அரியலூர், நவ. 8: வெள்ளச் சேதத்தைத் தடுக்க நீண்ட காலமாகக் கிடப்பில் போடப்பட்டுள்ள காரைப்பாடி தடுப்பணை பணியை மீண்டும் தொடங்க வேண்டும் என அந்தப் பகுதி மக்களும், விவசாயிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்தில் உள்ளது காரைப்பாடி கிராமம். மழைக் காலங்களில் இந்தக் கிராமத்தின் வழியாகச் செல்லும் ஆனைவாரி ஓடையின் வெள்ளநீர் குழுமூர், அயன்தத்தனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள வயல் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பெருமளவு சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
மேலும், இந்தப் பகுதி விவசாய நிலங்களில் பயிரிடப்படும் நெல், கடலை போன்றவையும் சேதமடைந்து விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இவ்வாறு ஆண்டுதோறும் இந்தப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள், குடியிருப்புகள் ஆனைவாரி ஓடை வெள்ளநீரால் சூழ்ந்து பாதிக்கப்படுவதைத் தொடர்ந்து, வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்கும் வகையிலும், மேலும் 1000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையிலும் குழுமூர் மேற்கில் காரைப்பாடிக்குச் செல்லும் வழியில் ஆனைவாரியின் ஓடை குறுக்கே தடுப்பணைக் கட்ட முடிவு செய்யப்பட்டது.
2004 ஆம் ஆண்டில் முடிவு செய்யப்பட்ட இந்தப் பணிக்காக ரூ. 7 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு, தடுப்பணை கட்டுவதற்குரிய முதல் நிலைப் பணியான நிலம் கையகப்படுத்துதல் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக சுமார் 100 ஏக்கர் நிலம் அந்தப் பகுதிகளிலிருந்து கையகப்படுத்தப்பட்டது.
ஆனால், அடுத்து என்ன காரணத்தினாலோ நிலம் கையகப்படுத்துதல் பணியும் நின்றுபோனது. காரைப்பாடி நீர்த்தேக்க அணை கட்டப்பட்டால் அயன் ஆத்தூர், குழுமூர் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள சுமார் 1000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறும்.
மேலும், ஆனைவாரி ஓடையில் செல்லும் நீரை காரைப்பாடி தடுப்பணையில் தேக்கி, உபரிநீரை அருகிலுள்ள வங்காரம், முல்லையூர் ஏரிகளுக்குத் திருப்பிட விடுவதற்கும் வாய்ப்பு இருக்கும். ஆனால், தற்போது தடுப்பணை பணி கிடப்பில் போடப்பட்டுவிட்டதால், எங்களின் விவசாயம் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது என்கின்றனர் இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள்.
7 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருக்கும் காரைப்பாடி தடுப்பணை பணியை மீண்டும் தொடங்கி, அணை கட்டப்பட்டால், இதன்மூலம் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியைப் பெறும். மேலும், ஆனைவாரி ஓடையிலிருந்து செல்லும் நீரை காரைப்பாடி அணையில் தேக்கி வைத்து, உபரி நீரை அருகிலுள்ள வங்காரம் முல்லையூர் ஏரிகளுக்குத் திருப்பிவிடுவதன் மூலம், இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளாகிய நாங்கள் மிகுந்த பயன் அடைவோம். தற்போது ஒருபோகம் சாகுபடி செய்து வரும் எங்களின் நிலை மாறி, இரு சாகுபடி செய்யக்கூடிய நிலைக்கு மாற்றம் அடைவோம் என்றனர் விவசாயிகள்.
கிராமங்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்படும்: காரைப்பாடியில் தடுப்பணை கட்டப்பட்டால், மழைக் காலங்களில் ஆனைவாரி ஓடை மற்றும் காட்டாற்று வெள்ளத்தால் இந்தப் பகுதியிலுள்ள கிராமங்கள் பாதிக்கப்படுவது முற்றிலுமாகத் தடுக்கப்படும். ஆனைவாரி ஓடையைத் தாண்டிச் செல்லக் கூடிய கிராமங்களுக்கு மழைக் காலங்களில் ஏற்படும் போக்குவரத்துத் தடையும் நீங்கக் கூடிய நிலை ஏற்படும்.
அக்கறை காட்ட வேண்டும் மக்கள் பிரதிநிதிகள்: முந்தைய ஆட்சியால் தொடங்கப்பட்ட பணிகளை நாங்கள் தொடங்க முடியாது என்ற காரணத்தைக் கூறி, அரசியல்வாதிகள் தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், பாதிப்பின் அருமை எங்களுக்குத்தானே தெரியும்.
எனவே, தற்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கட்சிப் பாகுபாடு இல்லாமல் ஒன்று சேர்ந்து, தங்கள் பகுதி பாதிப்பிலாமல் இருக்க வேண்டும் என்ற நிலையை மையப்படுத்தி தடுப்பணை கட்டும் பணியை மீண்டும் தொடங்குவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஏற்கெனவே, தொடங்கப்படுவதாகத் திட்டமிடப்பட்டு, முதல் நிலைப் பணியும் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டிருக்கும் காரைப்பாடி தடுப்பணை பணியை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம் என்கின்றனர் இந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள்.
மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி வரும் அரசு, இதுபோன்ற மக்கள் நலனைக் காக்கக் கூடிய பணிகளிலும் கவனத்தைச் செலுத்தி அதைச் செயல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

