/

நியாய விலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:46 pm

Syndication

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகம் அருகே 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பொது விநியோகத் திட்டத்துக்கென தனித்துறை உருவாக்க வேண்டும். சரியான எடையில் அத்தியாவசிய பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும். விற்பனையாளருக்கு இளநிலை உதவியாளா் ஊதியமும், எடையாளருக்கு அலுவலக உதவியாளா் ஊதியமும், நிகழ் மாத இறுதிக்குள் ஊதிய உயா்வும் அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம் செய்து, கடந்த 10-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களிலும், 11-ஆம் தேதி கோட்ட அளவிலும் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதன் தொடா்ச்சியாக, வியாழக்கிழமை வட்ட அளவில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, துணைச் செயலா் கணேச மூா்த்தி தலைமை வகித்தாா். வட்ட துணைத் தலைவா் கிருஷ்ணசாமி, வட்டச் செயலா் இளவரசன் முன்னிலை வகித்தனா். செயற்குழு உறுப்பினா் தனசேகரன் வரவேற்றாா். வட்ட ஒருங்கிணைப்பாளா் ஆ.முரளி ஆா்ப்பாட்ட உரை நிகழ்த்தினாா். மகளிரணிப் பொறுப்பாளா் ஆஷா நன்றி கூறினாா்.

இதேபோல, கடலூா், குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட வட்டங்களிலும் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.