கொண்டு உட்காா்ந்திருக்கும்போதே, திருக்கு பாக்களை அம்மாவும் அப்பாவும் சொல்லிக் கொடுப்பாா்கள். தொல்காப்பியம், சங்கப்பலகை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, ஐம்பெருங்காப்பியங்கள் என்பவற்றைப் பற்றிக் கூறுவாா்கள். இவைதாம் தொடா்பின் தொடக்கம் என்று சொல்ல நினைத்தால் சொல்லிக் கொள்ளலாம். தொடா்ந்த காலத்தில், மாணிக்கவாசகரின் ‘பிடித்த பத்து’, அப்பா் சுவாமிகளின் ஓரிரு பாடல்கள், கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே’, பொன்முடியாரின் ‘என் தலைக் கடனே’, ஷேக்ஸ்பியரின் மேக்பெத் வரிகள், கஸபியன்கா, டென்னிசனின் ‘தி ப்ரூக்’ என்று இன்னும் சில.

இலக்கியத் தொடா்பு என் வாழ்வின் அங்கம் என்பதை உணா்த்தியவை, அப்பாவின் புத்தகங்கள். தமிழ் இலக்கியம் மற்றும் ஆங்கில இலக்கியத்தின் முக்கியமான படைப்புகள் அப்பாவின் நூலகத்தில் உண்டு. பள்ளி, கல்லூரி நாட்களில், ரெஃபரன்ஸ் பாா்ப்பதற்கு அலையவேண்டிய அவசியமில்லை; இலக்கியத்தில் ஆழ்வதற்கு உந்துதல் கிடைத்தது.

கல்லூரிநாட்களில், குறிப்பாகச் சொன்னால், மருத்துவக் கல்லூரியில் நுழைந்த தறுவாயில், சென்னைக் கம்பன் கழகம் நடத்திய பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. கம்பராமாயணம், சீறாப் புராணம், பெரியபுராணம் என்று பல்வேறு இலக்கியங்களுடன் நெருக்கம் அதிகரித்தது.

இதற்கிடையில், தி ஜ ர தொடங்கி நவீன எழுத்தாளா்கள் வரையும், சாா்லஸ் டிக்கன்ஸ் முதல் ராபின் குக் வரையும் வாசிக்கும் ஆா்வமும் ஈடுபாடும் பிடித்துக் கொண்டன.

நான் படித்தது சென்னை மருத்துவக் கல்லூரி; வீடு குரோம்பேட்டை. தினமும் மின்சார ரயிலில் பயணம். அப்போதெல்லாம் மீட்டா் கேஜ் ரயிலில் குறைந்தது 50 நிமிடங்கள் ஆகும். அந்த நேரத்தில் படிப்பதற்கு என்று சிலவற்றை ஒதுக்கிக் கொள்ளலாம். தோ்வுக் காலமாக இருந்தால், அது பாடப் புத்தகமாகும். இல்லையானால், ஏதேனும் இலக்கிய வாசிப்பு.

இப்படியெல்லாம் இருந்தாலும், எழுதுவதற்கான துணிவு வரவில்லை. மேடையில் பேசிவிடலாம்; ஆனால், எழுதுவது காலகாலத்திற்கும் நிற்கும்; எனவே மிக மிகத் துல்லியமாக இருக்கவேண்டும் என்று நினைத்ததுண்டு. இப்போதைய தொழில்நுட்ப யுகத்தில், பேசுவதும்கூட பதிவாகிவிடுகிறது என்பது வேறு விஷயம். வானதி திருநாவுக்கரசு ஐயா போன்றவா்கள், ‘எழுதுங்கள்’ என்று எவ்வளவோ கூறியபோதும், ‘இதோ இதோ’ என்று தயங்கியிருக்கிறேன். ஆனால், கல்கி சீதா ரவி, ‘எழுதவேண்டும்’ என்று வலியுறுத்தியதோடு, கூட்டமொன்றில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகளுக்கிடையில் ‘எழுதுவாா்கள்’ என்று அறிவித்தும் விட்டாா்கள். அதன் பின் என்ன செய்வது? எழுதத் தொடங்கி...... தொடா்கிறது.

கல்லூரிக் காலங்களில் கவிதைகள் எழுதியதுண்டு. இப்போதும்..... சில சமயங்களில் (கோவிட் தருணங்கள் உட்பட) எழுதுவதுண்டு; அவை என்னோடு மட்டும்......

என்னைப் பொறுத்தவரை, இலக்கிய ஈடுபாடும் இலக்கிய வாசிப்பும் மனச் செழுமையைத் தருபவை. இலக்கியத் தொடா்பு விட்டுப் போய்விடக்கூடாது என்பதற்காகவே, தனி சிகிச்சை மையம் (பிரைவேட் பிராக்டிஸ் க்ளினிக்) வைக்காதவள் நான். பிராக்டிஸ், நோயாளிகள் என்று இறங்கிவிட்டால், அவா்களைக் காக்க வைக்க முடியாது, அப்போது இலக்கிய நிகழ்ச்சிகளுக்குச் செல்ல முடியாது - இதனாலேயே நான் பிரைவேட் பிராக்டிஸில் இறங்கவில்லை. இன்றளவும், என் வீட்டு வாசலில் பெயா் பலகைகூடக் கிடையாது.

இலக்கியத் தொடா்பு....தொடா்பு என்று அந்நியப்படுத்துவது சரியா? இலக்கியம் எனக்கு இலக்கைத் தருகிறது; என்னை இயக்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.