சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டம் நிறைவேற்றப்படுமா?
பெரம்பலூர், நவ. 15: பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்பார்க்கப்பட்டு வரும் சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலை


பெரம்பலூர், நவ. 15: பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்பார்க்கப்பட்டு வரும் சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக அரசால் கடந்த ஆண்டு கைவிடப்பட்டதாகக் கூறப்படும் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்களும், விவசாயிகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் அருகேயுள்ள மளையாளப்பட்டி பகுதியில் அமைந்துள்ளது சின்னமுட்லு. இயற்கை எழில் சூழ்ந்த பச்சை மலை அடிவாரத்தின் மூன்று பக்கங்களும் மலைகளால் சூழப்பட்டுள்ள இந்தப் பகுதியில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலத்தில், பெருக்கெடுத்து ஓடும் மழை நீரை சேமித்து வைத்தால், கோடைக் காலங்களில் விவசாயப் பணிக்கும், அந்தப் பகுதி பொதுமக்களின் குடிநீர்த் தேவைக்கும் பயன்படும் என்பது அரும்பாவூர் பகுதி சமூக நல ஆர்வலர்கள், விவசாயிகளின் கருத்தாகும்.
மேலும், சின்னமுட்லு பகுதியில் உள்ள பச்சை மலை உச்சியில் இருந்து, கொட்டும் அருவியானது எட்டெருமை பாலி என்று அந்தப் பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. வடகிழக்கு பருவ மழைக் காலமான அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரையிலான நான்கு மாதங்களும், பச்சை மலை பகுதியில் மிகுதியாக பொழியும் மழை நீரானது, எட்டெருமை பாலி அருவி வழியாக வழிந்தோடி, கல் லாற்றில் வெள்ள நீராகப் பெருக்கெடுத்து, அரும்பாலூர் பகுதியில் உள்ள முக்கிய ஏரிகள் நிரம்பியது போக, எஞ்சிய மழைநீர் அனைத்தும் கல்லாற்றின் வழியே கரைபுரண்டோடி, கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலில் கலக்கிறது.
பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் எந்தவிதப் பலனுமின்றி கடலில் கலக்கும் இந்த மழை நீரைச் சேமிக்க, சின்னமுட்லு பகுதியில் நீர்த்தேக்கம் ஒன்று அமைக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைக் கருத்தில் கொண்ட தமிழக அரசு கடந்த 50 ஆண்டுகளாக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு காரணங்களால் இத் திட்டம் கிடப்பில் போடப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவேற்ற தமிழக பொதுப் பணித் துறை, வருவாய்த் துறையினர், நீர்த்தேக்கம் அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்து, திட்டத்தைச் செயல்படுத்த ரூ. 9 கோடியில் திட்ட வரையறை தயார் செய்தனர். பின்னர், தமிழக அரசின் ஒப்புதலுடன், மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
கடந்த 2005- 06 ஆம் ஆண்டு மீண்டும் தமிழக அரசு இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான திட்ட மதிப்பீட்டை ரூ. 11 கோடியாக உயர்த்தி, மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பி, மத்திய அரசிடமிருந்து சின்னமுட்லு நீர்த்தேக்கத்துக்கு நிதி கோரப்பட்டது.
இதனிடையே, முறையாக நீர் ஆதாரம், மண்ணின் தன்மை, பொதுமக்களின் கருத்துக் கேட்பு உள்ளிட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், எந்தவிதக் காரணமும், விளக்கமும் அளிக்காமல் சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டம் கைவிடப்பட்டதாகக் கடந்த ஆண்டு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து வேப்பந்தட்டை வட்டார நெல் ஆர்வலர்கள் குழுத் தலைவர் கு. வரதராசன் கூறியது:
சின்முட்லு நீர்த் தேக்கத் திட்டம் கடந்த 1973 ஆம் ஆண்டு முதல் நிரைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில், அப்போதைய திமுக அரசு இந்தத் திட்டத்தை நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு செய்தது. ஒரு சில காரணங்களால் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.
சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவேற்றினால், அரும்பாவூர், மளையாளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பலனடைவதோடு, அந்தப் பகுதியில் நீலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.
எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தை நிறைவேற்ற தற்போதைய திமுக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
தமிழக அரசின் இந்த அறிவிப்பால், 50 ஆண்டு கால நீர்த்தேக்கத் திட்டம் கனவாகி விட்டதால், விவசாயிகளும், பொதுமக்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர். மேலும், கைவிடப்பட்ட இந்தத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த, பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட முடிவெடுத்துள்ளதால், இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அந்தப் பகுதி மக்களிடையே ஆதரவு வலுத்து வருகிறது.
எனவே, மத்திய, மாநில அரசுகள் அந்தப் பகுதி பொதுமக்கள், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மறுபரிசீலனை செய்து, சின்னமுட்லு நீர்த் தேக்கத் திட்டத்தை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
மேலும், இயற்கை எழில் சூழ்ந்து அந்தப் பகுதியில் உள்ள எட்டெருமை பாலி அருவியில் குழந்தைகள் முதல் பெரியவர் வரையிலான அனைத்துத் தரப்பினரும், அருவிக்குச் சென்று நீராடும் வகையில், அந்தப் பகுதியை சுற்றுலாத் தலமாக அறிவித்து, போதுமான சாலை, போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும் எனப் பொதுமக்களும், இளைஞர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...