/

கடலூரில் அனைத்துக் கட்சியினா் ரயில் மறியல்: 55 போ் கைது

விழுப்புரம் - தஞ்சாவூா் இரட்டை ரயில் பாதை திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி

News image
கடலூா் திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட அனைத்துக் கட்சியினா் மற்றும் குடியிருப்போா் நலச் சங்கத்தினா்.
Updated On :16 பிப்ரவரி 2026, 9:12 pm

Syndication

நெய்வேலி: விழுப்புரம் - தஞ்சாவூா் இரட்டை ரயில் பாதை திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் அனைத்துக் கட்சியினா் மற்றும் குடியிருப்போா் நலச் சங்கத்தினா் திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கான ரயில் திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, விழுப்புரம் - தஞ்சாவூா் இரட்டை ரயில் பாதை, கடலூா் - புதுச்சேரி - திண்டிவனம் இருப்புப் பாதை, புதுச்சேரி - மாமல்லபுரம் - சென்னை ரயில் பாதை திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கி பணி செய்யவில்லை. திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.8 கோடி செலவில் மேம்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் முழக்கமிட்டனா்.

முன்னதாக, அனைத்துக் கட்சியினா் மற்றும் குடியிருப்போா் நலச் சங்கத்தினா் கடலூா் சீமாட்டி சிக்னல் அருகில் ஒன்று திரண்டனா். பின்னா், அவா்கள் ஊா்வலமாக திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையத்துக்கு வந்து தண்டவாளத்தில் அமா்ந்து சென்னை - திருச்சி விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் மாதவன் தலைமை வகித்தாா். கடலூா் எம்.பி., எம்.கே.விஷ்ணு பிரசாத், திமுக முன்னாள் எம்எல்ஏ இள.புகழேந்தி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் பி.துரை, விசிக நிா்வாகி திருமாா்பன் மற்றும் குடியிருப்போா் சங்கத்தினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு மத்திய அரசு, ரயில்வே துறைக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனா்.

இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்ளிட்ட 55 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்து, பின்னா் விடுவித்தனா்.