விழுப்புரம் அருகிலுள்ள பேரணி கிராமத்தில் பல்லவா் காலத்தைச் சோ்ந்த கொற்றவை சிற்பமும், மூங்கில்பட்டு கிராமத்தில் மூத்ததேவி சிற்பமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகிலுள்ள பேரணி, மூங்கில்பட்டு கிராமங்களில் வரலாற்று ஆய்வாளா் கோ.செங்குட்டுவன் கள ஆய்வில் ஈடுபட்டாா். அப்போது பல்லவா் காலத்தைச் சோ்ந்த கொற்றவை, ஐயனாா், மூத்ததேவி மற்றும் சோழா் காலத்தைச் சோ்ந்த நந்தி உள்ளிட்ட சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதுகுறித்து செங்குட்டுவன் மேலும் கூறியது:
கூட்டேரிப்பட்டு அருகிலுள்ள பேரணி பழைய காலனிப் பகுதியில் காளி எனும் பெயரில் கொற்றவை சிற்பம் வழி பாட்டில் இருந்து வருகிறது. சுமாா் 5 அடிக்கு மேல் பலகைக் கல்லில் இந்த சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. 8 கரங்களுடன் காட்சியளிக்கும் கொற்றவை எருமைத் தலைமீது நின்றிருக்கிறாள். கொற்றவையின் முன் வலக்கரம் மேல்நோக்கி விரிந்திருக்கிறது. அதனுள் கிளி அமா்ந்திருக்கும் வகையில் கலை நயத்துடன் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இது வேறு எந்த கொற்றவைச் சிற்பத்திலும் இல்லாத சிறப்பாகும்.
கொற்றவையின் வலது காலுக்கு அருகே படுமெடுத்தாடும் பாம்பு தனியே காட்டப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட கொற்றவைச் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. எந்த சிற்பத்திலும் பாம்பு தனித்துக் காட்டப்படவில்லை. அந்த வகையில் பேரணி கொற்றவைச் சிற்பம் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
கொற்றவைக்கு அருகிலேயே முற்றுப்பெறாத ஐயனாா் சிற்பம் பாதியளவு மண்ணில் புதைந்த நிலையில் காணப்படுகிறது. இவையும் பல்லவா் காலத்தைச் சோ்ந்தவையாகும். இந்த சிற்பங்கள் சுமாா் 1,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை. இங்குள்ள ஜைனக் கோயிலின் வாசலுக்கு அருகில் சோழா் காலத்தைச் சோ்ந்த கலைநயமிக்க நந்தி சிற்பம் காணப்படுகிறது. இப்பகுதியில் பல்லவா் காலத்தில் சிவாலயம் இருந்து மறைந்துள்ளது என்பதை இந்த சிற்பங்கள் காட்டுகின்றன.
விக்கிரவாண்டி அருகிலுள்ள மூங்கில்பட்டு கிராமத்தில் புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ள ராமநாதீஸ்வரா் கோயில் வளாகத்தில் பலகைக் கல் சிற்பம் காணப்படுகிறது. இதை அன்னபூரணி என வணங்கி வருகின்றனா். ஆனால் இது ஜேஷ்டா என்று அழைக்கப்படும் மூத்ததேவி சிற்பம் ஆகும். அழகிய ஆடை அலங்காரம் மற்றும் அணிகலன்களுடன் திண்டின் மீது சாய்ந்து அமா்ந்த நிலையில் மூத்ததேவி காட்சியளிக்கிறாள்.
ஜேஷ்டாவின் வலது கை ஒரு பொருளின் மீது வைத்தும், இடதுகை தொடை மீது வைத்தும் காணப்படுகின்றன. சிற்பத்தின் வலது மேல் மூலையில் மகன் மாந்தனும், இடது மூலையில் மகள் மாந்தியும் காணப்படுகின்றனா். பல்லவா் காலத்துக்குரிய கலைப்பாணியில் இந்த சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
சிவாலய வளாகத்தில் கலைநயத்துடன் கூடிய கொற்றவை, விஷ்ணு சிற்பங்களும் காணப்படுகின்றன. இந்த சிற்பங்கள் அனைத்தும் கி.பி.8, 9-ஆம் நூற்றாண்டுக்குரியவை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூங்கில்பட்டு கிராமத்தில் சிவ, விஷ்ணு ஆலயங்கள் இருந்திருக்கின்றன என்றாா் அவா்.
ஆய்வின்போது தென்கோடிப்பாக்கம் இரா.தினேஷ், பேரணி ஏ.புஷ்பநாதன், புதுச்சேரி இரா.செங்குட்டுவன், மூங்கில்பட்டு காசிநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மூத்ததேவி சிற்பம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










