பெரம்பலூர் கீழ ஏரி தூர்வாரப்படுவது எப்போது?
பெரம்பலூர், ஜன. 24: பெரம்பலூரில் உள்ள கீழ ஏரியை தூர்வார வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சுமார் 20 ஏக்கர் நிலப் பரப்பிலான கீழ ஏரியிலிருந்து


பெரம்பலூர், ஜன. 24: பெரம்பலூரில் உள்ள கீழ ஏரியை தூர்வார வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுமார் 20 ஏக்கர் நிலப் பரப்பிலான கீழ ஏரியிலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஏரிக்கு வரும் வரத்து வாய்க்கால் தூர் வாரப்படாததால், காட்டாமணக்கு, கருவேல மரங்கள் மற்றும் பல்வேறு வகையான செடி, கொடிகள் வளர்ந்து, ஏரி இருப்பதற்கான அடிச் சுவடுகளே இல்லை.
மேலும், பெரம்பலூர் நகரில் இருந்து வரும் கழிவு நீர் அனைத்தும் ஏரி நீரில் கலப்பதோடு, கழிவு மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள் கொட்டப்படுவதால், ஏரியில் உள்ள நீர் மாசடைந்துள்ளது.
இதனால், விவசாய நிலத்துக்கு நீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஏரியில் கழிவு நீர் கலப்பதால், ஏரியில் உள்ள மீன் வகைகள் அழிந்து வருகின்றன. மேலும், கொசு உற்பத்தியாகி, அந்தப் பகுதி பொதுமக்களுக்கு பல்வேறு வகையான தொற்று நோய் ஏற்பட்டு வருவதாகக் கூறுப்படுகிறது.
இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் ஏரியைத் தூர்வார வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலக வங்கி நிதியுதவியுடன் நீர்வள ஆதாரத் துறை, நீர்வளத் திட்டம் சார்பில் ரூ. 15.99 லட்சம் மதிப்பீட்டில் ஏரிக்கரை பலப்படுத்தப்பட்டது. ஆனால், ஏரி தூர்வாரப்படாததால், மழைநீரை சேமிக்க முடியாத சூழல் உள்ளது.
மேலும், வரத்து வாய்க்கால்கள் சீரமைக்கப்படாததால், ஏரிக்கு வரும் மழைநீர் குறைந்துள்ளது. இதனால், ஏரி நீரையே நம்பி இருந்த விவசாயிகள் போதுமான நீர் ஆதாரமின்றி நெல் சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருசில நபர்கள், ஏரிக்கரை மற்றும் கால்வாய்களை ஆக்கிரமித்து குடிசைகள் அமைத்து வருவதால், ஏரியின் பரப்பளவு குறைந்து வருகிறது.
இதுகுறித்து சின்னாறு உபவடிநில கோட்ட ஆட்சி மண்டலத் தொகுதி உறுப்பினர் க. கண்ணபிரான் கூறியது:
கடந்த 1997 ஆம் ஆண்டு கீழ ஏரி தூர்வாரப்பட்டது. அதன் பிறகு, ஏரியைச் சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் இல்லை. வரத்து வாய்க்கால் அனைத்தும் கழிவு நீராக மாறியுள்ளன. நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள 16 கழிப்பறைகளில் இருந்து வரும் கழிவு நீர் அனைத்தும் ஏரியில் கலக்கிறது. இதனால், அந்த ஏரியில் இருந்து விவசாயம் செய்து வந்த விவசாயிகள் ஒரு முறைக்கு மேல் சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 15 ஆண்டுகளாக ஏரி நீர் முழுவதும் மாசடைந்துள்ளதால், ஏரியில் செடி, கொடிகள் வளர்ந்து விஷ ஜந்துக்கள் அதிகளவு காணப்படுகின்றன.
அதேபோல, ஏரியைச் சுற்றியுள்ள குடிநீர்க் கிணறுகளும் மாசடைந்துள்ளதால், அந்தப் பகுதியில் உள்ள கிணற்று நீரைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான தொற்று நோய்கள் ஏற்பட்டு வருகின்றன.
கடந்த 2008 ஆம் ஆண்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் சேதமடைந்துள்ள ஏரிக் கரைகள், மதகுகள் மற்றும் கடைக்கால் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உலக வங்கி நிதியுதவித் திட்டத்தின் கீழ், ரூ.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால், இந்த நிதியின் மூலம் எந்தவித பணியும் மேற்கொள்ளவில்லை. விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, ஏரியைத் தூர்வார வேண்டும் எனக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 13 முறை வலியுறுத்தியுள்ளேன்.
அதேபோல, மாவட்ட ஆட்சியரை நேரில் வரவழைத்து, பாதிக்கப்பட்ட பகுதியைக் காண்பித்துள்ளேன். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. மேலும், நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் இருந்து வரும் கழிவு நீரை, ஏரியில் கலப்பதைத் தடுக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப் பணித் துறை அலுவலகத்தில் பலமுறை மனு அளித்துள்ளேன். இன்றுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றார் அவர்.
எனவே, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் கீழ ஏரியைச் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...