/

தேர்தல் வரலாறு - 8: பாரதிய ஜனதா கட்சி - தோற்றமும் வளர்ச்சியும்

வீர் சாவர்க்கரின் இயற்பெயர் விநாயக் தாமோதர் சாவர்க்கர். இவர் 1883-ல், நாசிக் அருகே உள்ள பாகுர் என்ற கிராமத்தில் பிறந்தார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:16 pm

வழக்கறிஞர் சி.பி. சரவணன்

வீர் சாவர்க்கரின் இயற்பெயர் விநாயக் தாமோதர் சாவர்க்கர். இவர் 1883-ல், நாசிக் அருகே உள்ள பாகுர் என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் தனது 11-வது வயதிலேயே, சிறுவர்களைச் சேர்த்து வானரசேனையை உருவாக்கினார். இவர் பள்ளிப்பருவத்தில் திலகர் ஏற்படுத்திய சிவாஜி உற்சவம், கணபதி உற்சவம் போன்றவற்றை முன்னின்று நடத்தினார்.

Story image

1898-ல், மகாராஷ்டிராவில் ராண்ட் மற்றும் ஐர்ஸ்ட் ஆகியோரைக் கொன்றதற்காக சபேகர் சகோதாரர்கள் தூக்கிலிடப்பட்டனர். அது சாவர்க்கரைக் கடுமையாகப் பாதித்தது. அவர் 15-வது வயதிலேயே இந்திய சுதந்தரத்துக்காக துர்கா தேவி முன்பு சபதம் எடுத்தார்.

1909-ல், சாவர்க்கரின் சீடரான மதன் லால் டிங்கரா, லண்டனில் சர். கர்சன் வில்லியைச் சுட்டுக் கொன்றார். நாசிக் கலெக்டர் ஜாக்சன், ஆனந்த் லக்ஷ்மண் கான்ஹரே என்ற இளைஞனால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பின்னர், இந்தியா ஹவுஸ் ஆங்கிலேயரின் கண்காணிப்புக்குக் கீழ் வந்தது. அதனால், ஆங்கில அரசு லண்டனில் இருந்த சாவர்க்கரை 1910-ல் கைது செய்து இந்தியாவுக்கு அனுப்பியது.

இந்தியாவுக்குக் கப்பலில் வரும்போது கப்பலின் கழிப்பறை ஜன்னலை உடைத்துக் கடலில் குதித்து பிரான்ஸ் நாட்டின் மார்செய்ல் துறைமுகத்தை அடைந்தார். அங்கிருந்த ஒரு பிரெஞ்சுக் காவலரால் பிடிக்கப்பட்டு மீண்டும் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீது சட்ட விரோதமாக ஆயுதம் அனுப்பியது, மக்களைத் தூண்டும் விதமாகப் பேசியது என்று குற்றம் சாட்டி 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்தமானுக்கு அனுப்பியது.

கேசவ பலிராம் ஹெட்கேவர் (Keshav Baliram Hedgewar)

1889-ல், நாக்பூரில் பிறந்தவர் கேசவ பலிராம் ஹெட்கேவர். தனது 13-வது வயதில் பிளேக் நோயால் பெற்றோரை இழந்தவர். 1914-ல் மருத்துவப் படிப்பை, கல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரியில் முடித்து, நாக்பூரில் மருத்துவராகப் பணியாற்றினார். நாக்பூரில் மருத்துவ சேவை செய்தாலும், இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டார்.

பால கங்காதர திலகர் போன்றவர்களுடன் சேர்ந்து சமூகப் பணியில் ஈடுபட்டார். பிரிட்டிஷாரின் இந்தியப் பேரரசுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரப் பங்கெடுத்து ஓராண்டு சிறை சென்றார். இந்திய தேசிய காங்கிரஸுடன் கருத்து வேறுபாடு கொண்ட ஹெட்கேவர், ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தை 1925-ம் ஆண்டில் தோற்றுவித்தார்.

Story image

சங்கமானது ஆரம்பிக்கப்பட்ட பத்து வருடங்களுக்குள் வட இந்தியாவில் பெரும் செல்வாக்கு பெற்றது. இதற்கு மிக முக்கியக் காரணம், சாதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்கி "இந்து" என்ற அடையாளத்துடன் ஒன்று சேர்வோம் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

Story image



ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இந்தியாவில் மட்டுமில்லது வெளிநாடுகளிலும் வேறு சில பெயர்களால் இயங்குகிறது. தென்னாப்பிரிக்காவில் தெற்காசிய நண்பர்கள் என்ற பெயரிலும்; மியான்மரில், சனாதன் தர்ம சுயம் சேவக் சங்கம் (எஸ்.டி.எஸ்.எஸ்); மொரீஷியஸில் மொரீஷியஸ் சுயம் சேவக் சங்கம் (எம்.எஸ்.எஸ்), மற்றும் ஐக்கிய அமெரிக்க நாட்டில் இந்து சுயம் சேவக் சங்கம் (HSS) என்ற பெயரில் இயங்குகிறது.

ஹெட்கேவர் இறுதியாக, 1940-ம் ஆண்டில் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்க மாநாட்டில் உரையாற்றினார். பின்னர் கடுமையான நோயின் காரணமாக, ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை எம்.எஸ். கோல்வால்கரிடம் ஒப்படைத்து, 1940-ல் மரணமடைந்தார்.

மாதவ சதாசிவ கோல்வால்கர் 

மாதவ சதாசிவ கோல்வால்கர் (Madhav Sadashiv Golwalkar), 1906-ல் பிறந்தார். குருஜி என்று அனைவராலும் அறியப்பட்டவர். ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத்தின் இரண்டாம் தேசியத் தலைவர்.

Story image



கோல்வால்கர், பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும்போது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவனரும், அதன் முதல் தேசியத் தலைவருமான கே.பி. ஹெட்கேவருடன் நெருங்கிப் பழகியதன் காரணமாக, வாரணாசியில் சங்கத்தின் கிளையை அமைத்தார்.

பின்னர் நாக்பூரில் உள்ள ராஷ்ட்டிரிய சுயம் சேவக் சங்கத்தின் அதிகாரிகள் பயிற்சி முகாமில் கலந்துகொண்டார். 1939-ம் ஆண்டில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுச் செயலர் ஆனார். கேசவ பலிராம் ஹெட்கேவரின் மரணத்துக்குப் பின், 1940 முதல் 1973 வரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமை இயக்குனராகப் பணியாற்றினார்.

கோல்வால்கர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைமை இயக்குனராக இருந்த காலத்தில், நாடு முழுவதும் அமைப்பின் கிளைகள் நிறுவப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ்., மூன்று முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டது. 1948-ல் காந்தி படுகொலை செய்யப்பட்டபோது, அவசர நிலை (1975 - 77) அமலில் இருந்தபோது, 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது இந்த அமைப்பு தடைசெய்யப்பட்டது.

சியாமா பிரசாத் முகர்ஜி (Syama Prasad Mukherjee)

Story image

சியாமா பிரசாத் முகர்ஜி, கல்கத்தாவில் 1901-ல் பிறந்தார். 1926-ல் இங்கிலாந்து சென்று சட்டம் பயின்று, பாரிஸ்டர் ஆனார். தனது இளம் வயதில் (33 வயதில்) கல்கத்தா பல்கலைக் கழகத்தில் 1934 முதல் 1938 வரை துணைவேந்தராக இருந்தவர்.

1937 – 1941 காலகட்டத்தில் விவசாய-மக்கள் கட்சி மற்றும், முஸ்லிம் லீக் கட்சிகளின் கூட்டணி அரசின்போது, எதிர்கட்சித் தலைவரானார். பின்னர் இந்து மகாசபையில் இணைந்து, மக்களுக்காகக் குரல் கொடுத்தார். 1944-ம் ஆண்டில் இந்து மகாசபையின் தலைவரானார். நேருவின் தலைமையிலான, விடுதலை இந்தியாவின் இடைக்கால நடுவண் அரசில், வணிகம் மற்றும் தொழில் அமைச்சரானார்.

எம்.எஸ். கோல்வால்கருடன் கலந்தாலோசித்து, 1951-ல் பாரதிய ஜன சங்கம் என்ற கட்சியைத் தோற்றுவித்து, அக்கட்சியின் முதல் அகில இந்தியத் தலைவரானார். 1952-ல் நடந்த முதல் இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், பாரதிய ஜனசங்கம் கட்சி மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் ஒரு தொகுதியில் முகர்ஜி வெற்றி பெற்றார். 

ஜம்மு காஷ்மீர் மாநில அரசுக்குத் தனிக் கொடி, தனிச் சின்னம், தனிப் பிரதமர் இருப்பதை முகர்ஜி கடுமையாக எதிர்த்தார். ஒரு நாட்டில் இரண்டு அரசியல் அமைப்பு சட்டமும், தேசிய சின்னமும் இருக்க இயலாது என வாதிட்டார். மேலும், ஜம்மு காஷ்மீர் மாநில பிரதமரின் அனுமதியின்றி, இந்திய நாட்டுக் குடியரசுத் தலைவரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குள் செல்ல இயலாது என்ற விதியை முகர்ஜி கடுமையாக எதிர்த்தார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்புத் தகுதிகள் வழங்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 370-ஐ நீக்கக் கோரி, முகர்ஜி தலைமையிலான பாரதிய ஜனசங்கம், இந்து மகாசபை மற்றும் ராம ராஜ்ஜிய சபையுடன் இணைந்து குரல் கொடுத்து, சத்தியாகிரகப் போராட்டங்களில் ஈடுபட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலக் காவல் துறையினரால், 1953-ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, விஷக்காய்ச்சலால் மரணமடைந்தார் என காவல் துறை அறிவித்தது. போலீஸ் காவலில் இருந்த சியாமா பிரசாத் முகர்ஜியின் மரண ரகசியம் குறித்து விசாரிக்க, தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் நேரு ஏற்கவில்லை. அதனால் இன்றுவரை முகர்ஜியின் மரண சர்ச்சை தீரவில்லை.

தீனதயாள் உபாத்தியாயா

1942-ம் ஆண்டிலிருந்து ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டார். நாக்பூரில் உள்ள ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத்தின் மாநில அமைப்பில் இரண்டாண்டு பயிற்சிக்குப் பின் முழு நேரப் பிரசாரகர் ஆனார்.

Story image

மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்த, ராஷ்டிர தர்மா எனும் மாத இதழை 1940-ல் தொடங்கினார். பின்னர், பஞ்சஜன்யா எனும் வார இதழையும், சுதேசி எனும் நாளிதழையும் தொடங்கினார்.

1951-ம் ஆண்டில், சியாமா பிரசாத் முகர்ஜி, பாரதிய ஜனசங்க கட்சியை நிறுவியபோது, தீனதயாள் உபாத்தியாயா, கட்சியின் பொதுச் செயலர் ஆனார். 1953-ல் சியாமா பிரசாத் முகர்ஜி காலமான பிறகு, ஜனசங்கம் கட்சியின் தலைவரானார். 1968-ல் ரயில் பயணத்தின்போது அடையாளம் தெரியாத நபரால் கொல்லப்பட்டார்.

அடல் பிகாரி வாஜ்பாய்

1924-ல் குவாலியரில் பிறந்தார். திருமணம் செய்துகொள்ளாதவர். 50 வருட பாராளுமன்ற உறுப்பினரான இவர், மக்களவைக்கு 9 முறையும், மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 4 முறை வெவ்வேறு மாநிலங்களில் (உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், டெல்லி) இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினர். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றி உள்ளார்.

Story image

பாரதிய ஜனசங்கத்தின் தலைவர்களும் தொண்டர்களும் இணைந்து, அடல் பிகாரி வாஜ்பாயைத் தலைவராகக் கொண்ட பாரதிய ஜனதா கட்சி என்ற புதிய கட்சியை, 1980-ல் உருவாக்கினர்.

கட்சியின் தலைவருக்கு அடுத்து துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் செயலாளர்கள் என பலர் உள்ளனர். கட்சியின் உயர்ந்த அதிகாரமுடைய அமைப்பான தேசிய செயற்குழு, நாடு முழுவதும் உள்ள பல தலைவர்களை உள்ளடக்கியது. மாநில அளவிலும் இதைப்போன்றே அமைப்புகளை பா.ஜ.க. கொண்டுள்ளது. பா.ஜ.க.வின் பல தலைவர்கள் ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கில் இருந்தவர்கள். விஷ்வ இந்து பரிஷத், சுதேசி ஜாக்ரன் மஞ்ச் போன்ற இன்ன பிற சங் பரிவார் அமைப்புகளோடு பா.ஜ.க.நட்புறவு கொண்டுள்ளது.

பா.ஜ.க., மகிளா மோர்ச்சா என்ற பெண்கள் அமைப்பையும், பாரதிய ஜனதா யுவா மோர்ச்சா என்ற இளைஞர் அமைப்பையும், பா.ஜ.க. மைனாரிட்டி மோர்ச்சா என்ற சிறுபான்மையினர் அமைப்பையும் உள்ளடக்கியுள்ளது.

லால் கிருஷ்ண அத்வானி

லால் கிருஷ்ண அத்வானி, 1927-ல் கராச்சியில் பிறந்தவர். பாரதிய ஜனதா கட்சி தலைவர்களில் ஒருவர் ஆர்.எஸ்.எஸ்.-லிருந்து பாரதிய ஜனசங்கம், ஜனதா மோர்ச்சா, ஜனதா கட்சி என்று மாறி மாறி ஓடிய அவரின் அரசியல் பாதை மிக நீண்டது. உபாத்யாயாவுக்குப் பிறகு கட்சியை வழிநடத்தும் பொறுப்பு இவரின் கைகளில் வந்து சேர்ந்தது.

வெறும் 2 தொகுதி வெற்றியுடன் ஆரம்பித்த பா.ஜ.க.வின் அரசியல் வெற்றிப்பாதை, அத்வானியின் ரத யாத்திரைகளால் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு உயர்ந்தது. அத்வானியின் வாழ்க்கையின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ளது அரசியல் பக்கங்கள்தான்.

நெருக்கடி நிலை, மிசா காலத்தில் இருந்து மீண்டு, கட்சியைக் கட்டமைத்த தூண்களில் இவரும் ஒருவர். அவரது கட்சி தோல்வியைத் தழுவும்போதெல்லாம் இவரிடமே பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். திறமைசாலி, உறுதியானவர் என்று கட்சியில் அனைத்துத் தரப்பினரிடமும் பெயரெடுத்தவர்.

முந்தைய கட்டுரை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.