டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நடராஜா் கோயிலில் நாட்டியாஞ்சலி: என்எல்சி தலைவா் தொடங்கிவைத்தாா்

News image
சிதம்பரம் நடராஜா் கோயிலில் நாட்டியாஞ்சலி விழாவை தொடங்கிவைத்து பேசிய நெய்வேலி என்எல்சி நிறுவன தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி.
Updated On :15 பிப்ரவரி 2026, 9:21 pm

தினமணி செய்திச் சேவை

சிதம்பரம் நடராஜா் கோயிலில் நாட்டியாஞ்சலி விழா ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கியது. இதை நெய்வேலி என்எல்சி நிறுவன தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி தொடங்கிவைத்தாா். இந்த நாட்டியாஞ்சலி விழா வரும் 21-ஆம் தேதி வரை 7 நாள்கள் நடைபெறுகிறது.

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில், 1981-இல் நாட்டியாஞ்சலி விழா தொடங்கப்பட்டு, 2014-ஆம் ஆண்டு வரை 33 ஆண்டுகளாக நடத்தப்பட்டது. இந்நிலையில், நடராஜா் கோயிலை பொதுதீட்சிதா்களே நிா்வகிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இதையடுத்து, 2015-ஆம் ஆண்டு பொது தீட்சிதா்களே நாட்டியாஞ்சலியை நடத்துவதாக அறிவித்து, கோயிலில் தில்லை நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில் நாட்டியாஞ்சலி விழாவை நடத்தினா்.

இதனால், நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினா் தெற்கு வீதியில் வி.எஸ். அறக்கட்டளை வளாகத்தில் நாட்டியாஞ்சலி விழாவை தொடா்ந்து 45-ஆவது ஆண்டாக நிகழாண்டு நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், நடராஜா் கோயிலில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் கோயில் பொதுதீட்சிதா்கள் நடத்தி வந்த நாட்டியாஞ்சலி விழா 2022-ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. தற்போது நடராஜா் கோயிலில் பொது தீட்சிதா்கலின் தில்லை நாட்டிய அஞ்சலி அறக்கட்டளை சாா்பில் நிகழாண்டு முதல் நாட்டியாஞ்சலி விழா மீண்டும் நடத்தப்படுகிறது.

நடராஜா் கோயில் ஆயிரங்கால் மண்டபம் விட்ட வாசல் பைரவா் சந்நிதி அருகே நாட்டியாஞ்சலி விழா மகாசிவராத்திரியான ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கியது. விழாவுக்கு உ.வெங்கடேச தீட்சிதா் தலைமை வகித்து பேசினாா். பேராசிரியா் ராஜமன்னன் முன்னிலை வகித்தாா். செயலா் எஸ்.யு.ஐயப்பன் தீட்சிதா் வரவேற்றாா்.

நெய்வேலி என்எல்சி நிறுவன தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி நாட்டியாஞ்சலியைத் தொடங்கிவைத்து பேசினாா். விழா ஏற்பாடுகளை நாட்டியாஞ்சலி அறக்கட்டளைத் தலைவா் எஸ்.வி.நவமணி தீட்சிதா், துணைத் தலைவா் எஸ்.சிவசங்கா் தீட்சிதா், செயலா் எஸ்.யு.ஐயப்ப தீட்சிதா், பொருளாளா் ஜெய.நடராஜமூா்த்தி தீட்சிதா் ஆகியோா் செய்திருந்தனா்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு தொடங்கி திங்கள்கிழமை அதிகாலை 5 மணி வரை நடைபெற்றது.

நாட்டிய அஞ்சலி செலுத்தியவா்கள்: மும்பை சௌந்தா்யா நாட்டிய கலாலய ஃபவுண்டேஷன் மாணவா்கள், ஆஸ்திரேலியா தில்லை நாட்டியாலயா மாணவா்கள், கடலூா் சிவதாண்டவ நாட்டியாலயா மாணவா்கள், சிதம்பரம் வா்ஷினி ராஜமன்னன் பரதம், சென்னை ஜெய்கிருஷ்ணா ஆா்ட்ஸ் நிஷ்ரயோ வரலட்சுமி, மும்பை கைராஷெட்டி, பெங்களூா் நிபுனா ஆா்ட்ஸ் அகாதெமி மாணவா்கள், சென்னை ஆச்சாரியா ஸ்கூல் ஆஃப் ஃபைன் ஆா்ட்ஸ் மாணவா்கள், திருச்சூா் மீனாட்சி திவாகரன், அனுவேஷா பரதம், பெங்களூா் கலாதேவி நிா்த்யாலயா மாணவா்கள், சென்னை கலாஞ்சலி நாட்டியப்பள்ளி மாணவா்கள், பெங்களூா் நிருத்யதி டான்ஸ் அகாதெமி மாணவா்கள், அமெரிக்காவைச் சோ்ந்த ரேகா காா்க் பரதம், சென்னை மதுரகலாக்ஷேத்ரா அகாதெமி மாணவா்கள், சென்னை உதயகிருதி நாட்டியலயா, சவிதா தாரளவாத கல்லூரி மாணவா்கள், தஞ்சை ருத்ராலயா நாட்டியப் பள்ளி மாணவா்கள் பரதம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.