வாதமும் ரத்தமும் சீற்றமடைந்தால்...!
என் வயது 56. எனது 30 வயதில் சரவாங்கி என்ற வியாதி வந்தது. முழங்கால்கள் இரண்டையும் முன்னும், பின்னும் நகர்த்த முடியாது.


என் வயது 56. எனது 30 வயதில் சரவாங்கி என்ற வியாதி வந்தது. முழங்கால்கள் இரண்டையும் முன்னும், பின்னும் நகர்த்த முடியாது. இரண்டு கை பெருவிரல்களும் மேல்நோக்கி வளைந்துவிட்டது. வலது கை நடு விரல் முன் பக்கமாக வளைந்து வருகிறது. இரவில் தூங்கி எழும்போது காலையில் பல் எகிறிலிருந்து இரத்தம் வருகிறது. இதற்கு ஆயுர்வேதத்தில் தீர்வு என்ன?
சி.மஹேஸ்வரி. கோபிசெட்டிபாளையம்.
சரவாங்கி உபாதை ஏற்படுவதற்கான காரணங்களை மாதவநிதானம் எனும் ஆயுர்வேதநூல் கீழ்காணும் வகையில் விரிவாக எடுத்துரைக்கிறது. உணவில் அதிக அளவில் உப்பு, புளி, காரம், வினிகர் சேர்க்கப்படும் ஊறுகாய், நெய்ப்பு, சூடு மற்றும் எளிதில் செரிக்காத உணவுவகைகளைச் சாப்பிடுதல், பழைய காய்கறிகள் உலர்ந்துபோன நிலையில் உள்ள கிழங்குகள், நீர்ப்பாங்கான இடங்களில் வளரக் கூடிய மிருகவகை மாமிசங்கள், புண்ணாக்கு சாப்பிடுதல், முள்ளங்கி, கொள்ளு, உளுந்து, அதிகம் வேகாத கீரைகள், இறைச்சி, கரும்புச் சாறு, தயிர்சாதம், புளித்த மோர், செரிமானம் ஆகாத நிலையில் மறுபடியும் உணவை உண்ணுதல், அதிகமான அளவில் கோபப்படுதல், பகலில் தூங்குதல், இரவில் கண்விழித்தல் போன்ற உணவு மற்றும் செயல்களால் நம் உடலில் பொதிந்துள்ள வாதமும் இரத்தமும் ஒரு சேர சீற்றமடைகின்றன. அதிக அங்க அசைவுகள் இல்லாத சுகமான வாழ்க்கை வாழ்பவர்கள் செய்யும் தவறான மேற்குறிப்பிட்ட உணவு
வகைகளாலும், உடல் பருமனாக உள்ளவர்கள் செய்யும் இதுபோன்ற தவறான உணவு மற்றும் நடவடிக்கைகளாலும் பெரும்பாலும் வாதமும் இரத்தமும் சீற்றமடைவது இயற்கையே.
சரவாங்கி எனும் உபாதை உருவாவதற்கான காரம், புளி, உப்பு ஆகியவை சேர்ந்த உணவைச் சாப்பிட்டு அதிக தூரம் பயணம் செய்ய வேண்டிய நிர்பந்தச் சூழலில், குடலில் அவ்வுணவானது புளித்துப்போகும் நிலையைப் பெறுவதால், அது உடலில் உள்ள சகல இரத்தத்தையும் வெப்பமடையச் செய்கிறது. இவ்வாறு கோளாறடைந்த இரத்தமானது பயணத்தினால் தளர்ந்துள்ள பாதங்களின் உட்புறக்குழாய்களில் சேர்கிறது. அதே சமயத்தில் கோளாறு அடைந்துள்ள வாயுவோடு அந்த இரத்தம் சேர்ந்து நோயை உருவாக்குகிறது.
இந்த உபாதை தோன்றுவதற்கு முன்பு உடலில் வியர்வை அதிகரிக்கும் அல்லது முற்றிலும் இல்லாமல் போகும். உடல் கறுத்து, தொடுஉணர்ச்சி குறைந்துவரும். முள் குத்தினாலும் சிறிது அடி தாக்கினாலும், வலி கடுமையாயிருக்கும். கணுக்கள் தளர்ச்சியடையும். சோம்பல் அதிகரிக்கும். உடல் இளைக்கும். ஆங்காங்கு கட்டிகள் உருவாகும். முழங்கால், கால், தொடை, இடுப்பு, தோள், கைகள், பாதங்கள் இவற்றில் குடைத்தலும், துடிப்பும், பிளக்கப்படுவது போன்ற வலியும், கனமான உணர்ச்சியும் உண்டாகும். அரிப்பும் அதிகரிக்கும். கணுக்களில் அடிக்கடி வலி உண்டாகி மறையும். உடல் நிறம் மாறி வட்டமான தடிப்புகள் காணும். வாத பித்த கப மற்றும் இரத்தத்தின் சம்பந்தத்தினால் ஏற்படும் இந்த உபாதை அந்தந்த தோஷநிலைகளின் ஆதிக்கத்தை அனுசரித்து அவற்றிற்குத் தக்கவாறு நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தும்.
இந்த உபாதையை இரத்தமும், வாதமும் அதிகமான அளவில் சம்பந்தப்பட்டிருப்பதால் கேடுற்ற இரத்தத்தைச் சிறிது சிறிதாக வெளியேற்ற வேண்டும். இரத்தக்குழாய்களை கீறி கெட்ட இரத்தத்தை வெளிப்படுத்தும் சிகிச்சைக்கு முன்பாக உடலில் போதுமான அளவு நெய்ப்பு தரும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். கெட்ட இரத்தம் வெளியேறிய பிறகு வாயுவினுடைய சீற்றம் பூட்டுகளில் தாக்கியுள்ள நிலையை மாற்றுவதற்காகவும், பூட்டுகளை வலுவுறச் செய்யும் மூலிகை மருந்துகளாகிய க்ஷீரபலா101, மஹாராஸ்னாதி கஷாயம், குடஹரம் கஷாயம், முஸ்தாதி மர்மகஷாயம், பலாகுடூச்யாதி கஷாயம், பூட்டுகளில் வீக்கமிருந்தால் கோகிலாக்ஷம் கஷாயம், தசமூல ஹரீதகி லேஹ்யம் போன்ற தரமான மருந்துகளை மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிடலாம். பிண்ட தைலம் எனும் எண்ணெய்யைப் பூட்டுகளில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து இதமான வெந்நீரில் குளிக்கலாம். மதுயஷ்ட்யாதி தைலம் தலைக்குத் தேய்த்து குளிக்கலாம். இரத்த உற்பத்தி கேந்திரங்களாகிய கல்லீரல் மற்றும் மண்ணீரல் பகுதிகளைச் சுத்தப்படுத்தும் கற்றாழைச்சாற்றை சிறிது மஞ்சள்தூள் மற்றும் தேனுடன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் 10 முதல் 15 கிராம் வரை சாப்பிடலாம்.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை } 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...