/

இலவசக் கறவை மாடுகளால் பயனாளிகள் அவதி

திருவெறும்பூர், ஜன. 30:  தமிழக அரசின் இலவசக் கறவை மாடுகள் வழங்கும் திட்டப் பயனாளிகள் கறவை மாடுகள் சரியாக பால் கறக்காததால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.   தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரத்தின

News image
Updated On :2 ஜனவரி 2024, 4:02 pm

சி.சண்முகவேல்

திருவெறும்பூர், ஜன. 30:  தமிழக அரசின் இலவசக் கறவை மாடுகள் வழங்கும் திட்டப் பயனாளிகள் கறவை மாடுகள் சரியாக பால் கறக்காததால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

  தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளில் இலவசக் கறவை மாடுகள் வழங்கும் திட்டமும் ஒன்று.

இந்தத் திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்ற நோக்கத்தில் தற்போதைய அதிமுக அரசு கறவை மாடுகளை பயனாளிகளுக்கு வழங்கி வருகிறது.

  இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு கறவை மாடு வாங்க ரூ. 30 ஆயிரம், பராமரிப்புச் செலவு ரூ. 1000, மாடுகள் வாங்க, கால்நடை மருத்துவர்களுடன் ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு பயனாளிகள் சென்று வரும் செலவு உள்பட அனைத்தையும் அரசே ஏற்றுக் கொள்கிறது. மேலும், மாடுகளுக்கான காப்பீட்டையும் அரசே செய்து தருகிறது. இதனால், ஒரு கறவை மாட்டுக்கு ரூ. 37 ஆயிரம் அரசு செலவு செய்கிறது.

  இந்நிலையில், அந்தத் திட்டத்தின் கீழ், வெளிமாநிலங்களிலிருந்து வாங்கி வந்த மாடுகள் சரியாக பால் கறப்பதில்லை எனக் கூறப்படுகிறது. சில மாடுகள் தட்பவெப்ப நிலை காரணமாக இறந்தும் போயுள்ளன. சில மாடுகள் வயது முதிர்ந்துள்ள நிலையில், பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதால் அவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

  ஸ்ரீரங்கம் தொகுதி, அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிக்கு உள்பட்ட பனையபுரம் பகுதியில் இந்தத் திட்டத்தின் கீழ் 50 மாடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. அவற்றில் 5 மாடுகளும், 10 கன்றுக்குட்டிகளும் இறந்துள்ளன. சில மாடுகள் தட்பவெப்ப நிலை காரணமாக பால் கறப்பதில்லையாம்.

  கிளிக்கூடு ஊராட்சிப் பகுதியில் பயனாளிகளுக்கு வழங்கிய 49 மாடுகளில் கவுத்தரநல்லூர் பகுதியைச் சேர்ந்த 6 பேரின் மாடுகள் இறந்தன. இந்தப் பகுதியில் வழங்கப்பட்ட மாடுகள் ஒரு லிட்டர், ஒன்றரை லிட்டர் பால் மட்டுமே கறக்கின்றன. 10-க்கும் மேற்பட்ட மாடுகள் முற்றிலும் பால் கறப்பதே இல்லை.

  இதுகுறித்து பனையபுரம், கிளிக்கூடு, கவுத்தரநல்லூர் பகுதி மக்கள் கூறியது:

  தமிழகத்தில் பால் கறக்கும் மாடுகள் சுமார் 10 ஆயிரம் ரூபாய்க்குள்தான் விற்கப்படுகின்றன. இதை விட்டுவிட்டு, அண்டை மாநிலங்களிலிருந்து கறவை மாடுகளை வாங்கித் தந்தார்கள். ஆனால், அந்த மாடுகளுக்கு தமிழகத்தின் தட்பவெப்ப நிலை ஒத்துக்கொள்ளவில்லை. அவற்றில் சில மாடுகள் இறந்துவிட்டன; சில மாடுகள் பால் கறப்பதை நிறுத்திவிட்டன. சில மாடுகள் ஒரு லிட்டர் பால் மட்டுமே கொடுக்கின்றன.

  பால் கறக்க ஆகும் செலவு, மாடுகளுக்கு தீவனச் செலவு, வைக்கோல் செலவு ஆகியவற்றை கணக்கிட்டுப் பார்க்கும் போது எங்களுக்கு நஷ்டம்தான் ஏற்படுகிறது என்றனர் அவர்கள்.

 எனவே, தமிழக அரசு அதிக விலை கொடுத்து அண்டை மாநிலங்களில் கறவை மாடுகளை வாங்குவதைவிட, குறைவான விலையில் தமிழகத்திலுள்ள கறவை மாடுகளை வாங்க வேண்டும். இதன்மூலம், தட்பவெப்ப நிலையால் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்த்து, பயனாளிகள் இந்தத் திட்டத்தின் முழுப் பயனையும் அடைய முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.