மேற்கண்ட ‘ஜூபிடருக்குச் சென்ற இந்திரன்’ தொகுப்பில் முனியம்மா பாட்டி கதை, சதுர்த்தி, பரோட்டா லட்சுமி, மழைநாள் ஒன்றில் உள்ளிட்ட கதைகள் செண்டிமெண்ட்டாகவும் சிறுவர்களை ஈர்க்கக் கூடிய வகையில் அமைந்திருந்தன. என் மகள் குறிப்பிட்ட இடைவெளியில் முனியம்மா பாட்டி கதையை மீண்டும் மீண்டும் சொல்லச் சொல்லி கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறாள். பள்ளிப்பிள்ளைகளுக்கு சாப்பாட்டுக்கூடை சுமக்கும் முனியம்மா பாட்டியின் பசி குறித்தும் சிந்திக்க ஒரு குட்டிப்பெண்ணால் முடிகிறது. அப்பாவின் பணி மாறுதல் காரணமாகப் பள்ளியை விட்டு வெகு சீக்கிரத்தில் விலக இருக்கும் அவள் தனது இரக்க உணர்வை பள்ளியின் பிற சகாக்களிடம் பரவ விட்டுச் செல்ல பிறகு பாட்டியால் தினமும் பசியுடன் கூட சுமக்க நேராமலாகிறது என்பது நிச்சயம் குழந்தைகள் அறிய வேண்டிய உணர்வே! இன்னொரு உயிர் பசித்திருக்கையில் நாம் மட்டும் ‘உண்பது’ மட்டுமல்ல ‘உணவை வீணாக்குவதும்’ தவறு! என்பதையும் குழந்தைகள் மனதில் ஆழப்பதிய வைக்கும் கதை இது.