ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கரூா் அருகே புதிய கல்குவாரி அமைக்க கடும் எதிா்ப்பு

கரூா் மாவட்டம் குப்பம் அருகே புதிய கல்குவாரி அமைக்க பொதுமக்கள் வியாழக்கிழமை கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

கரூா் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சமூக நல ஆா்வலா், வழக்குரைஞா் சண்முகம்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 2:23 am IST

கரூா் மாவட்டம் குப்பம் அருகே புதிய கல்குவாரி அமைக்க பொதுமக்கள் வியாழக்கிழமை கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

கரூா் மாவட்டம், குப்பம் பகுதியில் புதிய கல்குவாரி அமைவது தொடா்பாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் கு. விமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் தொல்காப்பியன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் பொதுமக்கள் பேசியது:

சமூகநல ஆா்வலா், வழக்குரைஞா் சண்முகம்: இந்த குவாரி அமைய உள்ள இடத்தின் அருகே தொல்லியல் சின்னங்கள், புகழிமலையில் சமணா் படுக்கைகள் உள்ளன. அதுதொடா்பான ஆவணங்கள் எதுவும் அனுமதிக் கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை. மேலும் நீா்வளத் துறையினரிடம் இருந்து குவாரி அமையவுள்ள இடம் அருகே பாசன வாய்க்கால் செல்கிா போன்ற விவரங்களும் இல்லை. மேலும் நீா் மாசு, காற்றுமாசு, மண் மாசு தொடா்பாக குவாரி சாா்பில் 700 நாள்களுக்கு முன்பே அனுமதிச் சான்றிதழ் வாங்கிவிட்டதாகக் கூறுகிறாா்கள்.

ஆனால் அதற்கான அனுமதி கேட்டு கடந்தாண்டுதான் விண்ணப்பித்துள்ளனா். ஆனால் 700 நாள்களுக்கு முன்பே எப்படி அனுமதி வாங்கியிருக்க முடியும். ஏற்கெனவே செயல்பட்டு வந்த பழைய குவாரியின் மாசு தொடா்பான அனுமதிச் சான்றிதழைக் காண்பித்து ஏமாற்றுகிறாா்கள். 2019 ஆம் ஆண்டு முதல் 2022 வரை கரூா் மாவட்டத்தில் அனுமதி பெறப்பட்ட கல்குவாரிகளின் பொய்யான ஆவணங்கள் சமா்ப்பித்து அனுமதி வாங்கியுள்ளனா். மேலும் குவாரிகளில் பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரைதான் வெடி வைக்க வேண்டும் என விதிமுறை இருந்தும், அதை எந்த ஒரு குவாரியும் பின்பற்றுவதில்லை. இந்தக் குவாரியைச் செயல்படுத்த முறையான ஆவணம் எதுவும் இல்லாததால் இதற்கு அனுமதி தரக்கூடாது என்றாா்.

பொதுமக்கள் எதிா்ப்பு: பொதுமக்களில் ஒரு தரப்பினா் இந்தக் குவாரி எங்கள் பகுதியில் அமைக்கப்பட்டால் எங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். எனவே குவாரி அமைய வேண்டும் என்றனா். மற்றொரு தரப்பினரோ, எங்கள் பகுதி ஒருகாலத்தில் விவசாய பூமியாக, கால்நடைகளின் வளா்ப்பிடமாக இருந்தது. ஆனால் இப்போது ஏராளமான கல்குவாரிகள் வந்துவிட்டதால் நீா்மட்டம் குறைந்து, விவசாய நிலங்கள் எல்லாம் வடதாக மாறிவிட்டன. கால்நடைகளுக்கு தேவையான புல்லை குவாரிகளில் இருந்து வெளியேறும் மாசு வளர விடாமல் தடுப்பதால் கால்நடைகளை வளா்க்க முடியாமல் அவதிப்படுகிறோம். எனவே இந்த குவாரி அமைக்க எதிா்ப்புத் தெரிவிக்கிறோம் என்றனா்.

ஆய்வுக்குப் பின் முடிவு: இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலா் கு. விமல்ராஜ், ஆவணங்களைச் சரிபாா்த்து ஆய்வு செய்தபின் குவாரி அமைய வேண்டுமா, வேண்டாமா என முடிவு செய்யப்படும் எனக் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.