துர்வாசபுரம் என்றொரு கிராமம். அங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மையினர் மத்வ பிராமணர்கள். அவர்களுக்கு ஜாதி ரீதியாக கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு. அந்தக் கட்டுப்பாடுகளை அவரவர், அவரவருக்கு உகந்த வழிகளில் பின்பற்றிக் கொண்டு தாங்கள் கட்டுசெட்டாக சம்பிரதாயங்களும், மடியும் கெடாமல் வாழ்வதாக நம்புகிறார்கள். இவர்களுக்கு ஒரு தலைவர் உண்டு. அவர் பிராணேஸ்சாச்சாரியார். அவர் சிறு வயதிலேயே காசிக்குச் சென்று வேதம் பயின்று பல்வேறு சபைகளில் பிராமண ஆச்சார்யார்கள் பலர் முன்னிலையில் தனது ஞானத்தை நிரூபித்து துர்வாசபுரம் மீண்டவர். அப்பழுக்கற்ற அந்த ஆத்மாவின் ஒரே லட்சியம், கடவுள் கிருபையையே வாழும் முறைமையாகக் கொண்டு முக்தி அடையவேண்டும் என்பது மாத்திரமே. இதற்காகத்தான் அவர் தெரிந்தே நோய்மை மிகுந்த, இல்லற சுகமளிக்க இயலாத பெண்ணொருத்தியை வேண்டி விரும்பி திருமணமும் செய்து கொள்கிறார். திருமணம் செய்த கையோடு அவளுக்கு வேண்டிய சிசுருஷகளை எல்லாம் கூட தெய்வகாரியம் போல கர்ம சிரத்தையாகச் செய்து கொண்டிருக்கிறார். அதனால் மோட்சம் கிட்டும் என்பது அவரது நம்பிக்கை. இதனால் எல்லாம் கூட அந்த ஊர் பிராமணர்களிடையே அவர் மீதான நம்பிக்கையும், மதிப்பும் பன்மடங்காகக் கூடி நிற்கிறது.