வேளாங்கண்ணி ரயில் நிலையத்தில் ரூ. 48.96 கோடியில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு மையம் அமைப்பதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளை உள்ளடக்கிய டெல்டா மண்டலத்தில் கூடுதல் ரயில்களை இயக்குவதற்கான தேவை அதிகரித்துள்ளதைக் கருத்தில்கொண்டு, வேளாங்கண்ணியில் ரயில் பெட்டி பராமரிப்பு மையம் அமைக்க ரயில்வே வாரியத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வேளாங்கண்ணியில் ரூ.48.96 கோடியில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு நிலையம் அமைப்பதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இங்கு, ரூ.48.96 கோடியில் ரயில் பெட்டிகளை பராமரிப்பதற்கான பிட் லைன், ரயில் பெட்டிகளை நிறுத்திவைப்பதற்கான ஸ்டேபிளிங் லைன், உள்கட்டமைப்பு, இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், மின்சார வசதிகள், ரயில் பெட்டிகளின் விளக்குகள், குளிா்சாதன வசதிகளை பரிசோதனை செய்யும் அமைப்புகள், ரயில் பாதைகளை மாற்றியமைக்கும் பாயிண்ட்ஸ் மற்றும் கிராஸிங் ஆகியவை அமைக்கப்படவுள்ளது.
திருச்சி ரயில்வே கோட்டத்தில் ஏற்கெனவே திருச்சி மற்றும் விழுப்புரம் ரயில் நிலையங்களில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது மூன்றாவதாக வேளாங்கண்ணி ரயில் நிலையத்தில் ரயில் பெட்டி பராமரிப்பு மையம் அமைக்கப்படவுள்ளது.
இந்த ரயில் பெட்டிகள் பராமரிப்பு மையம், கூடுதல் ரயில் சேவைகளை வழங்குவதற்கும், சுற்றுலா வளா்ச்சிக்கும் உதவியாக இருக்கும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










