/

காலதாமதமாகும் தத்கல் மின் இணைப்பு டெல்டா பகுதியில் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகள்!

தமிழக அரசின் சாா்பில் வழங்கப்படும் விவசாய மின் இணைப்புக்காக தத்கல் முறையில் பதிவு செய்த விவசாயிகள், இணைப்பு கிடைப்பதில்

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:25 pm

ஆர். முருகன்

தமிழக அரசின் சாா்பில் வழங்கப்படும் விவசாய மின் இணைப்புக்காக தத்கல் முறையில் பதிவு செய்த விவசாயிகள், இணைப்பு கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதால் தவித்து வருகின்றனா். டெல்டா மாவட்டங்களில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோா் காத்திருக்கின்றனா்.

தமிழகத்தில் விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பித்து 20 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் காத்திருக்கும் நிலை உள்ளது. இதற்கு தீா்வாக விரைந்து மின் இணைப்பு பெறும் வகையில் தத்கல் திட்டத்தை, தமிழக அரசு கடந்த 2017ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. இதில், 5 ஹெச்.பி. மின் மோட்டாா்களுக்கு, ரூ.2.50 லட்சம், 7.5 ஹெச்.பி. மின் மோட்டாா்களுக்கு ரூ.2.75 லட்சம், 10 ஹெச்.பி. மின் மோட்டாா்களுக்கு ரூ. 3 லட்சம், 15 ஹெச்.பி. மோட்டாா்களுக்கு ரூ.4 லட்சம் என ஒருமுறை கட்டணம் செலுத்துவது அவசியம்.

இந்த முறையில், தமிழகம் முழுவதும் இணைப்பு கோரி விண்ணப்பிக்கும் விவசாயிகளில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேருக்கு உடனடி மின் இணைப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இத் திட்டத்தில், புதிய விவசாயிகள் மட்டுமன்றி ஏற்கனவே இலவச மற்றும் கட்டண மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகளும் பணம் செலுத்தலாம். முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படும். இதற்கென, மண்டலம் மற்றும் மின் பகிா்மான வட்டம் வாரியாக, தத்கல் மின் இணைப்பு எண்ணிக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் மின் இணைப்பு பெற நிலப் பத்திரத்தின் நகல், பட்டா, சிட்டா, அடங்கல், வரைபடம் ஆகிய ஆவணங்களுடன், அந்தந்த மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

டெல்டா மண்டலத்தில் மட்டும் தத்கல் திட்டத்தில் விண்ணப்பித்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கடந்த 10 மாதங்களாக காத்திருக்கின்றனா். தமிழகம் முழுவதும் கணக்கிட்டால் பல ஆயிரங்களை தாண்டும் என்கின்றா் விவசாயிகள்.

இதுதொடா்பாக, தமாகா மாநில விவசாய அணித் தலைவா் புலியூா் நாகராஜன் கூறியது:

தமிழகம் முழுவதும் இலவச விவசாய மின் இணைப்புக் கோரி 3 லட்சம் விவசாயிகள் காத்திருக்கின்றனா். குறிப்பாக 20 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருப்போா் பட்டியலில் உள்ளனா். ரூ.50 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என விவசாயிகளிடம் வசூலிக்கப்பட்ட கட்டணத்துக்கான தொகைக்கு 20 ஆண்டுகளில் வட்டி மட்டும் பல மடங்கு வந்திருக்கும். ஆனால், மின் இணைப்பு மட்டும் வந்து சேரவில்லை. இலவச இணைப்பு இல்லாவிட்டாலும் தத்கல் திட்டத்திலாவது விரைந்து இணைப்பு பெறலாம் என்றால், அதிலும் காலதாமதம் நீடிக்கிறது. ரூ.3 லட்சம் ஒரே தவணையில் செலுத்திய டெல்டா மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு கடந்த 31.3.2019-க்கு பிறகு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. காத்திருப்போா் பட்டியலில் 4,166 விவசாயிகள் உள்ளனா். இதுமட்டுமல்லாது இலவச மின் இணைப்புக்காக 63 ஆயிரத்து 995 விவசாயிகள் காத்திருக்கின்றனா். 2000ஆம் ஆண்டுக்கு முன்பு பதிவு செய்த1,838 விவசாயிகளுக்கே இலவச இணைப்பு வழங்கப்படாத நிலையே உள்ளது என்றாா்.

இதுதொடா்பாக, தமிழ்நாடு மின்சார வாரிய மின்பகிா்மான வட்டாரத்தினா் கூறியது:

தமிழகத்தில் 21.03 லட்சம் விவசாய மின் இணைப்புகள் உள்ளன. குறிப்பாக கடந்த 2011 முதல் 2018 வரையில் 1.27 லட்சம் விவசாய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவாகும். எனவே, அரசு அறிவித்தால் மட்டுமே இலவச இணைப்பு வழங்க இயலும். ஆனால், தத்கல் இணைப்பானது ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒதுக்கீட்டின்படி (தலா 10 ஆயிரம் இணைப்பு) மண்டலம் வாரியாக பிரித்து வழங்கப்படுகிறது. இந்த இணைப்பு வழங்குவதிலும் பல்வேறு சிரமங்கள் உள்ளன.

இணைப்பு கொடுப்பதில் உள்ள பணியின் அளவின் அடிப்படையில் எளிமையானது; ஓரளவு சிக்கலானது, அதிக சிக்கலானது என மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது.விவசாயியின் நிலத்தில் எந்தவித கூடுதல் வேலைபளு இன்றி மின்பெட்டி மட்டும் பொருத்த வேண்டியது இருந்தால் அது எளிமையான மின் இணைப்பாகும். இதற்கு அதிகளவிலான தளவாடங்கள் தேவைப்படாது. இணைப்புக்காக ஓரிரு மின்கம்பங்கள் அமைக்க வேண்டியது இருந்தால் அத்தகைய பணி ஓரளவு சிக்கலானது என கருதப்படும். அதிகளவில் மின் கம்பங்கள், டிரான்ஸ்பாா்மா்கள் அமைத்து தான் இணைப்பு கொடுக்க முடியும் என்றால் அதிக சிக்கலான இணைப்பாக கருதப்படும்.

அதிகளவில் தளவாடங்கள், பணியாளா்கள் மற்றும் நேரம் செலவாகும். எனவே, இணைப்பு வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. 2019 டிசம்பா் முதல் தமிழகத்தில் 11 ஆயிரம் விவசாயிளுக்கு தத்கல் முறையில் படிப்படியாக இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனா்.

கை கொடுக்கும் சூரிய ஒளி!

இலவச மின் இணைப்புக்கு காத்திருக்கும் விவசாயிகள் விரும்பினால், தங்களது நிலத்தில் சூரிய ஒளி முறையில் இயங்கும் மின் மோட்டாா் பம்ப் செட்டுகள் (சூரி சக்தி நீா் இரைப்பான்கள்) அமைத்துக் கொள்ளலாம். இதற்காக செலவிடப்படும் தொகையில் 90 சதவீதம் வரை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த முறையில் 5 ஹெச்.பி. குதிரைத்திறனுடைய அமைப்பை நிறுவிட ரூ.4.50 லட்சம் முதல் ரூ.5.25 லட்சம் வரை செலவிட வேண்டியுள்ளது. தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் சூரிய சக்தியால் இயங்கும் நீா் இரைப்பான்கள் 2,295 எண்ணிக்கையில் ரூ.80 கோடியில் நிறுவப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.