/

கண் நோய்கள் வராமல் தடுப்பது எப்படி?

இன்றையச் சூழலில் பிறக்கும் குழந்தையாகட்டும், பெரியவர்களாகட்டும் பலரும் கண் நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கான காரணங்களையும், நிவாரணங்களையும் ஆயுர்வேதம் எடுத்துக் கூறுகிறதா?

News image
Updated On :9 செப்டம்பர் 2025, 5:11 am

எஸ். சுவாமிநாதன்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்

இன்றையச் சூழலில் பிறக்கும் குழந்தையாகட்டும், பெரியவர்களாகட்டும் பலரும் கண் நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கான காரணங்களையும், நிவாரணங்களையும் ஆயுர்வேதம் எடுத்துக் கூறுகிறதா?

- செஞ்செழியன், நாகப்பட்டினம்.

தாய் தந்தையரின் விந்தணு மற்றும் சினைமுட்டையில் ஏற்படும் பீஜதோஷங்களினால் அவர்களுக்கு வரக்கூடிய சந்ததிகளுக்கு கண்களுக்கு கெடுதல் ஏற்படுகிறது. இதை குணப்படுத்துதல் மிகக் கடினம். திருமணமான பெண்கள் மாதவிடாய் நாட்களில் அனுசரிக்க வேண்டிய முறைகளை விட்டு செய்யக் கூடாதவற்றைச் செய்தால் அப்பெண்ணிற்கு பிறக்கும் குழந்தைகளுக்கு உடலிலும் மனதிலும் பலவிதநோய்கள் கண்டிப்பாய் உண்டாகின்றன. கருவுற்றிருக்கும் காலங்களில் தாயானவள் மசக்கைகளை பூர்த்தி செய்து கொள்ளாவிடினும் தாயாரின் தவறான உணவுமுறைகளாலும் மனதில் ஏற்படும் பயத்தாலும், கண்ட மருந்துகளைச் சாப்பிடுவதாலும், பால் தேவையான அளவு பருகாததாலும், அவள் குழந்தைக்கு கண்நோய் வர வாய்ப்புகள் இருக்கின்றன.

வாழ்க்கையில் கண்களைக் கெடுக்கும் சில தவறான செயல்கள்: பொது காரணங்கள்:

• மலம், சிறுநீர் ஆகியவற்றின் உந்துதல் ஏற்பட்டவுடன் கழிக்காமல் வலுக்கட்டாயமாக அடக்குதல்.
• காலணியின்றி வெறும் கால்களால் நடத்தல்.
• வெயில் தலையில் படும்படி நடந்து செல்லுதல்.
• கால் பாதங்களை அடிக்கடி கழுவாதிருத்தல்.
• தலைக்கும் பாதங்களுக்கும் எண்ணெய் தேய்த்துக் கொள்ளாதிருத்தல்.
• காலையில் சூரிய உதயம் ஏற்படும் முன்பே துயில் எழாமல் தூங்குதல்.

அயோகம்:
• கண்களுக்கு வேலை அடியோடு இல்லாமல் எப்பொழுதும் மூடியே வைத்தல்
• உணவில் சத்துக் குறைவு.
• அதிக புளி, காரம் போன்ற பொருட்களை உட்கொள்ளுதல்.
• கோப, தாப, துயரங்கள்.
• தலையில் அடிபடுதல்.
• தலையில் பெரும்பாரத்தைச் சுமத்தல்.
• தலையில் அதிக சூடான தண்ணீரை ஊற்றிக் கொள்ளுதல்.
• புகையில் அதிக காலம் இருத்தல்.
 • புகைபிடித்தல்.
• வெயில் அல்லது நெருப்பின் அருகிலிருந்து தலை சூடாக இருக்கிறபோது சூடு ஆறுவதற்கு முன் குளிர்ந்த தண்ணீரில் மூழ்குதல் போன்றவை கண்கள் பழுதுபடக் காரணங்கள் ஆகின்றன.

அதியோகம்:
• கண்களை கூசச் செய்யும், மிக அதிக வெளிச்சம் தரும் விளக்கின் அருகில் படித்தல், வேலை செய்தல்.
• பூதக்கண்ணாடி வழியாக வெகுநேரம் தொடர்ந்து உற்றுநோக்குதல்.
• கண்ணால் தாங்கமுடியாத அதிக சக்தியுள்ள மூக்குக் கண்ணாடியின் உபயோகம்.

மித்யாயோகம்:

• கொலை போன்ற பயங்கரக் காட்சிகள், ஆபாசக் காட்சிகள் போன்றவற்றைத் தொலைக்காட்சியில் காணுதல் பார்ப்பவரின் மனதில் அச்சமோ, கிளர்ச்சியோ ஏற்படுத்தும் என்று மட்டும் எண்ண வேண்டாம். பார்க்கும் கருவியான கண்ணுக்கும் கெடுதலைச் செய்கிறது.

• நல்ல ஒளியையும், கடும் இருளையும் நிமிடத்திற்கு நிமிடம் மாற்றி மாற்றி பார்வையிடலும் கண்ணைக் கெடுக்கும் மித்யா யோகமாகும்.

விஷ வாந்தி பேதி (காலரா), அம்மைக்காய்ச்சல் முதலியன ஒட்டுவார் ஒட்டியென சூறையாடும் வியாதிகளை "ஸீரம் வேக்ஸைன்' ஊசிகளின் மூலம் ஓரளவு தடுத்துக் கொள்ள வழியிருப்பது போல் கண்நோய்கள் வராமல் தடுக்க ஊசி மருந்து ஒன்றும் கிடையாது. அதனால் கண் பார்வையை பழுதுபடுத்தும் காரணங்களை அகற்றுவதே கண்நோய் தடுப்புமுறையாகும்.

உணவில் பொன்னாங்கண்ணிக் கீரை, ஊசிப் பாலைக் கிழங்கு, கேரட், பால், நெய், தேன், வெண்ணெய் ஆகியவை சீரான அளவில் சேர்த்துக் கொள்ளுதல், ஆயுர்வேத மருந்தாகிய த்ரிபலா சூரணத்தை இரண்டரை கிராம் வீதம் எடுத்து 5 மில்லி லிட்டர் தேன் மற்றும் 2 ணீ கிராம் த்ரைபலக்ருதம் எனும் நெய்மருந்தைக் குழைத்து இரவில் படுக்கும் முன் தொடர்ந்து சாப்பிட்டு வர கண் நரம்புகள் மற்றும் பார்வை வலுப்பெறும். கண்நோய்கள் வராமல் தடுப்பதற்கும் ஏற்ற மருந்தாகும். ஆயுர்வேத மருத்துவமனைகளில் செய்யப்படும் மூக்கில் மருந்துவிடும் சிகிச்சைமுறை, கண்களில் கட்டி நிறுத்தப்படும் மூலிகை நெய் சிகிச்சை முறை போன்றவை மூலம் பல கண்நோய்களையும் நம்மால் குணப்படுத்திக் கொள்ள முடியும். வராமலும் தடுத்துக் கொள்ள முடியும்.
(தொடரும்)

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை -  600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.