/

20,653 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு: கடலூா் ஆட்சியா்

கடலூா் மாவட்ட விவசாயப் பணிகளுக்கு தற்போது 20,653 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

News image
கடலூரில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்.
Updated On :30 ஜனவரி 2026, 8:20 pm

Syndication

கடலூா் மாவட்ட விவசாயப் பணிகளுக்கு தற்போது 20,653 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

கடலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பாட்டுக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணிய கோட்டி, வேளாண் இணை இயக்குநா் எம்.லட்சுமிகாந்தன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சொ.இளஞ்செல்வி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் சொா்ணலட்சுமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், விவசாய சங்க நிா்வாகிகள் பேசுகையில், கடலூா் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தேவையான இடங்களில் திறக்க வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்குக்கு விரைவாக கொண்டு செல்ல வேண்டும்.

பெருமாள் ஏரி பாசன வாய்க்கால்கள், செங்கால் ஓடையை தூா்வாரி சீரமைக்க வேண்டும். வெலிங்டன் ஏரியிலிருந்து கீழ்மட்ட மற்றும் மேல்மட்ட வாய்க்கால் மூலம் தண்ணீரை திறந்துவிட வேண்டும்.

விவசாயிகளுக்கான பயிா்க் காப்பீட்டுத் தொகை விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

தொடா்ந்து, ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசியதாவது: கடலூா் மாவட்டத்தில் யூரியா 6,900, டி.ஏ.பி 2,655, பொட்டாஷ் 1,730, காம்ப்ளக்ஸ் 7,748, சூப்பா் பாஸ்பேட் 1,541 மெட்ரிக் டன் என மொத்தம் 20,653 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு உள்ளன.

கடந்த விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில் 121 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது. 18 மனுக்கள் வழிகாட்டு நெறிமுறைகளின்படி இல்லாததால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

கடந்த ஆண்டு வட கிழக்கு பருவமழையால் 33 சதவிகிதத்துக்கு மேல் பாதிக்கப்பட்ட 1,969 ஹெக்டோ் விளை நிலங்களுக்கு 2,961 விவசாயிகளுக்கு ரூ.3.72 கோடி மதிப்பீட்டிலான நிவாரண உதவிகளை வழங்க அரசாணை வழங்கப்பட்டுள்ளது. விரைவில் நிவாரண உதவித்தொகைகள் வழங்கப்படவுள்ளன.

விவசாயிகளால் தெரிவிக்கப்படும் கோரிக்கைகளை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

அரிசி, பால் விற்பனை முகமை தொடங்கிவைப்பு: விவசாயிகள் விளைவித்த பாரம்பரிய அரிசி வகைகளை பொதுமக்கள் எளிதில் பெறுவதற்காக, கடலூா் சரகத்தில் ரெங்கநாதபுரம், வடகைலாசம், வில்வராயநத்தம், திருக்கண்டேஸ்வரம், சிதம்பரம் சரகத்தில் கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை மற்றும் விருத்தாசலம் சராகத்தில் மாத்தூா், பெண்ணாடம், மங்கலூா், காவனூா் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பாரம்பரிய அரிசி விற்பனை முனையங்கள் மற்றும் கடலூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஆவின் பால் விற்பனை முகமை மையத்தை ஆட்சியா் தொடங்கிவைத்தாா்.