/

எது முடியுமோ, அதைச் செய்யுங்கள்!

மாலையில் சிறிதளவே இதமான உணவை உட்கொண்டு அமைதியான மனதுடன் சுத்தமாக இருந்து ஆண்டவனை நினைத்துக்கொண்டு

News image
Updated On :9 செப்டம்பர் 2025, 5:11 am

எஸ். சுவாமிநாதன்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

முற்காலத்தில் ஆயுர்வேத முறைப்படி மக்களின் வாழ்க்கைமுறை எவ்வாறு இருந்தது? தற்போது அதை கடைப்பிடிப்பது எந்த அளவிற்கு சாத்தியமாகும்? அவர்களுடைய ஆரோக்கிய ரகசியம் என்ன? அவற்றில் கடைப்பிடிக்கக் கூடிய சிலவழிகள் எவை?

-அ. சைலேந்த்ரா, கும்பகோணம்.

மாலையும், இரவும் மனிதர்களுடைய நல்ல உறக்கத்திற்கு ஆதாரமாக அமைவதாக அஷ்டாங்கஸங்க்ரஹம் எனும் ஆயுர்வேத நூல் குறிப்பிடுகிறது. அதுபற்றிய வர்ணனையில் அந்நூல் கீழ்க்காணும் வகையில் சில உபதேசங்களை மனிதர்களுக்கு அளித்திருக்கிறது.

மாலையில் சிறிதளவே இதமான உணவை உட்கொண்டு அமைதியான மனதுடன் சுத்தமாக இருந்து ஆண்டவனை நினைத்துக்கொண்டு தனது படுக்கைக்குச் செல்ல வேண்டும். படுக்குமிடம் சுத்தமாகவும், ஜனக்கூட்டம் இல்லாததாகவும், தனக்கு வேண்டிய இரண்டு மூன்று உறவினர்களை மட்டும் கொண்டதாவும் இருக்க வேண்டும். தக்க தலையணையுடன் நன்கு பரப்பப்பட்டு மேடு பள்ளம் இல்லாத முழங்கால் உயரமுள்ள மெத்தென்ற சுகமான படுக்கையில் படுக்க வேண்டும். கிழக்கு அல்லது தெற்கில் தலை வைத்து, பெரியோர்கள் பக்கம் கால் நீட்டாமல், இரவின் முற்பகுதியிலும், பிற்பகுதியிலும் அறத்தையே நினைத்து காலத்தைக் கழிக்க வேண்டும் அதாவது உறங்கவேண்டும் என்று கூறுகிறது.

நம் முன்னோர்கள் ஆரோக்கியமுள்ள நிலையில் தன் ஆயுளைக் காக்கும் பொருட்டு ப்ராம்ம முகூர்த்தத்தில் அதாவது விடியற்காலை நான்கு முதல் ஐந்திற்கு இடையிலான காலம் தனது ஜீரணநிலையையும், அஜீரண

நிலையையும் கவனித்துக் கொண்டு விரைவாக படுக்கையைவிட்டு எழுந்து கொள்வர். மலத்தையும் சிறுநீரையும் பலவந்தமாக முயற்சி செய்து கழிக்கமாட்டார்கள்.

ஆல், வேங்கை, எருக்கு, கருங்காலி, புங்கு, அலரி, ஆச்சாமரம், கருவேலம், நாயுருவி, ஜாதிபூச்செடி, மருதமரம் இவற்றின் குச்சிகளையும், கசப்பு, உவர்ப்பு, துவர்ப்புச் சுவையுள்ள இத்தகையச் செடிகளின் வேர்களில் ஒன்றை பல் துலக்கப் பயன்படுத்தினர். காலையிலும் உணவிற்கு பிறகும் பல் துலக்க வேண்டும். த்ரிவர்க்கம் எனப்படும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (த்ரிபலா), சுக்கு, மிளகு, திப்பிலி (த்ரிகடு), லவங்கம், லவங்கப்பட்டை, ஏலரிசி (த்ரிஜாதகம்) எனும் மூன்றுவகையான தூள்களை தேனுடன் கலந்து பற்களின் மீது பல் ஈறுகளைப் பாதிக்காமல் துலக்கினர். பல் துலக்கிய பிறகு நாக்கு வழிக்கும் கருவியால் நாக்குக்கு துன்பமிழைக்காமல் வழித்தனர். இதனால் வாயிலுள்ள அழுக்கு நீங்குகிறது. நாக்கில் ருசி, மலர்ச்சி, லேசான தன்மை ஆகியவை ஏற்படுகின்றன. அஜீரணம், வாந்தி, மூச்சிரைப்பு, இருமல், காய்ச்சல், முகபாரிச வாயு, நாவறட்சி, வாய்ப்புண் மற்றும் இதயம், கண்கள், தலை, காது நோயுள்ளவர்கள் பல் துலக்கமாட்டார்கள்.

பிறகு தேவர்களையும், முதியோர்களையும் வணங்கி மங்களமான சொற்களைக் காதால் கேட்டு, அதன் பிறகே மற்ற காரியங்களில் ஈடுபடுவர். அஞ்ஜனக்கல் கொண்டு தயாரிக்கப்பட்ட கண்மையை நாள்தோறும் கண்களுக்குத் தீட்டிக்கொண்டனர். அது கண்களுக்கு இதமானது. அணுதைலம் எனும் மருந்தை இரண்டு முதல் நான்கு சொட்டுகள் மூக்கினுள் விட்டுக்கொண்டு அது வாய்ப்பகுதிக்கு வந்ததும் துப்பிவிடுவர். இதனால் நன்கு தெளிந்த முகம், விரிந்த மார்பு, தோள், நீண்ட கழுத்து வாயில் நறுமணம், குரலில் இனிமை, புலன்களின் தூய்மை, சுருக்கமற்ற முகம், நரைக்காத முடி முதலியவற்றைப் பெற்றனர். முகத்தில் மங்கு ஏற்படாது. அதன் பிறகு இளஞ்சூடான வெந்நீரைக் கொண்டு வாய்கொப்பளிப்பதால் உதடு வெடித்து கடினமாதல், முகவறட்சி, பல் வலி, குரல் தடைபடுதல் போன்ற உபாதைகள் அனைத்தும் அகலுகின்றன. கருங்காலி, பாலுள்ள மரம், கருவேலம் இவற்றின் கஷாயத்தினால் வாய் கொப்பளித்து வாயில் அருவருப்பு, ருசியின்மை, அழுக்கு, துர்நாற்றம், நீர் வடிதல் இவற்றையெல்லாம் நீக்கிக் கொண்டனர்.

இவற்றில் எவையெல்லாம் உங்களால் முடியுமோ, அவற்றையெல்லாம் கடைப்பிடித்து ஆரோக்கியம் பெறலாம்.

(தொடரும்)

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.