வி.ஏ.ஓ. காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுமா?
பெரம்பலூர், ஜன. 3: பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 53 கிராம நிர்வாக அலுவலர்களின் காலிப் பணியிடங்களால், பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், வருவாய்த் துறை பணிகள் பெரிது


பெரம்பலூர், ஜன. 3: பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 53 கிராம நிர்வாக அலுவலர்களின் காலிப் பணியிடங்களால், பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், வருவாய்த் துறை பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
கிராம நிர்வாக அலுவலர்கள், கிராமப்புறங்களில் நிலவரி வசூலித்தல், கணக்குகள் பராமரித்தல் மற்றும் பொதுமக்களுக்கு சிட்டா, அடங்கல், ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்று, பிறப்பு, இறப்புச் சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
ஆனால், தற்போது தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத் திட்டங்கள் அனைத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டம், இலவசக் கால்நடைகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களுக்கும் பயனாளிகளைத் தேர்வு செய்வது, ஜமாபந்தி, மனுநீதி நாள் சிறப்பு முகாம், கிராமசபைக் கூட்டம், அரசின் நிவாரண உதவிகள் வழங்குவது, இயற்கை இடர்பாடுகளை மதிப்பீடு செய்து அரசுக்கு அறிக்கை அளிப்பது உள்பட இதரப் பணிகளையும் கவனிக்க வேண்டியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை ஆகிய மூன்று வட்டங்களிலும் 152 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவற்றில் 144 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் உள்ளன. ஆனால், பெரம்பலூர் வட்டத்தில் 15 பேர், குன்னம் வட்டத்தில் 48 பேர், வேப்பந்தட்டை வட்டத்தில் 28 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை, குன்னம், பெரம்பலூர் ஆகிய மூன்று வட்டங்களிலும் 53 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், தற்போது பணியில் உள்ள 91 அலுவலர்களே, காலியாக உள்ள கிராமத்தின் பணிகளையும் கூடுதலாகக் கவனித்து வருகின்றனர். மேலும், கிராமக் கணக்குகள், அ பதிவேடு, வாரிசுச் சான்றிதழ், அரசு உதவிக்கான சான்றிதழ்கள் பெறுவதிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், சான்றிதழ் பெற வரும் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கிராம நிர்வாக அலுவலர் எப்போது வருவார் என அவரது அலுவலகத்தில் நாள் முழுக்க காத்துக் கிடக்கின்றனர்.
இதனால், பணிச் சுமை கூடுவதுடன் மேற்கொள்ளும் பணிகளில் காலதாமதம் ஏற்படுவதால், பல்வேறு வகையான சான்றிதழுக்கு கையெழுத்து வழங்கவே கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நேரம் சரியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், மற்ற அனைத்துப் பணிகளும் பாதிக்கப்படுகின்றன. பணியாற்றும் ஒவ்வொரு அலுவலரும் இரண்டு கிராமங்களில் பணியாற்றும் நிலை உள்ளதால், பணிச் சுமை ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
தமிழகத்தில், கடந்த 1986 ஆம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. எழுத்துத் தேர்வின் மூலம் கிராம நிர்வாக அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, பதவி உயர்வு மூலம் மட்டுமே இவர்கள் நியமனம் செய்யப்பட்ட நிலையில், கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் எழுத்துத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், 3,500 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு, பிப்ரவரி 11 ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி. மூலம் அனைத்து மாவட்டங்களிலும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் சான்றிதழ் சரிபார்க்கும் பணியும், தகுதியானவர்களுக்கு உரிய அத்தாட்சிக் கடிதமும் வழங்கப்பட்டது.
ஆனால், இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான கிராம நிர்வாக அலுவலர்களின் விவரங்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மூலம் பெறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான கிராம நிர்வாக அலுவலர்களின் பட்டியல் அனுப்பிவைக்கப்பட்டு, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் பணி ஒதுக்கீடு செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு இன்றுவரை பட்டியல் வரவில்லையாம். இதனால், தேர்வில் வெற்றி பெற்று பணி நியமனத்துக்காகக் காத்திருப்பவர்கள் தொடர்ந்து ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் கூறியது:
காலியாக உள்ள பணியிடங்களில் கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க வேண்டும். மேலும், கிராம நிர்வாக அலுவலகங்களுக்குத் தேவையான மேஜைகள், நாற்காலிகள் உள்ளிட்ட தளவாடப் பொருள்களை உடனடியாக வழங்க வேண்டும். ஏ பிரிவு கிராமங்களில் பணியாற்றுபவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறையும், பி பிரிவு கிராமங்களில் பணியாற்றுபவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் பணியிட மாற்றம் செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர் அவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...