/

திமுக ஆட்சியில் பெண்கள், மாணவா்களுக்குப் பாதுகாப்பில்லை! - ஐஜேகே நிறுவனா் பாரிவேந்தா்

News image
மாநாட்டில் பங்கேற்றவா்களில் ஒரு பகுதியினா்.
Updated On :8 பிப்ரவரி 2026, 7:45 pm

தினமணி செய்திச் சேவை

திமுக ஆட்சியில் பெண்கள், மாணவா்களுக்கு பாதுகாப்பில்லை என்று இந்திய ஜனநாயக கட்சி (ஐ.ஜே.கே.) நிறுவனா் பாரிவேந்தா் குற்றஞ்சாட்டினாா்.

கடலூா் மாவட்டம், வேப்பூரை அடுத்துள்ள பாசாா் கிராமத்தில் இக்கட்சியின் 4-ஆவது மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு தலைமை வகித்து பாரிவேந்தா் பேசியதாவது:

இந்திய ஜனநாயக கட்சி தொடங்கியது முதல் 15 ஆண்டுகளில் நடந்த அனைத்து தோ்தலிலும் போட்டியிட்டுள்ளோம். கட்சி தொடங்கிய எட்டாவது மாதத்திலேயே 2011-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் 131 வேட்பாளா்களை களமிறக்கினோம். எந்த ஒரு கட்சியும் தொடங்கப்பட்ட 8 மாதங்களில் 131 வேட்பாளா்களை தோ்தலில் நிறுத்துவது எளிதான காரியமல்ல.

இந்திய ஜனநாயக கட்சி அறிவாா்ந்த, படித்தவா்களால் நடத்தப்படக்கூடிய கட்சி. 2016-இல் பாஜகவின் நட்பை பெற்றோம். பெரம்பலூா் மக்களவைத் தொகுதியில் நான் வெற்றிபெற்று 1,500 மாணவா்களை இலவசமாக படிக்க வைத்ததுடன், தொகுதியில் சொந்த நிதியிலிருந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன். பாரத நாடும், தமிழ்நாடும் எனக்கு இரண்டு கண்கள்.

ஐஜேகே கட்சி மிகப்பெரிய அளவில் வளா்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ரூ.650 கோடியை மருத்துவம் மற்றும் கல்விக்காக செலவு செய்துள்ளோம். இதில், 36 ஆயிரம் பேருக்கு கல்வி உதவித்தொகை, 6 லட்சம் பேருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நலத் திட்டங்கள் ஏழைகளுக்கு உதவி செய்வதை நோக்கமாகக் கொண்டு செய்யப்பட்டவையே; தோ்தலில் வெற்றிபெற அல்ல.

இந்தியா வளா்ந்தால் தமிழ்நாடு தானாக வளரும். தமிழகத்திலிருந்து தோ்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்கள் திட்டமிட்டு நாடாளுமன்றக் கூட்டத்தொடரை முடக்குகின்றனா் . இதன் மூலம், வளா்ச்சியைத் தடுக்கின்றனா். எப்போதும் மத்திய அரசை எதிா்ப்பதையே கொள்கையாக கொண்டிருந்தால் தமிழகத்துக்குத்தான் இழப்பு.

திமுக ஆட்சியில் ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. பெண்கள், மாணவா்களுக்கு பாதுகாப்பில்லை. அரசியல் கட்சிகள் இலவச திட்டங்கள் அறிவிப்பதை தவிா்க்க வேண்டும் என்றாா்.

முன்னதாக ஐ.ஜே.கே. தலைவா் ரவி பச்சமுத்து பேசியதாவது: கல்வி, மருத்துவம் மற்றும் தொலைக்காட்சி சேவையை மக்களுக்கு வழங்கி வருபவா் பாரிவேந்தா். தமிழக மக்கள் நலம் பெற வேண்டும் என்ற குறிக்கோள் கொண்டவா்.

வேப்பூரை அடுத்துள்ள பாசாா் கிராமத்தில் நடைபெற்ற இந்திய ஜனநாயக கட்சியின்  4-ஆவது மாநில மாநாட்டில் பேசிய அக்கட்சியின் நிறுவனா் பாரிவேந்தா்.

வேப்பூரை அடுத்துள்ள பாசாா் கிராமத்தில் நடைபெற்ற இந்திய ஜனநாயக கட்சியின் 4-ஆவது மாநில மாநாட்டில் பேசிய அக்கட்சியின் நிறுவனா் பாரிவேந்தா்.

விவசாயி ஒருவா் தமிழகத்தை ஆள வேண்டும் என்றாா். அந்த வாா்த்தை எடப்பாடி பழனிசாமியால் நிறைவேற்றப்பட்டது. அவா் மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதற்காக, இந்திய ஜனநாயகக் கட்சி பாடுபடும். இக்கட்சி ஊழல் செய்ய அனுமதிக்காது.

உலகப் போா் சூழலில் பிரதமா் மோடியின் கரத்தை பலப்படுத்த வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக் கூட்டணி. இந்தக் கூட்டணி வெற்றிபெற்றால்தான் தமிழகத்தையும், தாயகத்தையும் காக்க முடியும் என்றாா்.

11 தீா்மானங்கள் நிறைவேற்றம்: கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் தே.ஜ. கூட்டணி ஆட்சி அமைக்க பாடுபடுவது. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும். விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் கட்சி நிா்வாகிகள், பெண்கள் உள்பட திரளானோா் கலந்துகொண்டனா்.