எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

திருச்சி- பெங்களூர் சிறப்பு ரயிலை நிறுத்தத் திட்டமா?

திருச்சி, அக். 8: திருச்சி- பெங்களூர் இடையே தினமும் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் சேவையை நிறுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  திருச்சியிலிருந்து பெங்களூருக்குச் ச

News image
Updated On :27 டிசம்பர் 2023, 5:49 pm

தி. இன்பராஜ்

திருச்சி, அக். 8: திருச்சி- பெங்களூர் இடையே தினமும் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் சேவையை நிறுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 திருச்சியிலிருந்து பெங்களூருக்குச் செல்ல நேரடியாக ரயில் சேவை இல்லாத நிலையில், இந்த நிதியாண்டு தொடக்கத்தில் திருச்சி- பெங்களூர் சிறப்பு ரயில் (வண்டி எண். 0669/10) அறிமுகப்படுத்தப்பட்டது.

  இந்த ரயில் மூலம் திருச்சி மற்றும் சுற்றுவட்டராப் பகுதி மக்கள் மிகவும் பயனடைந்தனர். சேலம் செல்லும் பயணிகளும் இந்த ரயிலால் அதிகப் பயன்பெற்று வருகின்றனர்.

   இதுதவிர, மயிலாடுதுறை- மைசூர் இடையே இயக்கப்படும் மைசூர் விரைவு ரயில் திருச்சி வழியாக இயக்கப்பட்டு வந்தாலும், அந்த ரயிலின் முழுப் பயனும் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை பகுதி மக்களுக்கே கிடைக்கிறது.

  மைசூர் விரைவு ரயில் முதலில் திருச்சியில் இருந்துதான் இயக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூர் வரையும், பின்னர் மயிலாடுதுறை வரை நீட்டிக்கப்பட்டது.

  திருச்சி- பெங்களூர் இடையே தற்போது இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில் தினமும் மாலை 6 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு பெங்களூரைச் சென்றடையும்.

   எதிர் வழித்தடத்தில் தினமும் இரவு 8.15 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு திருச்சியை வந்தடையும். இரவு நேர ரயில் என்பதால், பயணிகள் இடையே இந்த ரயிலுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

  ஆனால், இந்தச் சிறப்பு ரயிலை இந்த மாதத்தோடு நிறுத்த ரயில்வே நிர்வாகம் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அக்டோபர் 15-ம் தேதிக்குப் பிறகு பயணம் செய்ய முன்பதிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பயணிகள் தெரிவிக்கின்றனர்.

  இதற்கிடையே, அக்டோபர் 13-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்த திருச்சி- பெங்களூர் சிறப்பு ரயிலை, தற்போது அக். 15-ம் தேதி வரை இரண்டு நாள்களுக்கு மட்டும் நீட்டித்து ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் சி.கே. சிவராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், "அக். 15-ம் தேதி வரை திருச்சி- பெங்களூர் சிறப்பு ரயில் நீட்டிக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

  கடந்த மாதம் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் எதிர் வழித்தடத்தில் பெங்களூர்- திருச்சி இடையே அக்டோபர் 15-ம் தேதி வரைதான் நீட்டிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதுபற்றிய அறிவிப்பும் தற்போது வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்படவில்லை.

  எந்தச் சிறப்பு ரயிலாக இருந்தாலும் குறைந்தது ஒரு மாத காலம் வரையாவது நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படுவது வழக்கம். ஆனால், தற்போது மூன்று நாள்களுக்கு மட்டுமே நீட்டித்திருப்பது பயணிகளிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

  திருச்சி, புதுக்கோட்டை பகுதி மக்கள் பெங்களூர் செல்ல வசதியாக இருந்த  இந்த ஒரு ரயில் சேவையும் நிறுத்தப்பட்டால், மீண்டும் பேருந்துகளை நாடித்தான் செல்ல வேண்டுமா? என்ற கவலை மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

  திருச்சியில் அண்மையில் நடைபெற்ற திருச்சி- மங்களூர் ரயில் சேவை தொடக்க விழாவில் பேசிய மக்களவைத் தொகுதி உறுப்பினர் ப. குமார் "திருச்சி- பெங்களூர் சிறப்பு ரயிலை நிரந்தரமாக்க வேண்டும்' என வலியுறுத்தினார்.

   ஆனால், அதற்கு எதிர்மாறாக தற்போது சிறப்பு ரயிலை நிரந்தரமாக நிறுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக வெளியாகும் தகவல் திருச்சி பகுதி மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

  இதுகுறித்து மக்களவை உறுப்பினர் ப. குமார் கூறியது:

  "திருச்சி- பெங்களூர் இடையே இயக்கப்பட்டு வந்த மைசூர் விரைவு ரயில் முதலில் தஞ்சாவூர் வரையும், பின்னர் மயிலாடுதுறை வரையும் நீட்டிக்கப்பட்டது. மலைக்கோட்டை விரைவு ரயில் திருச்சி மக்களுக்கு போதிய பயனில்லாமல் போனது போல இந்த ரயிலும் அதிகம் பயனில்லாமல் போனது.

   இதைச் சரிகட்டவே சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. ஆனால், இதை ரயில்வே நிர்வாகம் நிறுத்த முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டால் சேலம், பெங்களூர் செல்ல மக்கள் மிகவும் அவதிப்படுவார்கள்.

  எனவே, எந்தக் காரணம் கொண்டும் திருச்சி- பெங்களூர் சிறப்பு ரயில் சேவையை நிறுத்தக் கூடாது' என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.