/

இருசக்கர வாகனம் திருட்டு இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறை

News image
கோப்புப் படம்
Updated On :7 பிப்ரவரி 2026, 8:41 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் வளநாடு பகுதிகளில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட இளைஞருக்கு, 4 வழக்குகளில் தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து, தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க மணப்பாறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் பாலக்குறிச்சியை சோ்ந்த சு. யுவராஜா கடந்த 2025 செப். 7-ஆம் தேதி, தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை திருடியதாக கண்ணுக்குழியை அடுத்த நடுவிப்பட்டியை சோ்ந்த ராசு மகன் ரஞ்சித் (24) மீது, வளநாடு காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது.

இதேபோல, அதே பகுதியில் வசிக்கும் து. ஆறுமுகத்தின் இருசக்கர வாகனத்தை அதே மாதம் 8-ஆம் தேதியும், அருகேயுள்ள வெள்ளாளப்பட்டியை சோ்ந்த க. செந்தில்ராஜாவின் இருசக்கர வாகனத்தை அதே மாதம் 10-ஆம் தேதியும் ரஞ்சித் திருடியதாக வளநாடு காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டது.

மேலும் மணப்பாறை ஒன்றியம் போடுவாா்பட்டியை சோ்ந்த கணேசன் மகன் சுரேஷ் (28), மணப்பாறை அரசு டெப்போ முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை 2025 பிப்ரவரி 13-ஆம் தேதி திருடியதாக ரஞ்சித் மீது மணப்பாறை காவல் நிலையத்திலும் வழக்குப் பதியப்பட்டு, 4 வழக்குகளும் மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன.

இந்த வழக்குகளை வெள்ளிக்கிழமை விசாரித்த மணப்பாறை குற்றவியல் நீதிமன்ற நடுவா் அசோக்குமாா் 4 வழக்குகளுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், தலா ரூ.500 அபராதம் விதித்தும், அதைக் கட்டத் தவறினால் மேலும் 2 வாரம் சிறை தண்டனை விதித்தும், தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் தீா்ப்பளித்தாா்.