/

தேர்தல் வரலாறு – 6: கம்யூனிச இயக்கத்தின் தோற்றம்

சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்தபோது, பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். அதன்பிறகு இத்திட்டம் கைவிடப்பட்டது. ஆக, தமிழகம் முழுவதும் பெருந்தலைவர் காமராஜர் தொடங்கிய மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி இவர்தான்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:58 pm

வழக்கறிஞர் சி.பி. சரவணன்

கார்ல் மார்ஸ், 1818-ல் ஜெர்மனியில் பிறந்தவர். இவரது தந்தை வசதி படைத்த வழக்குரைஞர் என்பதால், 1830-ம் ஆண்டு வரை தனிப்பட்ட முறையில் மார்க்ஸுக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. பதினேழாவது வயதில் சட்டம் பயில பான் பல்கலைக் கழகம் சென்றார். பிறகு, பெர்லின் பல்கலைக் கழகத்தில் வரலாறு, மெய்யியல் ஆகிய துறைகளில் பயின்ற கார்ல் மார்க்ஸ், யெனா பல்கலைக் கழகத்தில் மெய்யியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

Story image

காரல் மார்க்ஸ்

Story image

பிரெட்ரிக் எங்கெல்ஸ்

மார்க்ஸ் சில காலம் இதழியல் துறையில் இருந்தார். பத்திரிகையில் தீவிர அரசியல் கருத்துகளை எழுதியதன் காரணமாக, பத்திரிகைத் துறையில் அவரால் நீடிக்க முடியவில்லை. பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்குச் சென்ற அவர், 1844-ல் பிரெட்ரிக் எங்கல்ஸை சந்தித்தார்.

ஒருமித்த கருத்தும், திறமையும் மிக்கவர்களாக இருந்த இவர்கள் இடையே நட்பு மலர்ந்தது. தனிப்பட்ட முறையிலான நட்பும், அரசியல் நட்பும் இருவரின் இறுதி வரை நிலைத்திருந்தது.

பாரிஸில் இருந்தபோது ஒரு பணக்காரரின் 21 வயது மகள் ஜெனியுடன் மார்க்ஸுக்கு காதல் மலர்ந்தது. ஆனால் அப்போது மார்க்ஸுக்கு வயது 17. காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தபோதும், எட்டு ஆண்டுகள் கழித்து ஜெனியை மார்க்ஸ் திருமணம் செய்துகொண்டார்.

பத்திரிகைத் துறையில் மார்க்ஸுக்கு ஓரளவு வருமானம் வந்தாலும், தன்னுடைய வாழ்வின் பெரும் பகுதியை லண்டனில் ஆராய்ச்சியிலும், அரசியல், பொருளியல் குறித்த நூல்களை எழுதுவதிலும் கழித்தார்.

மார்க்ஸின் வறுமை உணர்ந்த பிரெட்ரிக், அவருக்கு பண உதவி செய்துவந்தார். ஆனாலும் அது போதாமல் வெளியில் நிறைய பேரிடம் மார்க்ஸ் கடன் வாங்கி காலம் தள்ளினார். ஒரு கட்டத்தில், கடன் கொடுத்தவர்களை நினைத்து பயத்துடன் வாழ வேண்டிய சூழலும் ஏற்பட்டது. அத்துடன், தன்னுடைய ஆடைகளையும் அடமானம் வைக்க வேண்டிய நிலையும் அவருக்கு ஏற்பட்டது.

எங்கல்ஸ் தனது தந்தையின் மரணத்துக்குப் பிறகு, குடும்ப வணிகத்தில் கிடைத்த வருமானத்தில் மார்க்ஸுக்கு 350 பவுண்டுகள் ஓய்வூதிகம் கிடைக்க ஏற்பாடு செய்தார். இந்தப் பணம் மார்க்ஸுக்கு ஓரளவுக்குப் போதுமானதாக இருந்தது.

இந்த நிலையில், பல பத்திரிகைகளில் அவர் எழுதி வந்தபோதும் குறிப்பிடத்தக்க வருமானம் என்று சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை. ஜெனியின் உறவினர் இறந்தபோதும், ஜெனியின் தாய் இறந்தபோதும் மரபுரிமையாக மார்க்ஸுக்கு ஓரளவு பணம் கிடைத்தது.

வருமானம் குறைவான நிலையில், லண்டனின் புறநகர்ப் பகுதியில் மார்க்ஸும் ஜெனியும் குடியேறி, சமூகத் தகுதியைக் கருத்தி ஓரளவு நடுத்தரக் குடும்பமாகவே வாழ்ந்தனர்.

*

எங்கல்ஸ், 1820-ம் ஆண்டு பிறந்தார். சிறு வயதிலேயே மதங்கள் மீதும் முதலாளித்துவத்தின் மீதும் வெறுப்பு கொண்டிருந்தார். மான்செஸ்டரில் இருந்த தனது தந்தையின் நூற்பாலையில் பணியாற்றியபோது, முதலாளித்துவத்தின் கோர முகத்தை அவர் கண்டுணர்ந்தார்.

ஜெர்மனிக்குச் செல்லும் வழியில் பாரீஸில் கார்ல் மார்க்ஸை சந்தித்து அவருடன் நட்பை வளர்த்துக்கொண்டார். ஒரே சிந்தனையில் இருந்த இருவரின் நட்பும் நாளடைவில் வலுப்பட்டது. வறுமையில் வாடிய மார்க்ஸுக்கு உதவி செய்வதற்காகவே, தனது தந்தையின் நூற்பாலையில் அவர் பணியாற்றினார்.

அந்த ஆலையில் தனக்கு இருந்த பங்கை 1869-ல் விற்று, மார்க்ஸுக்கு உதவி செய்தார். அத்துடன், தனது வசிப்பிடத்தையும் மார்க்ஸ் வீட்டுக்கு அருகிலேயே மாற்றிக்கொண்டார். எந்த ஒரு விஷயத்திலும் மார்க்ஸையே முன்னிலைப்படுத்தினார். மார்க்ஸின் பொதுவுடைமைக் கருத்துகளுக்கு வலு சேர்க்கும் வகையில், பல புதிய கருத்துகளை அவரும் வெளிப்படுத்தினார்.

*

கம்யூனிச அறிக்கையில் கூறப்பட்டுள்ள கொள்கைகள்

கம்யூனிஸ்ட் அறிக்கை லண்டனில் வெளியிடப்பட்டது.

பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சூழ்நிலைகளைப் பற்றிய கொள்கை விளக்கமே கம்யூனிஸம்.

பாட்டாளி வர்க்கம் என்பது முழுவதும் தனது உழைப்பை விற்பனை செய்து வாழும் ஒரு வர்க்கம்.

தனி மனிதனின் சொத்துகளை அழிப்பதன் மூலமும், தனி மனிதனின் உழைப்பின் மூலம் தனி நபர்கள் சொத்து சேர்ப்பதை எதிர்க்கும்.

மூலதனம் என்பது தனி மனிதச் சொத்து அல்ல; அது சமூகச் சொத்து.

இது தவிர,

அனைத்துவகையான நில சொத்துகளின் உபயோகம் மற்றும் வாடகை, பொதுமக்களின் பயன்பாட்டுக்குச் செல்ல வேண்டும்.

கடுமையான வருமான வரி இருக்க வேண்டும்.

அனைத்து வாரிசுரிமைகளும் நீக்கப்பட வேண்டும்.

கலகக்காரர்கள் மற்றும் இடம்பெயர்ந்தோரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.

தொலைத்தொடர்பு, போக்குவரத்து போன்றவற்றை அரசே நடத்த வேண்டும்.

தொழிற்சாலை, உற்பத்தி போன்றவற்றையும் அரசே செய்ய வேண்டும். புறம்போக்கு நிலங்களை சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

தேசிய வங்கிகள் மூலம், அனைத்து கொடுக்கல் வாங்கல்களையும் அரசே செய்ய வேண்டும்.

அரசு சார்பில் தொழிலாளர், வேளாண் துறை தொடங்க வேண்டும்.

உற்பத்தி மற்றும் வேளாண்மைத் துறையை இணைக்கவும், நகர்புற, கிராமப்புற பாகுபாட்டை களையவும், மக்கள் பரவலை சீராக்கவும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிகளில் இலவசக் கல்வி கொடுக்கப்பட வேண்டும். குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் கல்வியில் தொழில் பயிற்சி கற்றுக்கொடுக்க வேண்டும்.

இதெல்லாம், கம்யூனிஸ கொள்கை அறிக்கையில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள்.

இந்தியாவில் கம்யூனிச இயக்கம்

இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் ஆட்சி மற்றும் அதன் சுரண்டல்கள் பற்றி அக்கறை கொண்டதுடன், அதுகுறித்த விரிவான பதிவுகளையும் கார்ல் மார்க்ஸ் செய்துள்ளார்.

1871-ல், மார்க்ஸ் தலைமையில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் பேரவைக் கூட்டத்தில் எங்கெல்ஸும் கலந்துகொண்டார். அக்கூட்டத்தில், இந்தியாவிலிருந்து ஒருவர் தனக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் கிளையை இந்தியாவில் அமைக்க அதிகாரம் வழங்கும்படி கேட்டு வந்திருந்த ஒரு கடிதம் வாசிக்கப்பட்டது.

*

1907-ல், இங்கிலாந்தில் வாழ்ந்த இந்தியப் பெண்மணி மேடம் காமா, எஸ்.ஆர். ராணா இருவரும், லெனின் பங்கேற்ற ஜெர்மனி மாநாட்டில் கலந்துகொண்டனர்.

*

1917-ல் ரஷ்யாவில் நவம்பர் புரட்சி ஏற்பட்ட காலத்தில், அகமதாபாத் பஞ்சாலைகள் பாவு ஓட்டுவோர் சங்கம் அமைக்கப்பட்டாலும், 1918-ல் சென்னையில் அமைக்கப்பட்ட “மதராஸ் தொழிலாளர்கள் சங்கம்”தான், முறையான முதல் தொழிற்சங்கமாகும்.

Story image

வீரேந்திரநாத் சட்டோபாத்தியாயா

இந்தியாவில், நவம்பர் புரட்சியால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸத்துக்குத் திரும்பியவர்களில் வீரேந்திரநாத் சட்டோபாத்தியாயா, எம்.பி.பி.டி. ஆச்சார்யா, எம்.என். ராய், அபானி முகர்ஜி, முகம்மது அலி செப்பாசி, ரகமத் அலி கான், சவுகத் உஸ்மான், ரத்தன் சிங், ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

Story image

எம்.பி.பி.டி. ஆச்சார்யா

இவர்களில், ரஷ்ய கம்யூனிஸ்ட் தலைவர்களோடு (போல்ஷ்விக்) தொடர்பில் இருந்தவர் கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் சகோதரரான வீரேந்திரநாத் சட்டோபாத்தியாயாதான்.

1919-ல், எம்.பி.பி.டி. ஆச்சார்யா, கிரெம்ளினில் லெனினைச் சந்தித்துப் பேசியது இந்தியக் கம்யூனிஸ வரலாற்றில் முக்கிய நிகழ்வாகும். அவருடன் ராஜா மகேந்திர பிரதாப், எம்.பாகதுல்லா, அப்துல் திலீப் சிங்கில் ஆகியோர் இருந்தனர்.

அப்பொழுது, மகேந்திர பிரதாப்பிடம், “எங்கள் நாட்டில்கூட டால்ஸ்டாய் போன்றோர் மதத்தின் மூலம் மக்களின் விடுதலைக்கு வழிகாணலாம் என நினைத்தார்கள். அது நடக்கவில்லை. இந்தியா திரும்பியபின் வர்க்கப் போராட்டத்தை பிரசாரம் செய்யுங்கள் என்று லெனின் கூறினார். இதுவே, இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் வலுவாக ஊன்ற அடிகோலியது.

கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது மாநாடு 1920-ல் மாஸ்கோவில் நடைபெற்றது. அதில், எம்.பி.பி.டி. ஆச்சார்யா கலந்துகொண்டார். அதன்பின் 1920, அக்டோபர் 17-ம் நாள் தாஸ்கென்ட்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India) உருவானது. எம்.என். ராய், ஈவிலின் டிராட்ட்ராய், ஏ.என். முகர்ஜி, ரோசா பில்டிங்வ், முகமது அலி, முகம்மது ஷாபிக் ஷித்திக் போன்றோர் அடிப்படை உறுப்பினர்களாக இருந்தனர்.

1920, அக்டோபர் 31-ல் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) ஆரம்பிக்கப்பட்டது. 1921 நவம்பரில், வேல்ஸ் இளவரசர் வருகையை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்யப்பட்டது. இதுவே, AITUC-வின் பொது வேலைநிறுத்தம் ஆகும்.

1934 ஜூலை 23-ல், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சட்டவிரோதமான கட்சி என்று தடை செய்யப்பட்டது.

1968 ஏப்ரலில், வி. சுந்தரய்யாவை பொதுச் செயலாளராகக் கொண்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவானது.

சிங்காரவேலர்

Story image

சிங்காரவேலர், 1860 பிப்ரவரி 18-ல் பிறந்தார். பிற்படுத்தப்பட்ட மீனவர் சமூகத்தைச் சார்ந்த ஓரளவு வசதியான குடும்பம். மாநிலக் ல்லூரியில் பட்டப் படிப்பு. அதன்பின், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்து, வழக்குறைஞர் ஆனார். ஆங்கிலம், தமிழ் தவிர, இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளும் அவர் கற்றார். தனது வீட்டிலேயே 20 ஆயிரம் புத்தகங்களைக் கொண்ட நூலகம் வைத்திருந்தார்.

வசதியான குடும்பம், வழக்கறிஞர் தொழிலும் பேரும் புகழும் பணமும் என்று இருந்தாலும், அவர் ஏழை எளிய மக்கள் படும் கஷ்டங்களைப் பற்றி சிந்தித்தார். மக்களுக்காகப் பாடுபட்ட அவர் சிறை சென்று மீண்ட பிறகு, அவருடைய வீட்டை அன்றைய ஆளுநர் வெலிங்டன் பிரபு ஆக்கிரமித்து அங்கு தன்னுடைய மனைவி பெயரில் ஒரு கல்வி நிலையத்தை நிறுவினார். அதுதான், இன்றைய வெலிங்க்டன் சீமாட்டி கல்வியியல் நிறுவனம்.

ஆனாலும், தொடர்ந்து மக்களுக்கான இயக்கங்களில் சிங்காரவேலர் தொடர்ந்து ஈடுபட்டார். 1922-ல், பம்பாயில் வசித்த எஸ்.ஏ. டாங்கேயுடன் தொடர்பு ஏற்பட்டது. அதன் பிறகு, எம்.என். ராயுடனும் கடிதத் தொடர்பு வைத்துக்கொண்டார்.

லேபர் கிஸான் கெஜட் என்ற பெயரில் ஆங்கில வாழ இதழையும், தொழிலாளன் என்ற பெயரில் தமிழ் வார இதழையும் அவர் ஆசிரியராக இருந்து வெளியிட்டார். இதற்கிடையே, 1923-ல் இந்துஸ்தான் உழவர் உழைப்பாளர் கட்சி (லேபர் கிஸான் பார்ட்டி ஆஃப் இந்துஸ்தான்) என்ற கட்சியைத் தொடங்கினார்.

1924-ல், சிங்காரவேலர் மீது சதி வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டது. இதையே மக்கள் இயக்கமாக மாற்ற அன்றைய பொதுவுடைமை இயக்கம் முயற்சித்தது. அதன்படி, கான்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளரான சத்திய பக்த் என்பவர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி என்ற பெயரை சட்டப்பூர்வமாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, இந்தியக் கம்யூனிஸ்டுகளின் முதல் மாநாடு 1925, டிசம்பர் 28 முதல் 30 வரை கான்பூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு சிங்காரவேலர் தலைமை தாங்கினார்.

சிங்காரவேலரின் சிறப்புகள்

இந்தியாவில் முதன்முதலாக மே நாளைக் கொண்டாடியவர். (தொழிலாளர் தினம்)

ரஷ்யாவின் கம்யூனிஸ புரட்சியால் கவரப்பட்டு, இந்தியாவின் முதல் தொழிற்சங்கமான சென்னைத் தொழிலாளர் சங்கத்தை 1918-ல் தொடங்கினார். சென்னை பக்கிங்காம் கர்னாடிக் ஆலையில் தொடங்கப்பட்ட இச்சங்கத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றினார்.

தொழிலாளர் நலனுக்காக, 1923 மே முதல் தேதி, தொழிலாளர் விவசாயக் கட்சியைத் தொடங்கினார்.

1925-ல், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியைத் தொடங்கிய தலைவர்களுள் இவரும் ஒருவர்.

சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்தபோது, பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். அதன்பிறகு இத்திட்டம் கைவிடப்பட்டது. ஆக, தமிழகம் முழுவதும் பெருந்தலைவர் காமராஜர் தொடங்கிய மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி இவர்தான்.

தமிழ் மொழிக்காகப் பெரிதும் பாடுபட்டார். தமிழை ஆட்சி மொழியாக்கும் கோரிக்கையை வலியுறுத்தினார்.

பல நூல்களை எழுதியுள்ளார். வேறு மொழிகளிலிருந்து பல நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவர் எழுதிய சிந்தனை நூல்கள், மாஸ்கோ மாநகர லெனின் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.

பெரியார் ஈ.வே. ராமசாமியின் சுயமரியாதை இயக்கம், 1930-களின் ஆரம்பத்தில் பொதுவுடைமைக் கொள்கையின் பக்கம் சாய சிங்காரவேலரின் தூண்டுதல் காரணமாக இருந்தது.

ப. ஜீவானந்தம்

Story image

1907, ஆகஸ்ட் 21-ம் தேதி பிறந்த இவருக்கு, இளம் வயதிலேயே காந்தியின் கொள்கைகள் மீது ஆர்வமும் ஈடுபாடும் ஏற்பட்டது. அந்த நாளில் அஞ்சாநெஞ்சன் என்று அழைக்கப்பட்ட விஸ்வநாத தாஸ் என்பவரோடு ஜீவா நெருங்கிப் பழகினார்.

அரசியலில் எதிரணியில் இருந்தாலும், ஜீவானந்தத்தை காமராஜ் பெரிதும் மதித்தார். ஏழைமையான, மாற்று உடைகூட இல்லாத நிலையிலும் மக்களுக்காகவும் பொதுவுடைமை இயக்கத்துக்காகவும் பாடுபட்டார்.

ஜீவா, 1930-களில் தன்னை சுயமரியாதை இயக்கத்தவனாக அடையாளப்படுத்திக்கொண்டார். இந்தியக் காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். சிறை வாழ்க்கை ஜீவாவின் சிந்தனைப்போக்கை மாற்றியது. ‘சிறையிலிருந்து நான் வெளிவரும்போது, கம்யூனிசக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டவனாகவே வெளியே வந்தேன்’ என்று அவரே குறிப்பிட்டார். கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கியப் பதவி வகித்த ஜீவா, சீனப் படையெடுப்பை எதிர்த்துக் கடும் பிரசாரம் செய்தார். சீன சோஷலிச அரசு இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்வதை ஜீவா எதிர்த்தார்.

கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலங்களில் (1939-42), பம்பாயிலும் சிறையிலும் தனது பெரும்பகுதியான நாள்களை ஜீவா கழித்தார். இக்காலங்களில், கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் வலுப்படுத்தும் செயல்பாடுகளில் தோழர்களோடு இணைந்து தீவிரமாகச் செயல்பட்டார். 1948-ல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது இலங்கைக்குச் சென்று அங்கிருந்து செயல்பட்டார்.

காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி, மற்றும் அதன் தொழிலாளர் பாதுகாப்புக் கழகம், சுயமரியாதை சமதர்மக் கட்சி ஆகியவற்றில் தலைமைப் பொறுப்பு ஏற்க வேண்டிய சூழல் ஜீவாவுக்கு உருவானது. ‘சமதர்மம்’, ‘அறிவு’, ‘ஜனசக்தி’ ஆகிய இதழ்களின் ஆசிரியர் பொறுப்புகளையும் அவர் ஏற்றிருந்தார்.

ஈ.வெ.ரா.வோடு கருத்துமுரண் ஏற்பட்ட சூழலில், தோழர்கள் அ. ராகவன், நீலாவதி, ராமநாதன் போன்றவர்களோடு இணைந்து ‘சுயமரியாதை சமதர்மக் கட்சி’யை உருவாக்கினார். அந்த இயக்கத்தின் இதழ்களாகவே ‘சமதர்மம்’, ‘அறிவு’ ஆகியவை செயல்பட்டன. அக்கட்சியின் முதல் மாநாடு, 1936-ல் திருச்சியில் நடைபெற்றது.

இதையடுத்து, சோசலிசக் கருத்தாக்கம் சார்ந்த சுயமரியாதை இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று ஜீவா விரும்பினார். இதற்கு முரணாக ஈ.வெ.ரா. செயல்படுவதாகக் கருதினார். குறிப்பாக, அக்காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில், நீதிக்கட்சியுடன் ஈ.வெ.ரா. கொண்டிருந்த தொடர்பை, ஜீவா ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆதார நூல்கள்

Manifesto of communist Party by Karl Marx and Frederick Engels, 1908.

Notes on Indian history (664-1858) by Marx Karl, 1818-1883.

இந்திய கம்யூனிஸ் இயக்க வரலாறு, அருணன்.

Introduction to a Critique of Hegel's philosophy of Right-1843.

The Poverty of Philosophy by Karl Marx-1847.

Discourse upon the Question of Free Exchange by Karl Marx-1848.

Das kapital by Karl Marx–1867.

Introduction to the Critique of Political Economy by Karl Marx-1859.

சிந்தனை சிற்பி சிங்காரவேலரைப் பயில்வோம், சு.பொ. அகத்தியலிங்கம்.

கம்யூனிசத்தின் கோட்பாடுகள், பிரெட்ரிக் எங்கெல்ஸ்.

முந்தைய கட்டுரை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.