/

காபியை விட நல்லது தேநீர்!

சூடாக காபியையும், தேநீரையும் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டால், துவர்ப்பும் இனிப்பும் நிறைந்த ஓர் ஆனந்தத்தை நாக்கில் தருவதையும்,

News image
Updated On :9 செப்டம்பர் 2025, 5:11 am

எஸ். சுவாமிநாதன்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்
ஆயுர்வேத சாஸ்திர நூல்களில் தற்கால பானங்களாகிய காபி, தேநீர் ஆகியவற்றின் குணங்களைப் பற்றிய விவரங்கள் இருக்க வாய்ப்பில்லை. என்றாலும் அனுபவ ரீதியாக காபி, தேநீர் ஆகிய பானங்களை அருந்துவதால் கப, பித்த, வாத தோஷங்களின் பாதிப்பு உடலில் எவ்வாறு ஏற்படக்கூடும்?

-சுப்ர. அனந்தராமன்,
புட்டபர்த்தி.

 

நாம் பருகும் எந்த பொருளுமே அவற்றில் அடங்கியுள்ள ரஸம் அதாவது சுவை, வீர்யம் (அதாவது எந்த இயல்பின் உதவியைக் கொண்டு பொருட்கள் தம் வேலையைச் செய்கின்றனவோ அதற்கு வீர்யம் என்று பெயர்) விபாகம், அதாவது பருகப்பட்ட சுவையுள்ள பொருட்கள், பசித்தீயின் சேர்க்கையினால் சீரணமடைந்த பின் எற்படும் சுவை மாறுதல் விபாகம் என்றும், பிரபாவம் அதாவது - ரஸம், வீர்யம், விபாகம் இம்மூன்றின் செயல்களைக் காட்டிலும் தனியாக வேறு ஒரு செயலைச் செய்வது பிரபாவம் எனவும், இந்த நான்கைக் கொண்டே செயலாற்றுகின்றன என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

சூடாக காபியையும், தேநீரையும் சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டால், துவர்ப்பும் இனிப்பும் நிறைந்த ஓர் ஆனந்தத்தை நாக்கில் தருவதையும், சர்க்கரையே சிறிதும் சேர்க்காமல் பருகினால், கசப்பும் துவர்ப்பும் நிறைந்த சுவையை நாக்கில் ஏற்படுத்துவதையும் உணர முடியும். குடித்த பிறகு உடல் கதகதப்பை அடைவதையும் மூளை சுறு சுறுப்படைவதையும் அவை உணர்த்துகின்றன.

கசப்பும் துவர்ப்பும் குடலிலுள்ள வாயுவினைச் சீண்டுவதால், அதன் மூலம் நாடி நரம்புகளில் வாயு வேகமாகப் பரவி இந்த பானங்களில் அடங்கியுள்ள சூடான வீர்யத்தை எடுத்துச் செல்லும் தறுவாயில், பித்தத்தையும் தூண்டி விடுவதால், உடல் கதகதப்பையும், மூளை சுறுசுறுப்பு அடைவதையும் நாம் உணர்கிறோம்.

இனிப்பினுடைய சேர்க்கை, துவர்ப்புச் சுவையுடன் சேர்ந்து உட்செல்வதால், கபம் மற்றும் வாயுவைக் குடல் பகுதியில் தூண்டி, நரம்புகளில் சுறு சுறுப்பையும் செயல் ஊக்கியாகவும் வேலை செய்கிறது. ஆனால் இந்த ஊக்கச் செயல்பாடு நிரந்தரமானதா? அது நல்லதைச் செய்யுமா? என்ற கேள்விக்கு விடையானது இல்லை என்றே வரக்கூடும். தற்காலிக நிவாரணியாகவே இவை செயல்படும் என்றாலும் அவற்றின் மீதுள்ள மோகம் குறையாதிருப்பதற்குக் காரணம், அவற்றின் சுவையை அறிவுப் பகுதி தன்னுள் பதித்து வைத்திருப்பதினால்தான்.

மனதின் நாடிகளின் வழியே இவற்றின் வீர்யம் பரவும் போது, அங்குள்ள ரஜஸ் எனும் மனோ தோஷத்தையும் தூண்டிவிடுவதால் அது உடல் தோஷங்களாகிய வாத-பித்த கபங்களின் கலப்பிற்கு ஏற்ப தன் செயல்களாகிய சுறுசுறுப்பு, சூரத்தன்மை, விருப்பு - வெறுப்பு ஆகியவற்றைத் தூண்டி விடுகிறது. அதனால் காபி - தேநீர் ஆகிய பானங்களை முடிந்தவரை குறைத்து அதற்கு மாற்றாக பால், சுக்கு, தனியா, திப்பிலி, ஓமம், ஏலக்காய் தட்டிப் போட்ட பானம் போன்றவற்றை அருந்தலாம். விட முடியாத பட்சத்தில் காலையில் காபியும், மாலையில் தேநீரும் அளவோடு அருந்தி, உள்ளத்திற்கு உவகை ஊட்டலாம். திரிதோஷங்களாகிய வாத, பித்த, கபங்களின் சமநிலைப்பாடே ஆரோக்கியம். அவற்றில் ஏற்படும் உயர்வும் தாழ்வும் நோய் வருவதற்குக் காரணமாகின்றன. இவை இரண்டும் மாறுபட்ட சுவையுடையவையாக இருந்தாலும், இவற்றில் எது உடலுக்கு நல்லது என்ற ஓர் ஆராய்ச்சியை வல்லுநர்கள் பலகாலம் செய்து அவர்கள் எட்டியுள்ள தீர்மானத்தின்படி, தேநீரே காபியை விட நல்லது என்பதாகும். பல மூலிகைகளின் கலப்பினைக்கொண்டு தற்சமயம் வெளிவரும் தேநீர்த் தூளை தேநீராக்கிப் பருகுவதால், ஆரோக்கியத்திற்கு குந்தகம் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
 
 (தொடரும்)

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.