கல்லாற்றுப் பாலப் பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?
பெரம்பலூர், ஜூன் 5: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள வி.களத்தூர் கல்லாற்று மேம்பால கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த 2006-ம் ஆண்டு


பெரம்பலூர், ஜூன் 5: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள வி.களத்தூர் கல்லாற்று மேம்பால கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த 2006-ம் ஆண்டு பலத்த மழை பெய்த போது ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வி.களத்தூர் கல்லாற்றுப் பாலம் உடைந்து, வண்ணாரம்பூண்டி, இனாம்அகரம், திருவாளந்துறை, மரவநத்தம், சிறுநிலா உள்ளிட்ட 20-க்கும் அதிகமான கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் தாற்காலிகமாக அந்தப் பாலம் சீரமைக்கப்பட்டு, போக்குவரத்து நடைபெற்று வந்தது.
இதனிடையே, 2007-ல் மீண்டும் பலத்த மழை பெய்த போது தாற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதோடு, கல்லாற்றுப் பாலம் முற்றிலும் சேதமடைந்தது. இதனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் போக்குவரத்து வசதியின்றி கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
மேலும், வண்ணாரம்பூண்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளும், பள்ளிக்குச் செல்ல முடியாமல் அவர்களது கல்வி பாதிக்கப்பட்டது.
அதேபோல, காவல் நிலையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் செல்வதற்கு சுமார் 30 கி.மீ. தொலைவுக்கு பொதுமக்கள் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, கல்லாற்றின் மீது புதிய பாலம் கட்ட வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர், மத்திய, மாநில அமைச்சர்களிடம் மனு அளித்தனர்.
ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால், அந்தப் பகுதியில் நடைபெற்ற அனைத்து அரசு விழாக்களையும் அந்தப் பகுதி மக்கள் புறக்கணித்ததோடு, கடையடைப்பு, வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்களிலும் இதே கோரிக்கையை விவசாயிகள் வலியறுத்தி வந்தனர்.
இதனிடையே, கடந்த திமுக ஆட்சியில் கல்லாற்றில் மேம்பாலம் கட்டுவதற்கு ரூ. 3.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த 19.10.2009 அன்று, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா பாலப் பணிக்கு அடிக்கல் நாட்டி, ஓராண்டுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பாலம் கொண்டுவரப்படும் என்று அறிவித்தார்.
ஆனால், கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. நெடுஞ்சாலைத் துறையினரின் அலட்சியத்தாலும், ஒப்பந்ததாரரின் கவனக் குறைவாலும் கட்டுமானப் பணியில் தேக்கமடைந்து, காலதாமதமாக பணிகள் நடைபெற்று வருவதாக அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என். செல்லதுரை கூறியது:
கடந்த திமுக ஆட்சியில் ஒப்பந்தம்விடப்பட்டு, புதிய பாலம் தொடங்க வசதியாக தரைப் பாலம் அமைக்கப்பட்டது. ஆனால், அந்தத் தரைப் பாலம் மழையால் இழுத்துச் செல்லப்பட்டுவிட்டது.
ஒப்பந்ததாரரின் அலட்சியத்தால் கட்டுமானப் பணிகளில் காலதாமதம் ஏற்படுவதாகக் கூறப்பட்டதால், இதுதொடர்பாக ஆட்சியரிடம் விவசாய சங்கப் பிரதிநிதிகள் மனு அளித்தனர். அப்போது, பணிகள் விரைவுபடுத்தப்படும் என்று ஆட்சியர் உறுதியளித்தார். ஆனால், பணிகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
இதனால், அந்தப் பகுதி விவசாயிகள் எறையூர், தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு ஏற்றிச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். மேலும், சேலம் மாவட்டத்தில் இருந்து லப்பைகுடிகாடு வரை வந்து செல்லும் பேருந்துகளுக்கு பிரதான சாலையாகவும் கல்லாற்றுப் பாலம் உள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலின் போது கல்லாற்றுப் பாலம் உடனடியாகக் கட்டித் தரப்படும் என்று அதிமுக வேட்பாளர் வாக்குறுதி அளித்தார்.
தொடர்ந்து, அவரும், அவர் சார்ந்த கட்சியும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளதால், பாலப் பணிகளை விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...