கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

கொதிப்பேற்றும் சமூக வலைதளங்கள்...

இதுவரை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களைக் காட்டிலும், 15-வது பேரவைக்கு நடைபெறும் தேர்தல் பல வழிகளில் வித்தியாசத்தை பதிவு செய்கிறது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:09 pm

கு. வைத்திலிங்கம்

இதுவரை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களைக் காட்டிலும், 15-வது பேரவைக்கு நடைபெறும் தேர்தல் பல வழிகளில் வித்தியாசத்தை பதிவு செய்கிறது. தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக கட்செவி அஞ்சல், சுட்டுரை, முகநூல் என பல சமூக வலைதளங்களிலும் பல்வேறு வகையான போட்டிகளை நடத்தி, அதில் பங்கேற்பவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி, அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது.

இதைத் தவிர, இதுவரை இல்லாத அளவுக்கு மாநகராட்சி சார்பில் வழங்கப்படும் ரசீதுகள், மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கு வழங்கப்படும் சீட்டு, பால் பாக்கெட்டுகள், தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய முத்திரை, ஜவுளி மற்றும் வர்த்தக நிறுவனங்களில் துணிப் பைகள் எனப் பல்வேறு வகைகளிலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளது தேர்தல் ஆணையம்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஒருபுறம் இருக்க, தேர்தல் பரப்புரையில அரசியல் கட்சிகளும் சமூக வலைதளங்களை முழுமையாகப் பயன்படுத்தி வருகின்றன. குறிப்பாக, இளம் வாக்காளர்கள் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் அவை அதிகப் பங்கை வகிக்கின்றன.

இதற்காக, அதிமுக, திமுகவில் இணையதளக் குழுவே தனியாக உருவாக்கப்பட்டு, மாவட்ட அளவில் அதற்கான ஆள்களும் நியமிக்கப்பட்டு தேர்தல் பரப்புரையில் இரு கட்சியினரும் ஈடுபடுகின்றனர். இதைத்தவிர, தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி, பா.ம.க., பாரதிய ஜனதா கட்சி சார்பிலும் சமூக வலைதளங்களைக் கொண்டு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், ஒவ்வொரு கட்சியின் தேர்தல் அறிக்கை, பிரசார பொதுக்கூட்டங்களில் நிகழ்த்திய உரை போன்றவற்றைக் கேலி செய்து பதிலுரைகளும், கேலிச் சித்திரங்களும் அதிகளவில் முகநூலில் பதிவிடப்படுகின்றன. இதற்கு சம்பந்தப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த இணையதளக் குழுவினர் பதிலடி அளித்தாலும், விமர்சனங்கள், கேலிச் சித்திரங்கள் அதிகளவில் பதிவிடப்படுகின்றன.

இதுஒருபுறம் இருக்க, கட்செவி அஞ்சல் மூலம் வேட்பாளர்களுக்கு ஆதரவான கருத்துகள் ஒரு குழு மூலம் பதிவிடப்பட்டு, அதன்மூலம் பல குழுக்களுக்கு தகவல் பரிமாறப்படுவதும் அதிகரித்து வருகிறது.

அந்தத் தொகுதி வேட்பாளர் மாற்றப்படுவார், இந்தக் கட்சியில் இத்தனை வேட்பாளர்கள் மாற்றப்படலாம், 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே கூட்டணியிலிருந்து தற்போது வேறு வேறு அணியில் இருக்கும் தலைவர்கள், அப்போது பேசிய பேச்சின் விவரத்தை பதிவிடுதல் போன்றவை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகின்றன. அதுபோல, முகநூலில் வெளியான பழைய புகைப்படங்களை கட்செவியிலும் பதிவு செய்தலும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இதுபோல, தேர்தல் பொதுக்கூட்டங்களில் தலைவர்களில் பங்கேற்று பேசிய போது நிகழ்ந்த நிகழ்வுகளை நையாண்டி செய்து வெளியிடப்படும் விடியோ காட்சிகள் முகநூலிலும், கட்செவி அஞ்சலிலும் அதிகளவில் பதிவிடப்படுவதோடு, அதிகளவில் பார்வையாளர்களையும் ஈர்க்கிறது.

கட்செவி அஞ்சல் மூலமாக கடந்த வாரத்தில் திருச்சியில் வெளியான ஒரு தகவல் ஒரு கட்சி வேட்பாளரைப் பதறடித்துவிட்டது என்றால் எந்தளவுக்கு முகநூல், கட்செவிஅஞ்சலின் பயன்பாடு இருக்கிறது என்பதை உணர முடிகிறது. திருச்சி மாவட்டத்திலுள்ள தொகுதியில் போட்டியிடும் ஒரு கட்சியின் வேட்பாளர் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த போது, நாளிதழ் ஒன்றின் செய்தியாளர், அந்த வேட்பாளரைச் சந்தித்து, நீங்கள் கட்சி மாறிய அரசியல்வாதி ஒருவரை மிரட்டியதாக கட்செவி அஞ்சலில் தகவல் வேகமாகப் பரவுகிறதே, இது உண்மையா எனக் கேட்க, நான் அவரை எதற்கு மிரட்ட வேண்டும், பிரசாரத்துக்கு செல்லவே நேரம் போதவில்லை, ஆளை விடுங்க எனக் கூறி, வேகமாகப் புறப்பட்டுச் சென்றார்.

முகநூல், கட்செவி அஞ்சல் மூலம் செய்திகள் பரவி, பலன் எந்தளவுக்கு கிடைக்கிறதோ, அதுபோன்ற உறுதிப்படுத்தப்படாத, ஊகமாக வரும் செய்திகளும் அதிகளவில் பரவி பலருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. எனவே, கட்செவி அஞ்சல் மூலம் நல்ல செய்தி வராவிட்டாலும் பரவாயில்லை, பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான செய்திகள் வந்தால் பெரும் தொல்லை ஏற்படும் என்ற அச்சத்தில் பல வேட்பாளர்கள் தேர்தல் நேரத்தில் செல்லிடப் பேசியில் நீண்ட நேரம் பேசுவதில்லை, முகநூல், கட்செவி அஞ்சல் மூலம் பதிவு செய்தலையும் தவிர்த்து வருகின்றனர்.

-கு. வைத்திலிங்கம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.