கோபால்ஜிக்கு தன் மகளை நினைத்து தீரா மனவேதனை. ஆனால், மனைவி, அம்மா, மாமியார் என்று வீட்டுப்பெண்களை மீறி மகளது வாழ்வை வேறுவிதமாக்கிக் காட்ட இயலாத கையாலாகத் தனத்தினால் அவர் பெரும்பாலும் மெளனித்திருக்க வேண்டியவராகிறார். கோபால்ஜியின் மனைவிக்கு அவரொரு இயல்பான கணவரில்லையோ என்பதைத் தாண்டியும் சினிமாத்துறையின் மீதான கற்பனை அச்சங்கள் மிகுந்திருப்பது தெரிகிறது. இல்லாததையும், பொல்லாததையும் கற்பனை செய்து கொண்டு சாமான்ய மனிதர்களுக்கு கூட எப்போதாவது கிட்டி விடக்கூடிய குடும்ப குதூகலம், புருஷ சாமர்த்தியம் எனும் சிற்றின்ப விஷயங்களில் அந்தம்மாள் அதிகமும் நிராசையாகி கணவரிடத்தில் மூர்க்கவதியாகி சமூகத்தில் பைத்தியமாகிறாள்.