வன விலங்குகள் உயிரிழப்பு தடுக்கப்படுமா?
பெரம்பலூர், ஜன. 13: பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஹெக்டேர் நிலப் பரப்பில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள் உள்ளன. மேலும், இந்த மாவட்டத்தைச் சுற்றிலும் மலையைச் சார்ந்த காடுகளும் அதிகளவில் காணப


பெரம்பலூர், ஜன. 13: பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஹெக்டேர் நிலப் பரப்பில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள் உள்ளன. மேலும், இந்த மாவட்டத்தைச் சுற்றிலும் மலையைச் சார்ந்த காடுகளும் அதிகளவில் காணப்படுவதால், மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட காட்டு விலங்குகள் மிகுதியாகக் காணப்படுகின்றன.
இந்நிலையில், கோடைக்காலங்களில் வனப் பகுதியில் இருந்து குடிநீருக்காக வெளியே வரும் மான்கள், விவசாயிகளின் கிணறுகளில் தவறி விழுந்தும், மின் வேலிகளில் சிக்கியும் இறப்பதுடன், ஒரு சில சமூக விரோதிகளால் வேட்டையாடப்பட்டும் வருகின்றன.
விவசாய நிலங்களுக்கு வரும் மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் விவசாயிகள் பயிரிட்டுள்ள பருத்தி, மக்காச்சோளம், நெல், மரவள்ளிக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட பயிர்களைச் சேதப்படுத்தி வருகிறது.
இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களது பயிர்களையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் புகார் செய்து வந்தனர்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற மாவட்ட நிர்வாகம், வேப்பந்தட்டை பகுதியில் உள்ள வெண்பாவூர், கை.களத்தூர், சிறுநிலா, பாண்டகப்பாடி, அய்யனார்பாளையம் உள்ளிட்ட வனப் பகுதிகளில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில், வனத்துறையினரால் சூரியசக்தி மின்சாரத்துடன் கூடிய மின்வேலி அமைக்கப்பட்டது. இந்த வேலிகளை முறையாக அமைக்காததால், ஒருசில மாதங்களே செயல்பட்ட மின் வேலிகளுக்கு போதுமான சூரியசக்தி மின்சாரம் கிடைக்கவில்லை. இதனால், அரசு நிதி விரயமானதோடு, மின்வேலிகள் அனைத்தும் பயனற்றுக் கிடக்கிறது. இதனால், மின் வேலிகளை மீறி, மான் உள்ளிட்ட வன விலங்குகள் வெளியில் வந்து, வயல் வெளிகளில் உள்ள விளைபொருள்களை சேதப்படுத்தி வருகின்றன.
மேலும், வழிதவறி செல்லும் மான்கள் சாலைகளை கடக்கும் போது, வாகனங்களால் மோதி விபத்தில் சிக்கிவிடுவதால், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இதுபோன்ற விபத்துகளால் பெரம்பலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50-க்கும் அதிகமான மான்கள் இறந்துவிடுவதாக வனத் துறையினர் கூறுகின்றனர்.
வன விலங்குகள் உயிரிழப்பதற்கு வனத் துறையினர் அலட்சியமே காரணம் எனக் கூறப்படுகிறது. வன விலங்குகளைக் கட்டுப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட மின்வேலிகள் அனைத்தும் தரமாற்றதாக உள்ளது. மேலும், வனப் பகுதிகளில் அமைக்கப்பட்ட மின் வேலியில் தொழில்நுட்பக் குறைபாடு உள்ளதால், போதிய மின்சாரம் கிடைக்காமல் மின் வேலிகளை மீறி வனவிலங்கள் வெளியே வருகிறது.
இதைக் கட்டுப்படுத்த வனப் பகுதிகளில் உள்ள அனைத்து இடங்களுக்கும் தரமான மின் வேலிகள் அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதோடு, வெளியில் வரும் விலங்குகளின் உயிரிழப்பைத் தடுக்க, கோடைக்காலங்களில் வனப் பகுதிகளில் நீர்த் தேங்கி நிற்கும் வகையில் சிறு, சிறு நீர்த்தேக்கம் அமைக்க வனத்துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் ஆர். ராஜாசிதம்பரம் கூறியது:
பெரம்பலூர் மாவட்டம் விவசாயத்துக்கு ஏற்ற பகுதியாகும். இதனால், பல்வேறு பகுதிகளில் பணப் பயிர்கள் உள்ளிட்ட தானியங்களை விவசாயிகள் உற்பத்தி செய்து வருகின்றனர்.
இயற்கை சீற்றங்களாலும், போலி விதைகளாலும் பாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள், அண்மைக்காலமாக வன விலங்குகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.
விவசாயிகளின் பயிர்களையும், வன விலங்குகளையும் பாதுகாக்க வெண்பாவூர் உள்ளிட்ட ஒருசில வனப் பகுதிகளில் மட்டுமே மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், விவசாயிகளுக்கு எந்தவித பலனும் கிடையாது.
வனப் பகுதிகளில் மின் வேலிகளை தரமாகவும், அனைத்து இடங்களிலும் அமைக்காததால், விவசாயப் பயிர்கள் சேதமடைவதோடு, வன விலங்குகள் உயிரிழப்பும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
இதைக் கட்டுப்படுத்த எஞ்சியுள்ள வனப் பகுதிகளில் தரமான மின் வேலிகள் அமைக்க வேண்டும். மேலும், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, விவசாய நிலங்களில் மரம் வளர்க்க மானியம் அளிப்பதுபோல, வயல்வெளிகளில் மின் வேலிகள் அமைக்க மத்திய அரசு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்து, மானியம் அளிக்க முன்வர வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...