ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பெரிய கோயில் ஓவிய அறை:​ பொதுமக்கள் பார்வையிடத் திறக்கப்படுமா?

தஞ்சாவூர், செப். 22: தஞ்சாவூர் பெரிய கோயில் கருவறைச் சுற்றிலுள்ள சாந்தாரக் கூடத்திலுள்ள சோழர் கால ஓவியங்கள் மற்றும் நாட்டிய கரணச் சிற்பங்கள் உள்ள அறைகள் பூட்டப்பட்டுள்ளன. அந்த அறைகள் திறக்கப்பட்டு அதி

News image
Updated On :27 டிசம்பர் 2023, 5:37 pm

ஆர்.​ ​ தங்கராஜு

தஞ்சாவூர், செப். 22: தஞ்சாவூர் பெரிய கோயில் கருவறைச் சுற்றிலுள்ள சாந்தாரக் கூடத்திலுள்ள சோழர் கால ஓவியங்கள் மற்றும் நாட்டிய கரணச் சிற்பங்கள் உள்ள அறைகள் பூட்டப்பட்டுள்ளன. அந்த அறைகள் திறக்கப்பட்டு அதிலுள்ள ஓவியங்கள், சிற்பங்களைப் பார்த்து ரசிக்க முடியுமா என பொதுமக்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மாமன்னர் ராஜராஜ சோழன் மிகச்சிறந்த கலாரசிகன் என்பதை அவரால் உருவாக்கப்பட்ட பெரிய கோயிலால் அறிகிறோம். அவரது கலை ஆர்வம், சிற்பம் மற்றும் ஓவியக் கலையிலும் இருந்துள்ளது என்பதற்குச் சான்றாக இருப்பது பெரிய கோயில் கருவறைச் சுற்றில் சாந்தாரம் என்ற அறையிலுள்ள ஓவியங்களும், நடன கரணச் சிற்பங்களுமே.

கோயில் கருவறை இரண்டு சுற்றுச் சுவர்களால் ஆனது. இடையே சாந்தாரம் என்னும் சுற்றுக் கூடம் உள்ளது. இரு தளங்களிலும் இந்தக் கூடங்கள் உண்டு. கீழ்த் தளத்தில் உள்ள சுற்றுக் கூடத்தில் கருங்கல் சுவரின் மேல் சுண்ணாம்புக் காரை பூசப்பட்டு, அதன் மேல் ஓவியங்களை ராஜராஜ சோழனின் ஓவியர்கள் வரைந்துள்ளனர்.

பின்னர், இவற்றின் மீதே விஜயராகவ நாயக்கர் காலத்தில் மீண்டும் சுண்ணாம்புக் காரை பூசப்பட்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

இதனால், சோழர்கால ஓவியங்கள் முழுவதும் நாயக்கர் கால ஓவியங்களால் மறைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கடந்த 1931 ஆம் ஆண்டு நாயக்கர் கால ஓவியங்களிலிருந்து காரை பெயர்ந்ததால் அந்த இடத்தில் சோழர் கால ஓவியங்கள் இருப்பது தெரிய வந்தது.

பின்னர், இந்தியத் தொல்லியல் துறையினர் வேதியியல் நிபுணர்களைக் கொண்டு நாயக்கர் கால ஓவியங்கள் பலவற்றை அகற்றி, ராஜராஜ சோழன் கால ஓவியங்களை வெளி உலகுக்கு தெரியப்படுத்தினர்.

சாந்தாரம் அறையின் மேற்குப் பகுதியில் சந்தியா நிறுத்த மூர்த்திக்கு இடப்புறம் உள்சுவரில் தேவார மூவருள் ஒருவரான சுந்தரர் வரலாற்றைக் கூறும் ஓவியம் உள்ளது.

தவிர, உருத்திரனின் சிற்பம், அகத்தியர் ஓவியம், சுந்தரரின் திருமணத்தை சிவ பெருமான் ஆவண ஓலையைக்காட்டி தடுத்த காட்சி, திருக்கயிலாய காட்சி, நாட்டிய மங்கைகள் காட்சி, ஆலமரத்தின் அடியில் முனிவர்கள் அமர்ந்துள்ள காட்சி, மரக்கிளை மீது விலங்குகள் உள்ள ஓவியங்கள் உள்ளன.

ஓவியம் மற்றும் கரணச் சிற்பங்கள் இருக்கும் அறையை யாரும் பார்க்க முடியாது.

பூட்டி வைக்கப்பட்டுள்ள அந்த அறை அதிகாரம் மற்றும் வசதி படைத்தவர்கள் மட்டுமே பார்த்து ரசிக்கும் வகையில், அவ்வப்போது திறக்கப்படுகிறது. சாமானியர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

எவ்வித அறிவியல் வளர்ச்சியும் இல்லாத காலத்தில் இவ்வளவு சிறப்பாக அழிக்க முடியாத வண்ண மைகளைக் கொண்டு தீட்டியிருக்கக் கூடிய ஓவியங்கள் உலகமே வியந்து பார்க்கக் கூடியவை. இந்த ஓவியங்கள் மற்றும் கரணச் சிற்பம் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள பெரிய கோயிலுக்குள் இருப்பதை பொதுமக்கள் பார்த்து மகிழ வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில், அது மக்கள் பெற்ற பயனாகவே கருதப்படும்.

கட்டடக் கலை, சிற்பக் கலை, கல்லெழுத்துக் கலை (கல்வெட்டு), இலக்கியங்கள் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு திட்டமிடப்பட்டிருக்கும் என யோசித்துப் பார்த்தால், இன்றைய அறிவியல் வளர்ச்சியில் மெய்சிலிர்க்க வைக்கிறது. கட்டடம் மற்றும் சிற்பக் கலையை வெளியிலிருந்து பார்த்து மகிழும் போது கருவறைச் சுற்றில் உள்ள ஓவியத்தை பார்த்து ரசிக்க முடிவில்லை.

அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல் ஆகிய இடங்களிலெல்லாம் ஓவியங்களைப் பார்க்க முடிகிறது. ஆனால், பெரிய கோயிலுக்குள் உள்ள ஓவியங்களைப் பார்க்க முடியவில்லை. கலை ஆர்வம் உள்ளவர்களால் கூட அங்கு போக முடியாத சூழல் உள்ளது.

ஓவியம் பாதிக்கப்படாத வகையில் நவீன முறையைக் கையாண்டு மாமன்னரின் பெருமைகளை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையிலான, வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்க வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

பெரிய கோயில் கருவறையிலுள்ள சோழர்கால ஓவியங்களை தமிழ்ப் பல்கலைக்கழகம் நூலாகத் தொகுத்துள்ளது.

பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, செப். 24 - ஆம் தேதி தமிழக முதல்வர் கருணாநிதி தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் "இந்தியப் பெருமையின் தஞ்சையின் பங்கு' என்ற தலைப்பில் நடைபெறவுள்ள ஆய்வரங்கைத் தொடக்கிவைத்து, இந்நூலையும் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.