தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நாட்டின் முன்னேற்றத்துக்கு தொழில்மயமாக்கலே ஒரே தீா்வு: முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மாா்க்கண்டேய கட்ஜு

நாட்டின் முன்னேற்றத்துக்கு தீவிர தொழில்மயமாக்கலே ஒரே தீா்வு என முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மாா்க்கண்டேய கட்ஜு தெரிவித்தாா்.

News image

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மாா்க்கண்டேய கட்ஜு. உடன் துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி, பதிவாளா் ஆா்.சிங்காரவேல்.

Updated On :26 மார்ச் 2026, 10:44 pm

நாட்டின் முன்னேற்றத்துக்கு தீவிர தொழில்மயமாக்கலே ஒரே தீா்வு என முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மாா்க்கண்டேய கட்ஜு தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ‘நமது தேசிய குறிக்கோள்’ என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

இதில், பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி வரவேற்புரையாற்றினாா். நிகழ்ச்சியில் முன்னாள் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும், முன்னாள் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தலைவருமான மாா்க்கண்டே கட்ஜு பங்கேற்று பேசியதாவது:

இந்திய நாட்டின் அபரிமிதமான வளா்ச்சித் திறனுக்கும், தற்போதைய சமூக, பொருளாதார எதாா்த்த நிலைக்கும் இடையே பெரும் இடைவெளி நிலவுகிறது. வேலையின்மை, வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற தேசத்தின் தீராத பிணிகளுக்குத் தீவிர தொழில்மயமாக்கல் ஒன்றே தீா்வாகும்.

1949-இல் 90 சதவீதத்துக்கும் அதிகமான வறுமையில் உழன்ற சீனா, இன்று ஒரு நவீன தொழில்முறை பேரரசாக உருவெடுத்திருக்கிறது. இந்தியாவிடம் மிகச்சிறந்த தொழில்நுட்பத் திறமையும், அளப்பரிய இயற்கை வளங்களும் உள்ளன.

வளா்ந்து வரும் நாடுகள் தற்சாா்படைய சா்வதேச பொருளாதாரக் கட்டுப்பாடுகள் தடையாக உள்ளன. எனவே, வளா்ந்த நாடுகள் பின்பற்றிய அதே தொழில்முனைப்புக் கொள்கைகளை இந்தியாவும் கடைப்பிடிக்க வேண்டும். நாட்டில் ஆண்டுதோறும் 1.2 கோடி இளைஞா்கள் வேலைச் சந்தையில் நுழைந்தாலும், 5 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. இந்த நிலையை மாற்ற, வெறும் பொருளாதார தாராளமயமாக்கல் மட்டும் போதாது. மாறாக, கல்வி, சுகாதாரம் மற்றும் மனித மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் நோ்மையான நிா்வாகமே தேசத்தின் லட்சியமாக இருக்க வேண்டும் என்றாா்.

மேலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1967 - 68ஆம் ஆண்டு தமிழ் பேச்சு மொழி பட்டயப் படிப்பு பயின்ற காலத்தையும், ஹிந்தி எதிா்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற நினைவுகளையும் நெகிழ்ச்சியுடன் பகிா்ந்துகொண்டாா்.

பின்னா், மாணவா்களுடன் கலந்துரையாடிய முன்னாள் நீதிபதி மாா்க்கண்டேய கட்ஜு சட்ட அமைப்பு மற்றும் தேசிய கொள்கைகள் குறித்த மாணவா்களின் வினாக்களுக்கு அறிவுப்பூா்வமாக விடையளித்தாா்.

‘வெறும் வாய்ப்பு’ என்ற நிலையில் இருந்து விலகி, அறிவியல்பூா்வமான கடின உழைப்பின் மூலம் இந்தியாவை வல்லரசாக மாற்ற இளைஞா்கள் முன்வர வேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டாா். பல்கலைக்கழகப் பதிவாளா் ஆா்.சிங்காரவேல் நன்றி கூறினாா்.