டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பெரம்பலூர் நகராட்சியில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுமா?

பெரம்பலூர், நவ. 13: பெரம்பலூர் நகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.   பேரூராட்சியாக இருந்த பெரம்பலூர், மூன்றாம் நிலை நகராட்சியாக மாற

News image
Updated On :28 டிசம்பர் 2023, 7:06 pm

கே.​ தர்மராஜ்

பெரம்பலூர், நவ. 13: பெரம்பலூர் நகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.

  பேரூராட்சியாக இருந்த பெரம்பலூர், மூன்றாம் நிலை நகராட்சியாக மாற்றப்பட்டு, தற்போது இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. நகராட்சிக்கு உள்பட்ட பெரம்பலூர், அரணாரை, துறைமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள 21 வார்டுகளிலும், சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

  இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாகவே நகராட்சி அலுவலகத்தில் நிலவி வரும் அலுவலர்கள், பணியாளர்களின் பற்றாக்குறையால், நகரில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ளவும், பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும் இயலாத சூழ்நிலை நீடிக்கிறது.

  நகராட்சி அலுவலகப் பொதுப் பிரிவில், மேலாளர், கணக்கர், வருவாய் ஆய்வாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், புள்ளி விவரக் குறிப்பாளர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் என 17 அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

  பொறியியல் பிரிவில், நகராட்சிப் பொறியாளர், உதவிப் பொறியாளர், பணி மேற்பார்வையாளர், பணி ஆய்வர், குழாய் பொருத்துநர், குளக்காவலர், மின் கம்பியாளர், மின் கம்பி உதவியாளர் என 15 அலுவலர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில், தற்போது 6 நபர்களே பணிபுரிந்து வருகின்றனர்.

   இதேபோல, பொது சுகாதாரப் பிரிவில், துப்புரவு ஆய்வாளர், துப்புரவு மேற்பார்வையாளர், களப் பணி உதவியாளர், துப்புரவுப் பணியாளர், ஓட்டுநர், கொசு மருந்து தெளிப்பவர் என 58 நபர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில், தற்போது 41 பணியாளர்களே பணிபுரிந்து வருகின்றனர்.

   26 ஊழியர்கள், 53 துப்புரவுப் பணியாளர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இதனால், அனைத்துப் பணிகளையும், தற்போது பணியில் உள்ள அலுவலர்களே மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

  இதிலும், முக்கிய அலுவலர்கள் விடுமுறையில் சென்றுவிட்டால், அன்றைய தினம் அலுவலகப் பணிகள் முற்றிலும் முடங்கி விடுவதாகக் கூறப்படுகிறது.

  மேலும், இரண்டாம் நிலை நகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டு, நகராட்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக 22 கூடுதல் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அந்தப் பணியிடங்களும் இதுவரை நிரப்பப்படவில்லை.

  பணியாளர்களின் பற்றாக்குறையால், பொதுமக்கள் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி ரூ. 1 கோடியே 32 லட்சம், காலிமனை வரி ரூ. 13 லட்சத்து 61 ஆயிரம், தொழில் வரி ரூ. 21 லட்சத்து 31 ஆயிரம், குடிநீர்க் கட்டணம் ரூ. 47 லட்சம், கடை வாடகை மற்றும் உரிமக் கட்டணம் உள்பட ரூ. 2 கோடியே 26 லட்சத்து 52 ஆயிரம் வசூல் செய்ய முடியாமல் நிலுவையில் உள்ளது.

  இதனால், நகராட்சி நிர்வாகம் சார்பில் பெற்ற கடன் தொகைக்கு மாதம்தோறும் ரூ. 45 லட்சம் வட்டி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், நகராட்சிப் பகுதிகளில் அடிப்படைப் பணிகளை முடித்த ஒப்பந்ததாரர்களுக்கு ரூ. 4 கோடியும், மின் வாரியத்துக்கு ரூ. 98 லட்சத்து 95 ஆயிரமும் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

  அதேபோல, அலுவலர்கள் பற்றாக்குறையால், பிறப்பு, இறப்புச் சான்றிதழ் மற்றும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் இணைப்பு வழங்குவதில் காலதாமதம், முறையான குடிநீர் விநியோகம், சாலை, மின் விளக்குகள் பராமரித்தல், வரி வசூல் செய்வது, சாலைப் பணிகள் மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

  இதேபோல, நகரின் அனைத்துப் பகுதிகளும் கொட்டப்பட்ட குப்பைகள் அண்மைக்காலமாக அகற்றப்படாததால், நகரம் முழுவதும் சுகாதாரமின்றி காணப்படுகிறது. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

  எனவே, நகர மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்றவும், வளர்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவும், நகராட்சியில் உள்ள காலிப் பணியிடங்களை உடன் நிரப்ப சம்பந்தப்படவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெரம்பலூர் மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.