மின் தடை நேரம் மாற்றி அமைக்கப்படுமா?
அரியலூர், டிச.18: பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ள நிலையில், மாணவ, மாணவிகளின் நலன் கருதி மாலை, இரவு நேரங்களில் மின் தடை செய்யப்படுவதை மாற்றி அமைக்க வேண்டும் என பெற்றோர்க


அரியலூர், டிச.18: பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுகள் விரைவில் நடைபெற உள்ள நிலையில், மாணவ, மாணவிகளின் நலன் கருதி மாலை, இரவு நேரங்களில் மின் தடை செய்யப்படுவதை மாற்றி அமைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் 2,500 மெகாவாட் முதல் 3,000 மெகாவாட் மின் பற்றாக்குறை இருந்து வருவதால், மின் தடை செய்யப்பட்டு வருகிறது.
நகர்ப்புறங்களில் முன்பு 2 மணி நேரமாக இருந்த மின் தடை தற்போது 4 மணி நேரத்துக்கு மேலாகவும், கிராமப்புறங்களில் 3 முதல் 4 மணி நேரமாக இருந்த மின் தடை தற்போது 6 முதல் 7 மணி நேரமாகவும் நீடிக்கப்பட்டுள்ளது.
காலையில் 3 மணி நேரமும், முற்பகல் அல்லது பிற்பகலில் 2 மணி நேரமும், மாலையில் 45 நிமிஷங்கள் முதல் 1 மணி நேரமும், இரவில் 2 அல்லது 3 முறை அரை மணி நேரமும் மின் தடை என்பது கடந்த சில மாதங்களாக சென்னை தவிர்த்த மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து வரும் நடைமுறையாகும்.
இந்நிலையில், வருகிற மார்ச் மாதம் 8 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், தற்போது அரையாண்டுத் தேர்வுகளுக்காகவும், அதைத் தொடர்ந்து, பொதுத் தேர்வுக்காகவும் தயாராகிக் கொண்டிருக்கும் தங்களுக்கு மாலை, இரவு நேரங்களில் செய்யப்படும் மின் தடை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்கின்றனர் பிளஸ் 2 மாணவ, மாணவிகள்.
அரையாண்டுத் தேர்வுகள் முடிந்த பின்னர் திருப்புதல் தேர்வுகளும், அதைத் தொடர்ந்து, செய்முறைத் தேர்வுகளும் நடைபெறும். இவ்வாறு தேர்வுகள் தொடர்ச்சியாக இருக்கும் நிலையில், மின் தடை தொடர்ச்சியாக ஏற்பட்டால் நாங்கள் எவ்வாறு தேர்வுக்குப் படிப்பது என்கின்றனர் அரியலூர் நகரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள்.
மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், அதன் பின்னர் 8 மணி முதல் 8.30 மணி வரை அல்லது 9 மணி முதல் 9.30 மணி வரையிலும் என இரவு நேரங்களில் மின் தடை செய்யப்படுவதால், மாணவ, மாணவிகளால் முழுமையாகப் படிப்பின் மீது கவனம் செலுத்த முடியாமல் போகிறது. எனவே, மாணவ, மாணவிகளின் கல்வி நலனைக் கவனத்தில் கொண்டு, மாலை, இரவு நேரங்களில் மின் தடை செய்யப்படுவதை மாற்றி அமைக்க வேண்டும் என்கின்றனர் அவர்களின் பெற்றோர்.
பகலில் 3 மணி நேரமும், இரவில் 3 மணி நேரமும் விவசாயத்திற்காக மும்முனை மின்சாரமும் வழங்கப்படுவதாக மின் வாரியம் அறிவித்திருந்தாலும், எப்போது மின்சாரம் வரும், எப்போது மின் தடை செய்யப்படும் என்பது விவசாயிகளுக்குத் தெரியவில்லை.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் அரியலூர் மாவட்டச் செயலர் இரா. உலகநாதன் கூறியது:
மின் தடையின் பாதிப்பு எங்களோடு போகட்டும், வருங்கால சமுதாயமாக கருதப்படும் மாணவ, மாணவிகளாவது நன்றாகப் படித்து தேர்வு எழுதும் வகையில், மாலை, இரவு நேரங்களில் மின் தடை செய்யப்படுவதை மாற்றி அமைக்க வேண்டும்.
இதைப் பல முறை விவசாயக் குறைதீர்க்கும் நாள் கூட்டம், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் போன்றவற்றில் நான் வலியுறுத்தியுள்ளேன். மாணவ, மாணவிகளின் நலன்கருதி, இதற்கு உரிய தீர்வை மாவட்ட நிர்வாகம் எடுக்கும் என நம்புகிறேன். விரைவில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படக் கூடும்.
இவ்வாறு அடுத்தடுத்து தேர்வுகள் வர உள்ள நிலையில் 10 லட்சம் முதல் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் நலன் கருதி, இந்த பிரச்னையில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி, மின் தடையை வேறு நேரங்களில் மாற்ற வேண்டும் என்றார் அவர்.
பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்வதில் எவ்விதச் சிக்கலும் இல்லாமல், மாலை, இரவு நேரங்களில் தடையில்லாத மின்சாரத்தை வழங்கி, அவர்கள் சிறப்பாக தேர்வெழுத அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...