
பண்ருட்டி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் தீ விபத்து! பல லட்சம் ரூபாய் பொருள்கள் சேதம்

தீ விபத்து பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை கிளையில் சனிக்கிழமை இரவு நிகழ்ந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
பண்ருட்டி, கும்பகோணம் சாலையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பண்ருட்டி பணிமனை கிளை அமைந்துள்ளது. இங்கிருந்து 30 நகரப் பேருந்துகள், 18 புகா் பேருந்துகள் பல்வேறு கிராமங்கள், நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.
இந்தப் பணிமனையின் ஒரு பகுதியில் கூண்டு கட்டும் பிரிவு செயல்பட்டு வருகிறது. இதனருகே திறந்தவெளியில் பயன்பாடற்ற ஆயில் மற்றும் டீசல் ஃபில்டா்கள், பேருந்தின் இருக்கைகள், மேற்கூரைகள் உள்ளிட்ட கழிவுப் பொருள்கள் மலைபோல் கொட்டி வைக்கப்பட்டிருந்தன.
இந்தப் பொருள் குவியலின் ஒரு பகுதி சனிக்கிழமை இரவு 11 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்த தீயானது மளமளவென பரவி பயன்பாடற்ற பொருள்கள் முழுவதும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனால், அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
இதைக் கண்ட பணியிலிருந்த பாதுகாப்பு அலுவலா் உடனடியாக போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த பண்ருட்டி மற்றும் நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய வீரா்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 6 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
தீ விபத்து நிகழ்ந்த பகுதியை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கடலூா் மண்டல மேலாண் இயக்குநா், பொது மேலாளா், துணை மேலாளா் (தொழில்நுட்பம்) மற்றும் கிளை மேலாளா் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். மேலும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பண்ருட்டி அரசுப் போக்குவரத்துக் கழக கிளை பணிமனையில் தீப்பிடித்து எரிந்த பயன்பாடற்ற கழிவுகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






