முதல் இடை நிறுத்தமான சண்முகத்தை கடக்க முடிகிற ஆராவால், வருணைக் கடக்க முடியாததற்குக் காரணம், அவன் ஆராவின் ஆன்மாவைச் சித்திரவதை செய்வதற்குப் பதிலாக அப்படியே கண்காணாது கடத்திச் சென்று விடுகிறான். கணவனே ஆயினும், பெற்ற மகளை, பால் மணம் மாறாப் பருவத்தில் தூக்கிச் சென்றால் அதற்குப் பெயர் கடத்தல் தானே! குழந்தையை ஆராவிடமிருந்து பிரித்தெடுத்துச் செல்வதும் அவளைக் கொலை செய்வதும் ஒன்று தான். வருண், ஆராவுக்கு அப்படியொரு தண்டனையை ஏன் அளித்தான்? அத்தனைக்கு ஆரா செய்தது என்ன? ஒரு பெண் சுயமரியாதையுடன், தன்னிச்சையாக, தன் கனவு சார்ந்த விருப்பங்களுடன் வாழ்வது அத்தனை பெரிய தவறா? அதற்கு இப்படியொரு தண்டனை அளிக்கக் கூடியவனை நாவலின் இறுதியில் ஆரா மன்னித்து ஏற்றுக் கொள்ளும் முடிவில் இருப்பதை கொஞ்சமும் சகிக்க முடியவில்லை. நல்ல வேளை அது நிஜமில்லை. கதைப்படி ஆராவின் கற்பனை. அதையே சகிக்க முடியவில்லை எனினும் ஆரா அந்த முடிவில் இருப்பது பெண்களின் மன்னிக்கும் குணத்திற்கான எல்லையற்ற வரம்புக்கு ஒரு நல் உதாரணம். அதனாலன்றோ இத்தகைய ஆண்களால் எவ்வித குற்ற உணர்வுமின்றி இன்னும் ஜீவித்திருக்க முடிகிறது?!