ஆரம்ப சுகாதாரநிலையம் தரம் உயர்த்தப்படுமா ? டாப் செங்காட்டுப்பட்டி மக்கள் எதிர்பார்ப்பு
திருச்சி மாவட்டம், பச்சமலை பகுதியிலுள்ள மலைவாழ் மக்களுக்காக டாப் செங்காட்டுப்பட்டியில் இயங்கி வரும்


திருச்சி மாவட்டம், பச்சமலை பகுதியிலுள்ள மலைவாழ் மக்களுக்காக டாப் செங்காட்டுப்பட்டியில் இயங்கி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி, கூடுதல் வசதிகளை ஏற்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு உள்ளது.
திருச்சி, பெரம்பலூர், சேலம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது பச்சமலை. மலைவாழ் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்கு டாப் செங்காட்டுப்பட்டி, கம்பூர், தண்ணீர்ப்பள்ளம், பெரும்பரப்பு, சோளமாத்தி, கீழக்கரை, சித்தூர், புத்தூர் போன்ற16 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 4,000 பேர் வசித்து வருகின்றனர். மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய கிராமங்களில் வாழும் மொத்த மக்களின் எண்ணிக்கை 10,000 ஆக உள்ளது.
விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வரும் இவர்களுக்கு சிகிச்சையளிக்க டாப் செங்காட்டுப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையமும், சித்தூர், புத்தூரில் துணை சுகாதார நிலையமும் இயங்கி வருகின்றன. இந்த சுகாதார நிலையத்துக்கு வழக்கமாக 75 முதல் 80 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள நிலையில், இந்த எண்ணிக்கை 150 வரை உயர்ந்துள்ளது. இவைத் தவிர, வாரத்தில் செவ்வாய்க்கிழமைகளில் கர்ப்பிணிகளுக்கான வழக்கமான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
மாதத்துக்கு 30 கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் வசதி மூலம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தொடர் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. ஆண்டுக்கு 40 முதல் 50 கர்ப்பிணிகளுக்கு இந்த சுகாதார நிலையத்திலேயே பிரசவமும் பார்க்கப்படுகிறது. இந்த சுகாதார நிலையத்தில் 2 மருத்துவர்கள், மருந்தாளுநர், 4 செவிலியர், 2 பணியாளர்கள், சித்த மருத்துவர், செவிலியர் மற்றும் இந்த நிலையத்துக்குள்பட்ட பகுதிகளுக்காக 2 சுகாதார ஆய்வாளர்கள், 2 கிராம செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தரம் உயர்த்துவது அவசியமானது : பச்சமலைப் பகுதியில் திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட பகுதியில் இந்த ஆரம்ப சுகாதார நிலையம் இருந்தாலும், சேலம் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மலைவாழ் கிராம மக்களும் இங்குதான் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடக்க நிலை சிகிச்சைகள், மகப்பேறு மருத்துவச் சிகிச்சைகளை அளித்தாலும், அடுத்த நிலையில் மேற்சிகிச்சைகளை செய்ய வேண்டுமெனில் உப்பிலியபுரம் அல்லது துறையூருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
பச்சமலைப் பகுதியில் சுமார் 10,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருவதால் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக அறிவிக்க வேண்டும் என்பது எங்களது பல நாள் கோரிக்கையாக உள்ளது என்கின்றனர் மலைவாழ் கிராம மக்கள்.
இந்த சுகாதார நிலையம் தற்போது காலை முதல் மாலை வரையிலான நேரத்தில் மட்டும் இயங்குகிறது. மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டால் 24 மணி நேரமும் இயங்கும். அறுவைச் சிகிச்சை அரங்கு, கூடுதல் மருத்துவர்கள் நியமனம் போன்ற வசதிகளும், மக்களுக்கும் தரமான உயர்தர சிகிச்சைகளும் கிடைக்கும் என்பதால் இக்கோரிக்கையை நிறைவேற்றுவதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர் மலைவாழ் மக்கள்.
கூடுதல் கட்டடங்களும் தேவை : மலைவாழ் மக்களுக்கான 108 ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்பட்டாலும், அதில் பணியாற்றும் ஊழியர்களுக்குத் தேவையான இடவசதிகள் இல்லை. இதனால், அவர்கள் எங்கு தங்குவது என்ற நிலையில் இருப்பதால், தேவைப்படும் நேரத்தில் மட்டுமே 108 ஆம்புலன்ஸ் வசதியை அளிக்கும் நிலை உள்ளது. இதுபோல, ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு இடவசதிகள் இல்லாததால் அவர்களும் மருத்துவமனை வளாகத்திலேயே தங்கும் நிலை உள்ளது.
எங்கள் பகுதிக்கு வந்து, மருத்துவ வசதிகளை அளிக்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருவதோடு, மருத்துவமனைக்குத் தேவையான கூடுதல் கட்டடங்களையும் கட்டித் தருவதற்குரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். இதுபோல, சித்த மருத்துவப் பிரிவுக்கான கட்டடத்துக்குப் பதிலாக புதிய கட்டடத்தை கட்டித் தர வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் இப்பகுதி மலைவாழ் மக்கள்.
பயன்படுத்த இயலாத நிலையில் குடியிருப்புகள்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கான குடியிருப்புகள் பயன்படுத்த இயலாத நிலையில்தான் உள்ளன. குடியிருப்புகளைச் சுற்றி செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகின்றன. கட்டடத்தின் உள்பகுதிகள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில்தான் உள்ளன. மருத்துவர்களும், செவிலியர்களும் தங்கிப் பணியாற்றுவதற்குத் தயாராகத்தான் இருக்கிறார்கள். ஆனால், கட்டடங்கள் நிலையைப் பார்த்தால் யாருமே தங்க முடியாத நிலைதான் காணப்படுகிறது. எனவே பொதுப்பணித் துறை அதிகாரிகள் இந்த கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்த அறிக்கையை அளித்து, பழைய கட்டடங்களை இடித்துவிட்டு, புதிய குடியிருப்புகளைக் கட்டுவதற்கான பரிந்துரைகளை அளிக்க வேண்டும் என்பதும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...