ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
சமீபகாலமாக இரவுநேரத்தில் விக்கல் ஏற்படுகிறது. இதன் தொடர்ச்சியாக உடலில் ஒரு பகுதியில் மட்டும் வியர்வை ஏற்படுகின்றது. கடுமையான குளிர் ஏற்படுகிறது. வயிற்று உபாதைகள் ஏற்பட்டு மலச்சிக்கல் ஏற்படுகிறது. இவற்றை ஆயுர்வேத முறைப்படி எப்படிச் சரி செய்வது?
ந.வைத்திலிங்கம் சுதா,
கள்ளக்குறிச்சி.
குடலைச் சார்ந்த ஸமானன் மற்றும் அபான வாயுக்களின் நகரும் தன்மையானது, ஏதேனும் காரணத்தால் தடைபட்டால் அவற்றின் வெளியேற்றமானது சாதாரணமான நிலையிலிருந்து வேகம் கூடிவிடும். சமான வாயுவின் வெளியேற்றம் ஏப்பமாகவும், அபான வாயுவின் வெளியேற்றம் கீழ்குடல் காற்றாகவும் பலமாக வெளியேறும் தறுவாயில் உடலில் ஒரு பகுதியில் வேர்வையும் கடுமையான குளிரையும் உடல் சந்திக்க நேரலாம். அபான வாயுவின் வெளியேற்றமானது தடைபட்டுப்போனால் அதுவே மலச்சிக்கலுக்கும் காரணமாகலாம்.
இரவில் சாப்பிடும் உணவானது வெதுவெதுப்பாக அல்லாமல் வாயுவின் சீற்றத்தை அதிகரிக்கக்கூடிய சிறுதானியங்கள், குளிர்ந்த தண்ணீர், அதிகநேரம் எடுத்துக் கொண்டு உணவை மெதுவாகச் சாப்பிடுதல், சிறிதும் நெய்ப்பின்றி உணவை வறட்சியாகச் சாப்பிடுதல், அதிக அளவில் காரம், கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளைச் சாப்பிடுவதாலும் அவை ஏற்படுத்தும் வாயுவின் சீற்றமானது விக்கலாக வெளிவரக் கூடும். நரம்பு மண்டலங்களில் அது ஏற்படுத்தும் தாக்கத்தின் பிரதிபலிப்பானது, வியர்வையாகவும் குளிராகவும் மாறி உடலை வருத்தக்கூடும். அதனால் அஷ்டாங்க ஸங்கிரகம் எனும் ஆயுர்வேத நூல் இரவு உணவைப் பற்றிய வர்ணனையில் "ஸாயம் புக்த்வா லகு ஹிதம்' என்கிறது. அதாவது இரவு உணவானது எளிதில் செரிக்கக் கூடியதும் உடலுக்கு நன்மை தரும் விதத்திலும் அமைய வேண்டும் என்று அதற்கு அர்த்தம் கூறலாம்.
இன்றைய நடைமுறையில் இதைப் பலரும் பொருட்படுத்தாமல் இஷ்டம் போல் உணவை ஏற்பதால் மறுநாள் காலையில் எழும்பொழுது சுறுசுறுப்பற்ற தன்மை, உடல் கனம், தசைப்பிடிப்பு, மலச்சிக்கல் போன்ற பல உபாதைகளுக்கும் ஆளாகி விடுகிறார்கள். இரவு படுக்கச் செல்வதற்கு இரண்டு மணிநேரம் முன்பாகவே எளிதில் செரிக்கக் கூடிய மோர் சாதத்தையோ புழுங்கலரிசிக் கஞ்சியையோ மூன்று அல்லது நான்கு கோதுமையால் ஆன சுக்கா ரொட்டியையோ அவற்றிற்குத் தகுந்த ருசியைத் தரும் நன்கு வெந்த கறிகாய்களுடன் சாப்பிட்டு, ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் அமர்ந்து, அதன் பிறகு நூறு அடியாவது நடந்து, பல் துலக்கி, சுக்கை சீவலைப்போலச் சீவி சுமார் பதினைந்து கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரை விட்டு 250 மி.லி. ஆகும் வரை காய்ச்சி வடிகட்டி, அந்தத் தண்ணீரைச் சிறுகச் சிறுகப் பருகி, இடது பக்கமாகச் சரிந்து படுப்பதன் மூலமாக, நீங்கள் குறிப்பிடும் விக்கல் உபாதை, ஒரு பகுதி வியர்வை, கடுமையான குளிர் ஆகியவற்றைப் பெருமளவு தவிர்க்கலாம்.
வயிற்றில் வாயு உபாதைகள் ஏதும் ஏற்படாதிருக்கவும், மலச்சிக்கலைத் தவிர்க்கவும், சமான அபான வாயுக்களில் செயல்பாடுகள் மேம்படவும், நாக்கிலுள்ள ருசிகோளங்கள் என்றென்றும் சிறப்பாகச் செயல்படவும் கந்தர்வஹஸ்தாதி எனும் ஆயுர்வேத கஷாயம் பயன்படும். பதினைந்து மி.லி. கஷாயத்துடன் அறுபது மி.லி. வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து சிட்டிகை இந்துப்பும், சிட்டிகை வெல்லமும் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சுமார் 21 நாட்கள் சாப்பிட மிகவும் உகந்த மருந்தாகும்.
தஷமூலாரிஷ்டம் முப்பது மி.லி. காலை இரவு உணவிற்குப் பிறகு சாப்பிட்டு வருவதாலும் விக்கலைப் பெருமளவு தவிர்க்கலாம். ஆனால் சர்க்கரை உபாதைகள் உள்ளவர்கள் இம்மருந்தைச் சாப்பிடுவதைத் தவிர்த்து அதற்கு மாற்றாக, வாயுக்குளிகையையோ, தான்வந்திரம் குளிகையையோ சூடான சீரகம் போட்டுக் காய்ச்சிய வெந்நீருடன் சாப்பிடலாம். ஹிங்குவசாதி எனும் சூரண மருந்தும் நீங்கள் குறிப்பிடும் உபாதைகளில் பயன்படுத்தத்தக்கதே. ஐந்து கிராம் சூரணமருந்தை சுமார் நூறு மி.லி. வெந்நீருடன் கலந்து காலை, இரவு உணவிற்கு அரை மணி முன் சாப்பிடுவதால் உடல் உட்புற உறுப்புகள் அனைத்தும் சுறுசுறுப்பாக இயங்கும். வாயுவையும் நன்றாக மட்டுப்படுத்தும். உணவின் மீது நாட்டம் ஏற்படும். மலத்தடையைத் தகர்க்கும் சிறப்பு வாய்ந்தது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்ஐஆா் பணிகளாலும் வாக்குப்பதிவு அதிகரிப்பு!

வாக்கு சதவிகிதம் அதிகரிப்பா? தலைமைத் தேர்தல் ஆணையரின் நகைச்சுவை: திமுக

அதிருப்திக்கு மத்தியிலும் நரிக்குறவா்கள் ஆா்வமுடன் வாக்களிப்பு

20 நிமிஷத்தில் 1,320 கிலோ அரிசி வேக வைக்கும் பாத்திரம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


