இப்படி இந்த ஏழைத் தம்பதிகள் சந்தோஷமாகவும், ஒருவருக்கொருவர் அன்புடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் போது; திடீரென ஒருநாள் தனாஜி தன் வண்டி சேற்றில் சிக்கிக் கொள்ள அதை வெளியில் எடுக்க முயன்று கொண்டிருக்கும் நேரத்தில் து கா பட்டீல் தனது வில்வண்டியில் விரைவாக அவனைக் கடக்கிறான். நடுவழியில் தனாஜியைக் கண்டதும், பட்டீலின் வேலைக்காரனான தோண்டிபா, பட்டீல், இவன், இப்படிப்பட்ட நொண்டி மாடுகளையும், துக்கடா வண்டியையும் வைத்துக் கொண்டா உங்களை அப்படி எதிர்த்துப் பேசினான்? எதற்காக நாட்களைத் தள்ளிப்போடுவது? உங்களை அவனால் ஜெயிக்க முடியுமா? இல்லையா? என்பதை இப்போதே பார்த்து விடலாம். வாருங்கள் அவனது வண்டியை சேற்றிலிருந்து வெளியில் எடுத்து அவனுடன் ஒரு பந்தயம் வைத்துப்பார்க்கலாம். நிச்சயமாக அவனது மாடுகள், நம்முடைய மாடுகளிடம் தோற்றுபோய்விடும்’ என்று பட்டீலின் கோபத்துக்கு தூபம் போடுகிறான். இருவருக்கும் ரேக்ளா ரேஸ் நடக்கிறது. நல்லவன் ஜெயிப்பான் ஃபிலாஸபிக்கு ஏற்ப, இதில் தனாஜி வென்று விடுகிறான். து கா பட்டீலின் கோபம் மேலும் கனன்று எரியத் தொடங்குகிறது.