குழந்தைகள் ஆர்வமுடன் சாப்பிட...!
என் பேரனுக்கு வயது 3. விருப்பப்பட்டு எதையும் சாப்பிடுவதில்லை. கட்டாயப்படுத்தியோ வீடியோ கேம்ஸ் காண்பித்து ஏமாற்றியோ உணவு கொடுக்க வேண்டியிருக்கிறது.


என் பேரனுக்கு வயது 3. விருப்பப்பட்டு எதையும் சாப்பிடுவதில்லை. கட்டாயப்படுத்தியோ வீடியோ கேம்ஸ் காண்பித்து ஏமாற்றியோ உணவு கொடுக்க வேண்டியிருக்கிறது. பிறந்தபோது அளவு சற்று கூடுதலாக இருந்ததால் ஒளிக்கதிர் சிகிச்சை மூலம் படிப்படியாகக் குறைத்து சரியாக்கினார்கள். ஆனாலும் சரியாகச் சாப்பிடுவதில்லை. இதற்கான சிகிச்சைமுறை என்ன?
ஓ. திருமலை, பெரியார்நகர், சென்னை.
பாசகபித்தம் என்ற ஒரு பித்தம் இரைப்பையில் இருந்து செயல்பட்டு மனிதர்களுடைய உணவைச் செரிமானம் செய்கிறது. இது ஒரு பித்தவடிவமாக நீர்பொருளாக குடலின் உட்புறசவ்வுகளிலிருந்து வழிந்து ஓடிவந்தாலும் அதில் பொதிந்துள்ள ஊடுருவும்தன்மையும் சூடான வீரியமுமே உணவை செரிக்கச் செய்கிறது. இவ்விரு குணங்களையும் ஒளிக்கதிர் சிகிச்சை
மூலமாக சரியாக்கும்படி எடுக்கக் கூடிய முயற்சிகளினால் குறையக் கூடிய வாய்ப்பிருக்கிறது. அதனால் குணங்களின் வாயிலாக இந்த பாசக பித்தத்தை சரியாக்க வேண்டிய கட்டாயச் சூழல் உங்களுடைய பேரனுக்கு ஏற்பட்டிருக்கிறது.
தாய்ப்பாலை நிறுத்திய பிறகு சாரப் பருப்பு, அதிமதுரம், நெல்பொரி ஆகியவற்றை நன்றாகத் தூள் செய்து சர்க்கரை மற்றும் தேன் ஆகியவற்றைக் குழைத்து குழந்தைக்கு அந்த காலங்களில் கிராமங்களில் புகட்டுவார்கள். இப்படிக் கொடுப்பதால் குழந்தைக்கு மகிழ்ச்சியும், பசியும் தூண்டிவிடக்கூடிய சிறப்பான உணவாகவும், மருந்தாகவும் இது செயல்படும். மேலும் வில்வப்பிஞ்சு, ஏலக்காய், சர்க்கரை, நெல்பொரி மாவு ஆகியவற்றைச் சேர்த்து தயாரித்த கொழுக்கட்டையைக் குழந்தைக்கு ஊட்டுவதால் அதுவும் பசியை நன்றாகத் தூண்டிவிடும். மஞ்சள், தேவதாரு, சரள தேவதாரு, யானைதிப்பிலி, கண்டங்கத்திரி, முள்ளுக்கத்திரி, ஓரிலை மற்றும் சதகுப்பை ஆகியவற்றை நன்றாகப் பொடித்து துணியால் சலித்து வைத்துக் கொள்ளக் கூடிய ரஜன்யாதி எனும் சூரண மருந்து விற்பனை செய்யப்படுகிறது. தேன், நெய் இவற்றுடன் கலந்து கொடுக்க, பசியை நன்றாகத் தூண்டிவிடும்.
குடலில் உள்ள வாயுவைக் கீழிறக்கி ஆசனவாய் வழியாக நன்றாக வெளியேற்றும். பேதி, காய்ச்சல், மூச்சிரைப்பு, மஞ்சள் காமாலை, சோகை மற்றும் இருமல் ஆகியவற்றைக் குணப்படுத்தும். பாலகர்களுக்கு ஏற்படும் எல்லாவகையான நோய்களிலும் இந்த சூரண மருந்து உடலுக்கு நல்ல பலத்தையும், நிறத்தையும் ஏற்படுத்தித் தரும். இந்தச் சூரண மருந்தை காலை, மாலை இருவேளை குழந்தைகளுக்குக் கொடுத்து வரலாம்.
லாக்ஷதி குழம்பு என்ற தைல மருந்தை பயன்படுத்துவதின் மூலமாகவும், குழந்தையினுடைய உடல் புஷ்டியையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். இதை உடலில் வெதுவெதுப்பாக தேய்த்துக் குளிப்பாட்ட வேண்டும். வில்வாதிலேஹ்யம், ஜீரக வில்வாதிலேஹ்யம், அஷ்டசூரணம், பஞ்ச தீபாக்னி சூரணம், அரவிந்தாஸவம், பாலாம்ருதம், அக்னிகுமார ரஸம், ஹிங்குவசாதி சூரணம், வைஷ்வானரம் சூரணம் போன்ற பசியைத் தூண்டிவிடக் கூடிய மருந்துகள் பல உள்ளன. குழந்தையினுடைய குடல்தன்மைக்கு ஏற்ப இம்மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி தேர்ந்தெடுத்து சரியான விகிதத்தில் பயன்படுத்தினால் பசியைத் தூண்டி அதன் மூலம் நிரந்தரமான ஆரோக்கியத்தைப் பெறலாம்.
உணவில் மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றைக் கொண்டு ரஸம் தயாரித்து அதனுடைய தெளிவை சூடான பருப்புசாதத்துடன் கலந்து நெய்யும் சேர்த்து பிசைந்து வெதுவெதுப்பாக காலை உணவாக கொடுத்து வர செரிமான கேந்திரத்தைத் தூண்டிவிடச் செய்யும். மாவுப் பண்டங்களாகிய இட்லி, தோசை, தேங்காய் சட்னி, மைதாப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பிரெட், பன், பட்டர் ஜாம், நூடுல்ஸ் வகையறாக்கள் தவிர்க்கப்பட வேண்டியவை. கேரள தேசத்தில் பிரசித்தமான மோர்க்காய்ச்சி எனப்படும் மோரை இளஞ்சூடாக ஆனவுடன் மஞ்சள்தூள் மற்றும் நல்லெண்ணெய்யில் சீரகம், ஓமம், தாளித்து சேர்த்து அன்னமாகச் சாப்பிடுவதின் மூலமாகவும் நல்லதொரு ஜீரண காரியாகச் செயல்பட்டு பேரனுடைய ஆரோக்கியமும், உடல் வனப்பும் கூடும்.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...