எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

"அம்பேத்கர்'- அபூர்வமான அரங்கு நிறைந்த காட்சிகள்!

திருச்சி, பிப். 16: இப்போதெல்லாம் திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சியைக் காண வேண்டுமானால், யாராவது "ஸ்டார்' நடிகர், "கலைமாமணி' நடிகை, "பிரம்மாண்ட' இயக்குநர் அந்தப் படத்தில் பங்கேற்றிருக்க வேண்டும்.

News image
Updated On :28 டிசம்பர் 2023, 4:31 pm

சா. ஜெயப்பிரகாஷ்

திருச்சி, பிப். 16: இப்போதெல்லாம் திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சியைக் காண வேண்டுமானால், யாராவது "ஸ்டார்' நடிகர், "கலைமாமணி' நடிகை, "பிரம்மாண்ட' இயக்குநர் அந்தப் படத்தில் பங்கேற்றிருக்க வேண்டும். இதையும்தாண்டி, அரை மணிநேரத்துக்கு ஒரு முறை முன்னணி தொலைக்காட்சிகளில் திரும்பத் திரும்ப "டிரெய்லர்' போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இப்படியிருந்தும் முதல் நாள்- முதல் காட்சிக் கூட்டம் மறுநாள்- மறுகாட்சியில் காற்றுபிடுங்கிய பலூனாகிவிடுகிறது.

  இந்தச் சூழலிலும் "டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்' என்ற மராத்திய மொழித் திரைப்படம், தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு, திருச்சியில் கடந்த 3 நாள்களாக அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிவருவது எல்லோரையும் வாயில் விரல் மூடி அதிசயிக்க வைத்திருக்கிறது.

  இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம். இயக்குநர் ஜப்பார் பாட்டீல், நடிகர் மம்முட்டி, நடிகை சோனாலி. தமிழ்நாட்டில் முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் சார்பில் இந்தப் படம் திரையிடப்பட்டு வருகிறது.

  திருச்சியில் மெகா ஸ்டார் திரையரங்கில் 3 காட்சிகள் முடிந்து, வியாழக்கிழமை 4-வது காட்சி முடிவடையவுள்ளது. முதல் இரு காட்சிகளும் அரங்கு நிறைந்த காட்சிகளாகவும், 3-ம் நாள் காட்சி 90 சத இருக்கைகள் நிரம்பியதாகவும் இருந்தன.

  செய்தித் தாள்களின் செய்தி நறுக்குகளைக் காட்டி கதையை நகர்த்திச் செல்வது, பின்னணி இசை, காட்சிப்படுத்தும் விடியோ தொழில்நுட்பம் போன்றவற்றை 12 ஆண்டுகளுக்கு முன்பே சிறப்புடன் ஒருங்கிணைத்திருப்பதை அவர்கள் குறிப்பிடும், திரைப்பட விமர்சகர்கள், தொழில்நுட்ப ரீதியாக பலம் வாய்ந்த படம் அம்பேத்கர் என்கின்றனர்.

  அதேபோல, ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு நிரம்பிய அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றின் முக்கியமான அம்சங்களைத் தவறவிடாமல், கருத்துப் பிறழ்வு ஏற்பட்டு விடாமல் கூர்மையாகப் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது என்றும் கூறுகின்றனர்.

  அதாவது, அம்பேத்கர் தன் வாழ்வின் மூலம் சொல்லிய செய்திகளை- வாழ்வின் மையத்தை அப்படியே பதிவு செய்துள்ளனர். இதுபோன்ற அம்சம் ஏற்கெனவே எடுக்கப்பட்ட பெரியார், காந்தி, பாரதி படங்களில் அமையவில்லை என்றும் கூறுகின்றனர்.

  அம்பேத்கர் தனது கடைசிக் காலத்தில் லட்சக்கணக்கானோருடன் பெüத்தத்தைத் தழுவும் அந்த பிரம்மாண்டத்துடன் நிறைவு பெறுகிறது படம்.

  மாணவப் பருவத்திலிருந்து, பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் "கால் மேல் கால் போட்டு' அமர்ந்து விவாதிக்கும் காட்சிகளில், இறுதிக் காலத்தில் கைத்தடி ஊன்றி மேடையேறி "பெüத்தம் தழுவல் ஏன்?' என விளக்கும் காட்சி வரை நடிப்புத் திறனால் அம்பேத்கரை வென்றிருக்கிறார் நடிகர் மம்முட்டி. பொருத்தமாகத்தான் தேசிய விருது அளிக்கப்பட்டிருக்கிறது.

  காங்கிரஸýடனும், காந்தியுடனுமான முரண்கள், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களுடனான உரசல்கள் அனைத்தும் அப்படியே அம்பேத்கரின் சொற்களுடனே பயன்படுத்தப்பட்டிருப்பது முக்கியமான அம்சம். அவை அத்தனைக்கும் முழுமையான ஆதாரம் இருப்பதுதான் தணிக்கைக் குழுவை அமைதிப்படுத்தியிருக்க வேண்டும்.

  அரசியலமைப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டு "இந்தச் சட்டத்தை நல்லவர்கள் பயன்படுத்தினால் நல்லது, கெட்டவர்கள் கையில் கிடைத்தால் அவர்களுக்குத் தக்கவாறு இதைப் பயன்படுத்த முடியும்' என்ற உண்மையான எச்சரிக்கையை அம்பேத்கர் அன்று பதிவு செய்தது, இப்போதும் தேவைப்படுகிறது.

  இந்தக் காட்சி உள்படப் பலவற்றுக்கும் பார்வையாளர்கள் அவ்வப்போது தவறாமல் கைத்தட்டி உற்சாகமாக (சில இடங்களில் விசிலும்கூட) ஆர்ப்பரிப்பது, படத்தின் அயர்ச்சி தராத திரைமொழியைக் காட்டுகிறது.

  இத்தனைப் பெருங்கூட்டத்தைக் கண்டு திரையரங்க நிர்வாகத்தினரே ஆச்சரியப்பட்டது ஒருபுறம். படத்துக்கு ரூ. 30, மாணவர்கள் ரூ. 20 மட்டுமே  கொடுத்துவிட்டு, இரு சக்கர வாகன நிறுத்தத்தில் ரூ. 10-ம் கார்களுக்கு ரூ. 20 வசூலிக்கப்பட்டது மறுபுறம்.

  இரு இலக்க எண்ணிக்கையில் பார்வையாளர்களைக் கொண்டு படம் ஓட்டிய எடுத்துக்காட்டுகள் மாநகரிலுள்ள திரையரங்குகளுக்கு இப்போது சர்வசாதாரணம். அதேபோல, "எந்தப் பெரிய புள்ளியும்' கதையோ, வசனமோ எழுதாமல்- டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி இலவசமாக அளிக்காமல், அரங்கு நிறைந்த காட்சிகள் நடப்பதும் அபூர்வம்.

  இருந்தபோதும், திரையரங்க வாயிலில் ஒருவரின் புலம்பல் புறக்கணிக்க முடியாத கருத்து- "அம்பேத்கரால், அவரது போராட்டத்தால், அவரது சட்டத்தால் பலனடைந்தவர்கள் மனது வைத்திருந்தால் இந்தப் படம் ஒரு முழு மாதமும், அத்தனைக் காட்சிகளும் அரங்கு நிறைந்த காட்சிகளாகத்தான் ஓடியிருக்க வேண்டும்!'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.