ஹோமியோபதி மருத்துவப் பிரிவு தொடங்கப்படுவது எப்போது?
திருச்சி, செப். 7: திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஹோமியோபதி மருத்துவப் பிரிவு தொடங்கப்படுவது எப்போது? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது. 158 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த


திருச்சி, செப். 7: திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஹோமியோபதி மருத்துவப் பிரிவு தொடங்கப்படுவது எப்போது? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
158 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும் பத்தாயிரத்துக்கும் மேல்பட்டோர் புறநோயாளிகளாகவும், ஏறத்தாழ 1,300 பேர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.
மாவட்ட தலைமை மருத்துவமனையாக இருந்த இந்த மருத்துவமனை, கடந்த 1997-ம் ஆண்டு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மருத்துவமனையாக மாற்றி அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கேற்ப வசதிகள் இதுவரை செய்யப்படவில்லை என்பதே உண்மை.
நாளுக்கு நாள் உள்நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவந்த போதிலும், இங்கு இருப்பது 600 படுக்கைகள் மட்டுமே. நாள்தோறும் 50 சதம் பேர் தரையில்தான் படுத்து சிகிச்சை பெற வேண்டியுள்ளது.
கருவிகள் பழுது: சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரத்தம் சுத்திகரிப்பு செய்யப் பயன்படுத்தப்படும் (டயாலிஸிஸ்) கருவி கடந்த சில மாதங்களாகப் பழுதாகியுள்ளது.
வயிற்றுநோய்கள் தொடர்பாக பரிசோதனை செய்யும் என்டாஸ்கோபி, லேப்ராஸ்கோபி கருவி, பித்தநீர், சிறுநீர் பரிசோதனை செய்யும் சிஸ்டாஸ்கோபி கருவி, மலம் பரிசோதனை செய்யும் கொளனாஸ்கோபி கருவி போன்றவையும் செயல்படாமல் பழுதாகியுள்ளன.
இதுபோன்ற நோய்களுக்காக பரிசோதனை செய்ய வரும் நோயாளிகளை தஞ்சாவூர், மதுரை, கோவை அல்லது சென்னைக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் நிலை உள்ளது.
ஹோமியோபதி பிரிவு: ஆங்கில மருத்துவத்தில் பல பிரச்னை என்றால், விரைவில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட ஹோமியோபதி மருத்துவப் பிரிவு இதுவரை தொடங்கப்படாததால், மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
திருச்சி, சேலம், கோவையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஹோமியோபதி மருத்துவப் பிரிவு தொடங்கப்படும் என சட்டப்பேரவைக் கூட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது.
தனது துறையின் மானியக் கோரிக்கை விவாதத்துக்கு பதில் அளித்த பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அவர் கூறியது:
ஹோமியோபதி மருந்துகள் பக்க விளைவுகள் அற்றதும், மலிவான விலையில் கிடைக்கக் கூடியதும் ஆகும். ஹோமியோபதி மருத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஹோமியோபதி மருத்துவப் பிரிவு தொடங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்ட மருத்துவமனைகள், வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் இப்போது 38 ஹோமியோபதி மருத்துவப் பிரிவுகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
நிகழாண்டில் திருச்சி, சேலம், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் | 28.05 லட்சத்தில் ஹோமியோபதி மருத்துவப் பிரிவு தொடங்கப்படும்' என்றார்.
ஆனால், 5 மாதங்கள் ஆகியும் ஹோமியோபதி மருத்துவப் பிரிவு தொடங்குவதற்கான எந்தவித அறிகுறியும் திருச்சி அரசு மருத்துவமனையில் தெரியவில்லை.
மொத்தமுள்ள 25 ஏக்கர் நிலத்தில் வெறும் 5 ஏக்கர் மட்டுமே கட்டடம் உள்ள நிலையில், புதிதாகக் கட்டடம் கட்ட எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தும் இதுவரை எந்தக் கட்டடமும் கட்டப்படவில்லை.
எனவே, இந்தத் திட்டம் வெறும் அறிவிப்பு அளவில் மட்டுமே இருந்துவிடுமோ? என்ற அச்சத்தில் உள்ள மக்கள், விரைவில் ஹோமியோபதி மருத்துவப் பிரிவு தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...