பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் நில மோசடிகள்
பெரம்பலூர், அக். 10: பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் நில மோசடிகளைத் தடுக்க உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. ரியல் எஸ்டேட் என்ற வீட்டுமனை வி


பெரம்பலூர், அக். 10: பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் நில மோசடிகளைத் தடுக்க உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ரியல் எஸ்டேட் என்ற வீட்டுமனை விற்பனைத் தொழில் பிரதானத் தொழில்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்தத் தொழிலில் கமிஷன் என்ற பெயரில் கணிசமாகக் கிடைக்கும் தரகு தொகை காரணமாக, படிக்காதவர் முதல் பட்டதாரிகள் வரை அனைத்துத் தரப்பினரும் இதில் ஈடுபட்டுள்ளனர்.
மின் வெட்டு, தண்ணீர் தட்டுப்பாடு, இடு பொருள்கள் விலையேற்றம், ஆள் பற்றாக்குறை, அறியாமை ஆகியவற்றை பயன்படுத்தி விவசாயிகளிடமிருந்து விளை நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி வீட்டுமனைகளாக்கி விற்பனை செய்வதில், முக்கிய பிரமுகர்கள், அரசியல்வாதிகள், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விவசாயம் பிரதானத் தொழிலாக விளங்கும் மாவட்டங்களிலும்கூட ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, தவணை முறை வீட்டுமனை விற்பனைத் திட்டத்தால் நடுத்தர, எளிய மக்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர்.
ஆனால், பேராசை, அறியாமை ஆகியவற்றை பயன்படுத்தி இந்தத் தொழில் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேறொருவர் நிலத்துக்கு- புறம்போக்கு இடங்களுக்கு போலியாக பத்திரம் தயார் செய்து விற்பது, ஓரே இடத்தை சில ஆண்டுகள் இடைவெளியில் ஓன்றுக்கும் மேற்பட்டவருக்கு விற்பது, முன்பணம் பெற்றுக் கொண்டு பத்திரப் பதிவு செய்யாமல் இழுத்தடிப்பது என பல்வேறு மோசடிகள் அரங்கேரி வருகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகேயுள்ள அயனாவரம், காரை, தெரணி, கல்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், பவர் பத்திரம் என்ற பெயரில் விவசாயிகளின் நிலங்களைப் பதிவு செய்த மோசடி கும்பல், நில உரிமையாளர்களின் புகைப்படங்களுக்குப் பதிலாக போலியாக அடையாளம் தெரியாத சிலரது புகைப்படங்களை ஓட்டி, கையெழுத்திட்டு நிலங்களை விற்பனை செய்துவிட்டனர். இந்த மோசடியால் அந்தப் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் அதிகமான விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
இதேபோல, இரண்டாண்டுகளுக்கு முன்பு வேப்பந்தட்டை அருகேயுள்ள பிம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த 92 விவசாயிகளுக்குச் சொந்தமான சுமார் 270 ஏக்கர் விவசாய நிலங்களை, போலி ஆவணங்கள் மூலம் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபருக்கு ஒரு கும்பல் விற்பனை செய்துவிட்டது வாலிகண்டபுரம் பத்திரப் பதிவு அலுலகத்தில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிய வந்தது.
இதுதொடர்பாக மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயிகள் ஆட்சியரிடம் மனு அளித்ததன் பேரில், போலீஸôர் 6 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், துறையூர் பகுதியில் சுமார் 450 ஏக்கர் அளவுக்கு நில மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் ஆர். ராஜா சிதம்பரம் கூறியது:
நில மோசடி சம்பவங்களைத் தடுக்கும் வகையில், பத்திரப் பதிவு அலுவலர்கள் இடத்தையோ, நிலத்தையோ விற்பனை செய்யும் நபர்களிடம் விசாரணை செய்த பிறகே நிலத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்ற அரசாணை 2009-ல் வெளியிடப்பட்டது. ஆனால், இஹைத பத்திரப் பதிவு அலுவலர்கள் முறையாக ஹகடைப்பிடிப்பதில்லை.
மேலும், பட்டா இல்லாதவர்களிடம் இருந்து பெறப்படும் நிலங்களை, கணினி சிட்டா மூலம் பத்திரப் பதிவு செய்து கொள்ளலாம் என்ற உத்தரவு மோசடி பேர்வழிகளுக்கு மிகவும் உதவியாகப் போய்விட்டது.
இதைத் தடுக்க, கணினி சிட்டா மூலம் நிலம் விற்பனை செய்யும் போது, கிராம நிர்வாக அலுவலர், வருவாய்த் துறை அலுவலர்களிடம் சான்று பெறுவதை கட்டாயமாக்க வேண்டும். மேலும், பவர் பத்திரம் மூலம் விற்பனை செய்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம், நில மோசடி சம்பவங்களை முற்றிலும் தடுக்க முடியும் என்றார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தொடரும் நில மோசடிகளைத் தடுக்க மாவட்ட நிர்வாகம், காவல் துறை, வருவாய் துறை, பத்திரப் பதிவு ஆகிய துறையினர் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...