நவதானிய சாகுபடி ஊக்குவிக்கப்படுமா?
பெரம்பலூர், நவ. 8: தமிழகத்தில் நாளுக்கு நாள் மாறி வரும் நாகரிக உணவுப் பழக்க வழக்கங்களால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில், ஊட்டச்சத்து நிறைந்த பழங்கால உணவு முறையின் அவசியத்தை


பெரம்பலூர், நவ. 8: தமிழகத்தில் நாளுக்கு நாள் மாறி வரும் நாகரிக உணவுப் பழக்க வழக்கங்களால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில், ஊட்டச்சத்து நிறைந்த பழங்கால உணவு முறையின் அவசியத்தை இளைய சமுதாயத்தினர் மறக்காமல் கடைப்பிடிக்க வலியுறுத்தும் வகையில், நவதானிய சாகுபடியை ஊக்குவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த காலத்தில் நமது பிரதான உணவு வகைகளாக இருந்து வந்த, நாட்டின் பழைமையான பயிர் வகைகளான தினை, சாமை, சோளம், வரகு, கேள்வரகு, பாதசோளம், மக்காசோளம், கம்பு, கேழ்வரகு மற்றும் இதர பயிர் வகைகளின் சாகுபடியானது நாளுக்கு நாள் படிப்படியாகக் குறைந்து, தற்போது நெல்லில் இருந்து பெறப்படும் அரிசியே முக்கிய உணவாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
விவசாயிகளும் சிறுதானிய பயறு வகைகளைப் புறக்கணித்து, பருத்தி, நெல், கரும்பு உள்ளிட்ட பணப் பயிர்களையே சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால், ஊட்டச்சத்து நிறைந்த சோளம், இருங்கு சோளம், வரகு, கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட பயிர்களின் உற்பத்தி குறைந்து, தற்போது நாட்டு மருந்துக் கடைகளிலும், மாட்டுத் தீவனம் விற்பனை நிலையங்களிலும் காட்சிப் பொருளாகக் காணப்படுகிறது.
ஊட்டம் தரும் இந்த உணவு தானியங்களை, ஒரு சிலர் மருந்து பொருளாக வாங்கி பயன்படுத்தி வரும் நிலை உருவாகியுள்ளது. நமது முன்னோர்கள் 100 வயதைக் கடந்து வாழ்வதற்கு வழிவகை செய்த, சத்து நிறைந்த தானியங்களைப் புறக்கணித்து, அரிசியை அதிகளவு பயன்படுத்துவதால், நீரிழிவு உள்ளிட்ட நோய் ஏற்படக் காரணமாகிறது என்று கூறும் மருத்துவர்கள், சிறு தானிய உணவு வகைகளை உள்கொள்ள, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர்.
மேலும், கால்சியம், புரதம், இரும்புச் சத்து நிறைந்துள்ள சிறு தானியங்களுடன், கோதுமையைச் சேர்த்து வந்தால், எதிர்கால சந்ததியினர் ஆரோக்கியமான வாழ்வு பெற அடித்தளமாக அமையும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
இதுபோன்ற உணவுப் பழக்க, வழக்கங்களை மறந்து வந்தாலும், நகர்ப்புறங்களில் உள்ள உணவு விடுதிகளில் தற்போது, கேழ்வரகு உள்ளிட்ட தானியங்களால் தயாரிக்கப்படும் உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் அவசியத்தை அறிந்த ஒரு சிலர் காப்பி, டீ போன்றவற்றைத் தவிர்த்து, சாலை ஓரங்களில் கிடைக்கும் கம்மங்கூழ், கேழ்வரகுக் கூழை வாங்கி உள்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் ஆர். ராஜாசிதம்பரம் கூறியது:
கடந்த காலங்களில் சாகுபடி செய்யப்பட்ட கேழ்வரகு, இருங்கு சோளம் உள்ளிட்ட பயிர் வகைகளுக்கு தற்போது, கட்டுப்படியான விலை கிடைக்காததால், ஒரு சில கிராமங்களில் மிகக் குறைந்த அளவிலேயே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
மக்காசோளம், பருத்தி ஆகிய பயிர்களைப் போல, நவதானிய சாகுபடியை அதிகரிக்கப்பதற்கு உயர்தரமான புதிய ரகத்தை கண்டறிந்து, அந்த ரகங்களை விவசாயிகளிடம் அறிமுகப்படுத்த வேண்டும். மேலும், பருத்தி, மக்காசோளத்துக்கு அமைக்கப்பட்ட மாதிரிப் பண்ணைகள் போல, மாதிரி விவசாயப் பண்ணைகள் அமைக்க வேண்டும். பூச்சி தாக்காத ரகங்களை அறிமுகப்படுத்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மேலும், நவதானியப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆரம்பம் முதல் அறுவடை வரை விலை நிர்ணயம் செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நவதானியப் பயிர்களின் மகசூல் அதிகரிப்பதோடு, விவசாயிகளும் இதுபோன்ற பயிர்களைச் சாகுபடி செய்ய முன்வருவார்கள் என்றார் அவர்.
எனவே, தமிழக அரசு இதுபோன்ற தானியங்களுக்கு நிரந்தரமான கொள்முதல் விலையை நிர்ணயம் செய்தால், தானியங்களின் உற்பத்தி பெருக வாய்ப்பு உள்ளது. விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து வருவதாகக் கூறும் மத்திய, மாநில அரசுகள் நலிந்து வரும் நவதானிய பயறு வகைகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உணவுப் பழக்க வழக்கங்களில் ருசி, நாகரிகத்துக்கு முன்னுரிமை தராமல், ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு பயன்படுத்தினால், வளமான மனித சமுதாயம் உருவாகும் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...